எங்கள் பிரதமர் அன்வாரே!

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது.
கடந்த 60 ஆண்டுகளாக அசைக்க முடியாமல் இருந்த தேசிய முன்னணி அரசாங்கம் முதல் முறையாக கடந்த பொதுத்தேர்தலில் தோல்வி கண்டு ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்தது.
துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையில் இரண்டு ஆண்டுகள் சீராக நடைபெற்றுக் கொண்டிருந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி இவ்வாண்டு பிப்ரவரி மத்தியில் அதாவது 22 மாதங்களில் கவிழ்ந்தது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து பக்காத்தான் ஆட்சி பறிபோனது.
மேலும், கெஅடிலான் கட்சியில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் துரோகச் செயலும் ஆட்சிக் கவிழ்வுக்கு முக்கிய காரணமாகும்.
இருப்பினும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தற்போது மீண்டும் புதிய எழுச்சியைப் பெற்றுள்ளது.
நாட்டின் அடுத்த பிரதமர் என்று வர்ணிக்கப்படும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் வரும் பொதுத்தேர்தலிலும் பக்காத்தான் ஹராப்பானின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று ஆதரவாளர்கள், தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாங் நாடாளுமன்றத் தொகுதி எப்போதும் பக்காத்தான் ஹராப்பான் கோட்டை என்பதை நிரூபிக்கும் வேளையில், கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு முழு ஆதரவு வழங்குவோம் என்று அம்பாங் கெஅடிலான் தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள் வெளியேறி விட்டனர். இவர்களின் விலகலினால் பக்காத்தான் ஹராப்பான் இப்போது தூய்மை பெற்று வலுவுடன் காட்சியளிக்கிறது என்று அம்பாங் கெஅடிலானைச் சேர்ந்த ஆசிரியர் சுப்பிரமணியம், அறம் நடேசன் தமிழ்மலரிடம் தெரிவித்தனர்.
கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் தேவையில்லை. அம்பாங் கெஅடிலானில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணமாக இருக்கின்றனர். இவர்களின் வருகையால் கெஅடிலான் கட்சி மீண்டும் வலுவுடன் இருக்கிறது என்று சுப்பிரமணியம், அறம் நடேசன் குறிப்பிட்டனர்.
கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்களுக்கு வரும் பொதுத்தேர்தலில் பாடம் புகட்டுவோம். இவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் வீழ்த்திக் காட்டுவோம். அம்பாங் நாடாளுமன்றம் எப்போதும் பக்காத்தான் ஹராப்பான் கோட்டையாக விளங்கும்.
எங்கள் பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் மட்டுமே என்று இருவரும் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.
சிலாங்கூர் காப்பார் கெஅடிலான் கிளைத் தலைவர்களான டத்தோ மணிவண்ணன், சேகரன் கூறுகையில் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருவதற்கு பாடுபடுவோம். மேலும், வரும் பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிக்கும் கடுமையாக உழைப்போம் என்று இருவரும் தெரிவித்தனர்.
உலக அரங்கில் பேசப்படும் ஓர் உன்னதத் தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குகிறார். இவர் சந்தித்தப் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமில்ல. இரண்டு முறை சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்.
இவருக்கு துரோகம் இழைத்தவர்கள் எல்லாம் இன்று செல்லாக் காசாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் செல்வாக்கு
இல்லை.
வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்த துரோகிகள் வரும் பொதுத்தேர்தலில் காணாமல் போவார்கள் என்று சேகரன், டத்தோ மணிவண்ணன் தெரிவித்தனர்.
உலகத் தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்பதற்கு எல்லா தகுதிகளையும் பெற்றிருக்கிறார் என்று சமூக சேவையாளர் வெங்கட் சுப்ரமணியம் தெரிவித்தார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக பதவியேற்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்கள் மனம் கவர்ந்த தலைவராக இவர் விளங்குகிறார்.
ஆகவே, பிரதமர் வேட்பாளர் பட்டியலில் மலேசியர்களின் முதல் தேர்வாக இவர் விளங்குகிறார். இவர் பிரதமராக வர வேண்டும் என்பதே என் கனவு என்று வெங்கட் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
புக்கிட் கியாரா மண்ணின் மைந்தரான மனோ பரமசிவம் கூறுகையில், என் தேர்வு டத்தோஸ்ரீ அன்வார் மட்டுமே என்றார். கடந்த பொதுத் தேர்தலில் மலேசியர்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள்.
ஆனால், நம்பிக்கைத் துரோகத்தினால் இந்த ஆட்சி 22 மாதங்களில் கவிழ்ந்தது பெருத்த வேதனையாகும். இருப்பினும் மலேசியர்களின் மனம் கவர்ந்த தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளங்குகிறார். இவரின் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை மக்கள் விரும்புகிறார்கள் என்று மனோ பரமசிவம் தெரிவித்தார்.
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவைச் சேர்ந்த இளங்கோ கூறுகையில், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் பிரதமராக வரவேண்டும். பிரதமராகப் பதவியேற்பதற்கு அவருக்கு எல்லா தகுதிகளும் உள்ளன. துன் டாக்டர் மகாதீர் மனது வைத்திருந்தால் இன்று டத்தோஸ்ரீ அன்வார்தான் பிரதமராக இருந்திருப்பார். சில புல்லுருவிகள் தங்களின் சுயநலச் சதியால் அவர் பிரதமராக வருவதை தடுத்து விட்டார்கள். இருப்பினும் அவர்தான் அடுத்த பிரதமராக வருவதற்கு சரியானவர் என்பதோடு மக்களின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது என்றார் அவர். டத்தோஸ்ரீ அன்வாரின் விசுவாசியான இளம் தொழிலதிபர் வடிவேல் சுப்பிரமணியம் கூறுகையில், என் ஆதரவு எப்போதும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு மட்டுமே. வரும் பொதுத்தேர்தலிலும் அவர் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெற நானும் பாடுபடுவேன் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =