எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு: தீர்ப்பைத் தள்ளிவைக்கக்கோரும் நஜிப்பின் விண்ணப்பம் தள்ளுபடி

எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் சொந்தமான நான்கு கோடியே இருபது லட்சம் வெள்ளியைக் கையாடியதாக நஜிப் துன் ரசாக் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி டிசம்பர் 8ஆம் தேதி வழங்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அத்தீர்ப்பை தள்ளிவைக்கும்படி நஜிப் செய்திருந்த விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது என்று அவரின் தற்காப்புத் தரப்பு வழக்கறிஞருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று துணைப் பதிவாளர் முகமட் கைரி ஹரூண் நேற்று தெரிவித்தார். ‘தயவு செய்து டிசம்பர் 8ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆகுங்கள்’ என்று நஜிப் தரப்பிடம் கைரி குறிப்பிட்டார். முன்னாள் பிரதமருமான நஜிப்பின் விண்ணப்பம் மீது டிசம்பர் 8ஆம் தேதி வழங்கப்படவுள்ள தீர்ப்பை ஒத்தி வைக்கக்கோரி அவரின் வழக்கறிஞர்கள் நேற்றுமுன்தினம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் முறையிட்டிருந்தனர். டிசம்பர் 13 ஆம் தேதிக்கும் டிசம்பர் 17ஆம் தேதிக்கும் இடையில் அத்தீர்ப்பை வழங்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். டிசம்பர் 5ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பவிருக்கும் நஜிப், டிசம்பர் 12ஆம் தேதி வரை தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதால் தீர்ப்பு நாளை தள்ளி வைக்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். நஜிப்பின் மகளுக்கு அண்மையில் சிங்கப்பூரில் பிரசவம் நடைபெற்றது. அவரைக் காண்பதற்காக நஜிப் அங்கு சென்றுள்ளார். எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிதி தொடர்பில் அதிகாரத் துஷ்பிரயோகம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பை ரத்து செய்யக்கோரி நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த ஏழு குற்றங்களுக்காக நஜிப்புக்குக் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இருபத்தோரு கோடி வெள்ளி அபராதமும் விதித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =