என்னை கைது செய்யக் கோரும் பாஸ் கட்சி எம்பி மீது சட்ட நடவடிக்கை

1

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தமக்குத் தொடர்புள்ளதாகக் கூறி தம்மை கைது செய்ய கூறியிருக்கும் பாஸ் கட்சி எம்பி டத்தோ முகமட் கைருடின் அமான் ரஸாலிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி தமது வழக்கறிஞரை பணித்துள்ளார்.
நாட்டில் இனப் பதற்றத்தை தூண்டும் வகையில் அவரது இந்த அவதூறு அறிக்கை இருப்பதாக அவர் சொன்னார். கோலநெருஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நான் ஆணையிட்டிருக்கிறேன்.
பேராசிரியர் ராமசாமியை கைது செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான 20 காரணங்களை அந்த எம்பி வெளியிட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் நாட்டில் இனப் பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ராமசாமி பேசி வருகிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த நாட்டில் பல்வேறு இனங்களுக்கிடையில் பகைமையை உண்டாக்கும் வகையில் பேசி வரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸக்கீர் நாயக்கை முகமட் கைருடின் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று ராமசாமி வினவினார். என்னைக் கைது செய்ய அவரால் 20 காரணங்களைக் காட்ட முடியும் என்றால், ஸக்கீர் ஏன் கைது செய்யப்பட வேண்டும் என்று என்னாலும் 20 காரணங்களைக் காட்டமுடியும். நான் இதுவரை வெளியிட்ட அறிக்கைகளின்படி நிற்கிறேன். பாஸ் தலைவரின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் என்னைக் கைது செய்யட்டும். ஸக்கீருடன் சேர்ந்து செயல்படும் பாஸ் கட்சி பற்றியும் 1எம்டிபி நிதியைப் பெற்ற அதன் நிலை பற்றியும் விசாரிக்க வேண்டும். முகமட் கைருடினும் நிதி பெற்றிருக்கிறாரா என்பதை விசாரிக்க வேண்டும் என்றார் அவர். கடந்த 2009இல் 26 ஆண்டுகால இலங்கைப் போர் முடிந்த கையோடு விடுதலைப் புலிகள் இயக்கமும் செயலற்றுப் போனது. எனவே அதற்கு நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறுவது அடிப்படையற்றது. அதை உயிரூட்டி என்ன செய்யப்போகிறோம் என்று அவர் வினவினார். இதனிடையே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிரூட்ட முயன்றனர் என்று கைது செய்யப்பட்டுள்ள 2 ஜசெக உறுப்பினர்கள் உட்பட எழுவர் மீது குற்றம் இருந்தால் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுங்கள் என்றும் ராமசாமி கூறினார். எதற்காக சொஸ்மாவை பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக பீனல் சட்டம் போதுமே. இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கலாம். இலங்கைத் தமிழர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?
இங்குள்ள மலாய் முஸ்லிம்கள் பாலஸ்தீனியர்களுக்காகவும் ரோஹிங்யா மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் போது, இலங்கைத் தமிழ் மக்களுக்காக அவர்களின் துயரத்தில் ஈடுபடுவது குற்றமா? இலங்கைத் தூதரகத்தைத் தாக்க முயன்றார்கள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆதாரம் இருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அதை உயிரூட்ட முயற்சிகள் நடக்கிறது என்பதெல்லாம் அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு.
தேடப்படும் குற்றவாளியான ஸக்கீரை விமர்சிப்பவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற திட்டமிட்ட பிரசாரம் நடக்கிறது. இந்த கைது நடவடிக்கையும் அதைத்தான் காட்டுகிறது என்றார் அவர்.

1 COMMENT

  1. மலேசிய பாசு அரசியல் கட்சி இப்போது அதன் பங்காளி கட்சியான அம்னோ இவை இரண்டு கட்சிகளுடன் ம.இ.காவும் கை கோர்த்துக் கொண்டு தேவை இல்லாமல் மக்களை அச்சுருத்திக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே நம்பிக்கை கூட்டணியின் மீது பல தவறான குற்றங்களை சுமத்தி கவால் துறையினரை திசை திருப்பி கொண்டிருக்கிறன.

    அதில் ஒன்று தான் சொசுமா கைது நடவடிக்கை. இந்த கைது பட்டியலில் தற்போது பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமியையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் என்று புகார் செய்துள்ளனர்.
    ஆனால் இந்தியாவில் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் சக்கீர் நாயக்கிற்கு மலேசியாவில் அரசியல் அடைக்கலம் வழங்கியுள்ளனர்.இது ஏன்? ஆகையால் இது குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கவையில் குரல் எழுப்ப வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 13 =