எடப்பாடி பகுதியில் தொடர் மழை – நிலக்கடலை அறுவடை பணிகள் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை கொட்டியது. இந்த மழையால் புதன் கிழமை கூடும் வாரசந்தை மற்றும் தீபாவளி பண்டிகைக்காக அமைக்கபட்டிருந்த தற்காலிக கடைகள் உள்ளிட்டவை பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின.

மாலை நேரத்தில் பெய்த கனமழையால் அலுவல் முடிந்து வீடுதிரும்பும் பணியாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகினர். பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் மழைநீர் தேங்கியதால், பேருந்து ஓட்டுனர்களும், பயணிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

திடீரென கொட்டிய கனமழையால், கடைவீதி, பஜார் தெரு உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மிகுந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர்.

எடப்பாடி சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக பெய்து வரும் தொடர் மழையால், இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை அறுவடைப்பணிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளான கொங்கணாபுரம், வெள்ளரிவெள்ளி, சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில், அதிக அளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகின்றது. குத்துக்கடலை, பட்டாணி வகை மற்றும் கொடிகாய் ராக நிலக்கடலைகள், இப்பகுதியில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் ஜுலை மாதத்தில் பயிரிடப்படும் நிலக்கடலை செடிகள், அக்டோபர், நவம்பர் மாதத்தில் அறுவுடை செய்யப்படுவது வழக்கம்,

இந்நிலையில் நிகழ்வாண்டில் கூடுதல் மழைப்பொழிவு இருந்தும், உரியகாலத்தில் மழைபொழிவு இல்லாமல் போனதும் மேலும் பருவகாலம் கடந்து பெய்த தொடர் கனமழையாலும், நிகழ்வாண்டில் இப்பகுதியில் நிலக்கடலை விளைச்சல் சற்றே குறைந்துள்ளதாகவும், அண்மையில் பெய்த தொடர் மழையால் அறுவடை தருணத்தில் இருந்த, நிலக்கடலைச்செடிகள், அழுகல்நோய்தாக்குதலுக்கு உள்ளானதாகவும், மேலும் சில இடங்களில் அறுவடை செய்யப்பட்டு கால்நடைத்தீவனமாக, பதப்படுத்தப்பட்டிருந்த நிலக்கடலை செடிகள் தொடர் மழையால் சேதம் அடைந்ததாகவும் இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

தற்போது இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நிலக்கடலைபட்டாணி ரகம் கிலோ 27 ரூபாய் வரையிலும், கொடிக்காய் ரகம் கிலோ ஒன்று 22 ரூபாய் வரையிலும் விலைபோவதாகவும், தற்போது இப்பகுதியில் தொடர் மழைப்பொழிவு இருப்பதால், அறுவடை செய்யத நிலக்கடலைகளை உலரவைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்திட இயலாமல், வியாபாரிகள் கேட்கும் விலைக்கு விற்பனை செய்திட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி நிலக்கடலை விவசாயிகள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =