எதற்கும் மனம் தளராத தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்: விஜயகாந்த்

0

தே.மு.தி.க.வின் 20-வது ஆண்டு கொடிநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் 118 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் நாளை(புதன்கிழமை) கட்சிக் கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி கட்சி தொண்டர்களை விஜயகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.

இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களுக்கு எழுதும் கடிதம் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2000-ம் ஆண்டு நம் ரசிகர் மன்றத்திற்கு கொடி வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று 12-02-2000 அன்று சிவப்பு, மஞ்சள், கருப்பு, என்ற மூவர்ணத்துடன் நீலநிறத்தில் ஜோதியை கையில் ஏந்திய நம் கொடியினை அறிமுகப்படுத்தினோம்.

கொடியை அறிமுகப்படுத்தியவுடன் பட்டி, தொட்டி எங்கும் நம் கொடி பட்டொளி வீசி பறக்கச் செய்து, இதுவரை எந்த கட்சியும் கண்டிராத இமாலய வெற்றிக்கு இணையாக, குறுகிய காலத்தில் நம் கொடி அனைத்து கிராமங்களிலும் ஏற்ற செய்த பெருமை நம் தொண்டர்களையே சேரும்.

கடந்த 2005-ம் ஆண்டு நமது ரசிகர் மன்றம், தே.மு.தி.க.வாக மாறிய போதும், ரசிகர் மன்றக் கொடியை கட்சி கொடியாக மாற்றி, நம் கொடிகள் இல்லாத கிராமமே இல்லை என்ற சாதனை படைத்த என் உயிரிலும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த நேரத்தில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும், துரோகங்களையும், சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் சந்தித்த போதும், எதற்கும் மனம் தளராத என் படை தளபதிகளாக(தொண்டர்கள்) இருப்பவர்களே என்னுடன் உறுதுணையாக, நம்பிக்கையாக, பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களால்தான் என்றுமே நமது கட்சி வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது.

இனிவரும் காலங்களிலும் லஞ்சம், ஊழலற்ற, நேர்மையான, தைரியமான, அனைவருக்கும் சமமான வாழ்வு அளிக்கும் நம் தமிழகத்தை உருவாக்க வீறுநடை போடுவோம். எந்த நோக்கத்திற்காக நம் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதோ, நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம் என்று கொடி நாள் சூளுரை ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =