எம்சிஓ காலத்தில் பிக் போஸ் உணவகத்தின் அன்னதானம்

தற்போது அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தில் (எம்சிஓ) வசதி குறைந்த 100 பேருக்கு தினந்தோறும் இலவச உணவை பிக் போஸ் வாழையிலை உணவக உரிமையாளர் எம்.மோகனசுந்தரம் (37) என்பவர் வழங்கி வருவது பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த இலவச அன்னதானம் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் பொதுமக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்பதால், இந்த அன்னதானத்தை எம்சிஓ முடியவிருக்கும் ஜனவரி 26ஆம் தேதி வரை தொடரப் போவதாக மோகனசுந்தரம் தெரிவித்தார். எம்சிஓ உத்தரவு 26ஆம் தேதிக்குப் பின்னரும் தொடருமானால், இந்த அன்னதானமும் தொடர்ந்து நடத்தப்படும். இந்த அன்னதானத்தைக் கடந்தாண்டு அமலுக்கு வந்த முதல் எம்சிஓ காலத்திலும் தாம் வழங்கியதாகவும், தமக்கு லாபம் முக்கியமில்லை என்றும் பசித்தோருக்கு உணவளிப்பதே தமது நோக்கமென்றும் அவர் குறிப்பிட்டார். தாம் வழங்கும் அன்னதானத்தில் வெள்ளை சோறு, முட்டை சம்பால், வறுத்த மீன், கோழி இறைச்சி, காய்கறிகள், குழம்பு முதலியை அடங்கும். எனினும், தினந்தோறும் உணவு வகைகள் மாற்றப்படும். மதியம் மணி 3லிருந்து மாலை மணி 5 வரை உணவு தயாரிக்கப்பட்டு, மாலை மணி 6லிருந்து அன்னதானம் விநியோகிக்கப்படும்.இந்த அன்னதானத்துக்கு நாளொன்றுக்கு 10 கிலோ அரிசி, 100 மீன்கள், 100 துண்டு கோழி இறைச்சி, காய்கறிகள் வாங்கப்படுவதாகவும் தமது ஊழியர்கள் 12 பேர் அந்த உணவைத் தயாரிக்க உதவுவதாகவும் அவர் தெரிவித்தார். அன்னதானத்தைப் பெற்றுப் பயனடையும் டி.புஸ்பமலர்(51) கூறும் போது, அன்னதானம் பெரும் உதவியாக இருப்பதாகவும், வேலையிழந்து வருமானமின்றி இருப்போரின் பசியை ஆற்றி வருவதாகவும் தெரிவித்தார். நிபோங் திபாலில் இருக்கும் கோ செங் வெங்(65) என்பவர், தாமும் அன்னதானத்தைப் பெற்று வருவதாகவும், தாம் தனியாக வாழ்வதால் அது பேருதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சில சமயங்களில் மோகனசுந்தரம் தம்மை தொலைபேசியில் அழைத்து, உணவைப் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =