எதிர்வாதம் செய்ய நஜிப்பிற்கு அழைப்பா?

எஸ்ஆர்சி நிறுவன நிதி முறைகேடு தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் மீதான 57 நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின்னர் அரசு தரப்பு தனது விசாரணையை முடித்துக் கொண்டது. நஜிப்பை எதிர்வாதம் செய்ய அழைப்பதா என்பது குறித்து வரும் நவம்பர் 11ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும். ஊழல் தடுப்பு ஆணையத்தின் புலன் விசாரணை அதிகாரி ரோஸ்லி ஹுசைன் 57ஆவது சாட்சியாக சாட்சியம் அளித்தப் பின்னர் நீதிமன்றம் இந்த முடிவைச் செய்தது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நஜிப்புக்கு எதிராக இந்த விசாரணை தொடங்கியது. அரசு தரப்பு தனது விசாரணையை முடித்துக் கொண்டது. ஒருவேளை, எதிர்வாதம் செய்ய நஜிப் அழைக்கப்பட்டால் 66 சாட்சிகளை நாங்கள் நீதிமன்றம் கொண்டு வருவோம் என சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ், நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலியிடம் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 24ஆம் தேதி அரசு தரப்பும் எதிர் தரப்பும் தங்கள் எழுத்து மூலமான வாதத் தொகுப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். அக்டோபர் 15ஆம் தேதி இரு தரப்பும் தங்களுக்குள் கேள்விகளை பரிமாறிக் கொள்ள வேண்டும். அக்டோபர் 22, 23ஆம் தேதிக்குள் வாய்மொழி வழியான வாதத் தொகுப்பும் விளக்கமும் நடந்தப் பின்னர் நவம்பர் 11ஆம் தேதி நஜிப்பை எதிர்வாதம் செய்ய அழைப்பதா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் என்றார் அவர்.
அப்படி அவர் அழைக்கப்பட்டால் டிசம்பர் 2 முதல் 19ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும். இந்த 57 நாள் விசாரணையில் அரசு தரப்பு சந்தேகமற தனது வழக்கை நிரூபித்திருக்கிறது என்று அரசு தரப்பு விசாரணையாளர் வி.சிதம்பரம் கூறினார்.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையிலான தேவையான ஆதாரங்கள், சாட்சியங்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம் என்றார் அவர்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தில் 42 மில்லியன் வெள்ளியை நிதி முறைகேடு செய்ததாக நஜிப் (வயது 66) குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − four =