எதிர்கால வேலைத் திட்டத்தின் வழி 45,000 பேருக்கு வேலை கிடைத்தது

என் எதிர்கால வேலை வாய்ப்பு இணைய தளத்தின் மூலம் 44 ஆயிரத்து 940 பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மை பியூச்சர் ஜோப் என்ற இணைய தளத்தின் மூலமாக, வேலைக்கான 95,161 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களில் 20 வயதிலிருந்து 29 வயது மதிக்கத்தக்க பல்கலைக்கழக பட்டதாரிகளும், பள்ளிப்படிப்பு முடித்த மாணவர்களும் அடங்குவரென மனிதவள துணையமைச்சர் அவாங் ஹஷிம் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி, என் எதிர்கால வேலை வாய்ப்புச் சந்தையை சொக்சோ மற்றும் ஊழியர் சமூக நல வாரியம் நடத்தியது. அதில் 541 முதலாளிகள் பங்கேற்ற வேளையில் 4,060 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக அவர் சொன்னார்.
பொதுச் சேவைத்துறை வேலையிழந்தவர்களுக்கு, அரசாங்க நிறுவனங்களில் வேலை தேடித்தரும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் கோவிட் -19 பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும் துணையமைச்சர் அவாங் சொன்னார்.
தற்போது நிர்வாகம், தொழிற்சாலை, கணக்காய்வு உட்பட குறிப்பிட்ட பத்து துறைகளில் வேலைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என உலக பொருளாதார அமைப்பு எச்சரித்திருக்கும் நிலையில் தகவல் தொடர்புத் துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி வரையில், மொத்தம் 90,470 பேர் வேலையிழந்திருப்பதாக, சொக்சோ தகவல் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here