எம்டியூசி தலைவர் தேர்தலில் இழுபறி

நேற்று முன்தினம் நடைபெற்ற மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்கள் சரிசமமான வாக்குகள் பெற்று முடிவு இழுபறியில் முடிந்தது.
தலைவர் பதவிக்குத் தேசிய பெட்ரோலிய மற்றும் ரசாயன தொழில்துறை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த நடப்புத் தலைவர் அப்துல் ஹலிம் மன்சோரை எதிர்த்து தேசிய தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த முகமட் ஜபார் அப்துல் மஜிட் போட்டியிட்டதில் இருவருக்கும் தலா 136 வாக்குகள் கிடைத்தன.
இம்மாதிரியான இழுபறி நிலைமை எம்டியூசியின் 71 ஆண்டுகால வரலாற்றில் நடப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.
இது பற்றி சங்கங்களின் பதிவகத்துடன் கலந்தாலோசித்து முடிவு காணப்படும் என்று புதிய தலைமைச் செயலாளர் கமாருல் பஹாரின் மன்சோர் தெரிவித்தார். அது வரை, புதிய துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் சேவைத் துறை தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முகமட் எஃபெண்டி அப்துல் கனி இடைக்காலத் தலைவராக செயல்படுவார்.
தலைமைச் செயலாளர் பதவிக் கான தேர்தலில் கமாருலுக்கு 143 வாக்குகளும் நடப்புத் தலைமைச் செயலாளர் ஜே.சோலமனுக்கு 98 வாக்குகளும் போக்குவரத்து உபகரண தொழில்துறை சங்கத் தைச் சேர்ந்த கோலப் கிருஷ்ணன் என்பவருக்கு 132 வாக்குகளும் கிடைத்தன.
இத்தேர்தல் கூட்டத்தில் எம்டி யூசியில் மொத்தப் பேராளர்களான 507 பேரில், 400 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கோவிட்-19 நோய்த் தொற்றின் காரணமாக சரவாக் பேராளர்கள் வர முடியாமல் போனது. இதனிடையே, ஆர்ஓஎஸ்ஸின் விதிமுறைக்கு முரணாக இத்தேர்தல் நடப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டுமென்று எம்டியூசியில் உறுப்பியம் பெற்றுள்ள 4 சங்கங்கள் இக்கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கைத் தாக்கல் செய்திருந்தன.
அதில் ஆர்ஓஎஸ் தலையிட்டு தேர்தலைக் கண்காணிக்க வேண்டுமென்று அச்சங்கங்கள் கேட்டுக் கொண்டன. அந்த வழக்கின் மேலாண்மை செப்டம்பர் 29இல் செவிமடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 17 =