என்னை விசாரிக்க வேண்டுமென்றால் முஹிடினையும் விசாரியுங்கள்

இந்த நாட்டின் சொத்து விற்பனைக்கும் நிதி அமைச்சுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாட்டின் கடன் உயர்ந்ததற்கும் நிதியமைச்சுக்கு துளியளவும் தொடர்பில்லை. நாட்டின் கடன் குறித்து அமைச்சரவையே முடிவு செய்கிறது என்று முன்னாள் நிதியமைச்சரும் ஜசெக தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் தெரிவித்தார்.
நாட்டின் கடன் உயர்ந்ததைக் குறித்து சம்பந்தமே இல்லாமல் குற்றச்சாட்டைச் சுமத்தி இன அரசியலை உருவாக்க விரும்புகிறார் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹஸான் என்று லிம் குவான் எங் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கஸானா நேஷனல் பெர்ஹாட்டில் நான் ஒரு வாரிய உறுப்பினர் பதவி அல்லது இயக்குனர் பொறுப்பு உள்ளிட்ட எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை. எனவே தாபோங் ஹஜி நிதி விவகாரத்திற்கு நான்தான் காரணம் என்று முகமட் ஹஸான் அம்னோ கூட்டத்தில் பேசுவது இனரீதியில் ஓர் எதிர்ப்பை உருவாக்கும் நோக்கத்தில்தான் என்றும் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கஸானா நேஷனல் பெர்ஹாட்டை நிதி அமைச்சில் இருந்து பிரதமர் துறைக்கு மாற்றியிருக்கிறது. இதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே நாட்டின் கடன் கிட்டதட்ட 1,400 கோடி வெள்ளியாக அதிகரித்திருக்கிறது. மேலும் அரசாங்கத்தின் சில சொத்துடைமைகள் விற்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து முன்னாள் நிதியமைச்சரான தம்மிடம் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் முகமட் ஹஸான் வலியுறுத்தியதை லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.
அதேபோல் தம்மீது விசாரணை நடத்துவது அவசியம் என்று முகமட் ஹஸான் கருதினால் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீதும் விசாரணை நடத்த வேண்டும். காரணம் முகமட் ஹஸான் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் முடிவெடுத்த பக்காத்தான் அரசாங்கத்தில் அவர் ஓர் அமைச்சராக இருந்து அவருடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
எனவே டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீது விசாரணை நடத்துவதும் முக்கியமானதே என்றும் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
தாபோங் ஹஜி, கஸானா நேஷனல், பெட்ரோனாஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மீது முடிவெடுக்கப்பட்ட விவகாரத்திற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னதாக பிரதமர் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த முஜாஹிட் யூசோப் ராவா தான் தாபோங் ஹஜி விவகாரத்தில் பதிலளிக்க வேண்டியவர் என்றும் லிம் குவான் எங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =