
சமூக வலைத் தளங்களில் பரவியதைப் போல் சிரம்பான் துவாங்கு ஜாஃபார் பெரிய மருத்துவமனையின் 3பி வார்ட்டில் எலி சுற்றித் திரிந்த சம்பவத்தைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநிலச் சுகாதாரத் துறை உடனடி விசாரணை மேற்கொண்டுச் சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்ததாக அதன் இயக்குநர், டத்தோ டாக்டர் ஹார்லினா அப்துல் ரஷிட் தெரிவித்தார்.
இதற்கு தினசரி அட்டவணையில் சுத்தப்படுத்தும் பணிகள், குப்பைகள் சேகரிப்பை அதிகரிப்பது மட்டுமின்றி மருத்துவமனையின் சுற்றுப் பகுதிகள் குறிப்பாக வார்டுகளில் சுத்தப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அதே சமயம் எலிகள் அடிக்கடி வரும் பகுதிகளை அடையாளம் கண்டு அதிகப்படியானப் பொறிகளைப் பொருத்துவது மட்டுமின்றிப் பொருத்தமான அணுகுமுறைகளைப் பயன்படுத்தித் திட்டமிட்டத் தடுப்புப் பராமரிப்புச் சோதனை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் பணிகளையும் மேற்கொள்ள மருத்துவமனைப் பராமரிப்பு ஒப்பந்தத் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்துத் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு பூச்சிக் கட்டுப்பாட்டுப் பிரிவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருத்துகளைத் தெரிவித்ததற்கு மாநிலச் சுகாதாரத் துறை நன்றி தெரிவித்துக் கொள்வது மட்டுமின்றி மருத்துவமனைக்குச் சிகிச்சைப் பெற வரும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதிப்படுத்த எப்போதும் முயற்சிச் செய்யும் என்று ஓர் அறிக்கையில் டாக்டர் ஹார்லினா அப்துல் ரஷிட் குறிப்பிட்டார்.