எங்களுக்கான சம்பளம், உறுதிமொழி, அனுகூலம் என்னானது? அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும் முன்னாள் தமிழ் நேசன் பணியாளர்கள் மறியல்

0

கோலாலம்பூர், ஆக. 24-
நாட்டின் மூத்த தமிழ் ஏடான தமிழ் நேசன் நாளிதழ் மூடப்பட்டு 8 மாதஙக்ள் ஆகிவிட்ட நிலையில் தங்களுக்கான சம்பளத்தையும் இழப்பீட்டையும் கோரி அதன் முன்னாள் ஊழியர்கள் 40 பேர் நேற்று டத்தோஸ்ரீ வேள்பாரி அலுவலகத்தின் முன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
தங்கள் விவகாரத்தில் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தலையிட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். எங்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிர்வாகம் காப்பாற்றவில்லை. எனவே மனிதவள அமைச்சு, இதில் தலையிட்டு எங்களுக்கு நியாயத்தைத் தேடித்தர வேண்டும் என பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் கே.பத்மநாபன் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி எங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட காலத்துக்குள் எங்களுக்கான சம்பளத்தையும் இதர அனுகூலங்களையும் வழங்க தமிழ் நேசன் நிர்வாகம் தவறிவிட்டது என்று அவர் சொன்னார்.
நாட்டின் மூத்த மலாய் நாளேடான உத்துசான் மலேசியா மூடப்படும். அதன் 800 பணியாளர்கள் வேலையிழப்பர் என்ற செய்தி வந்தவுடனேயே அரசாங்கத் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் உடனடியாக அதைப்பற்றி பேசுகிறார்கள். அதற்குத் தீர்வு காண முயற்சி செய்கிறார்கள். அதேபோல் தமிழ் நேசன் பணியாளர்களின் நலனையும் தலைவர்கள் கவனிக்க வேண்டும் என்றார் அவர். நேற்று இங்கு டாமன்சாரா ஹைட்ஸில் உள்ள வேள்பாரி அலுவலகத்தின் முன்பு சுமார் 30லிருந்து 4 ஆண்டுகாலம் வரை பணியாற்றிய அப்பணியாளர்கள் அமைதியான மறியலில் ஈடுபட்டனர்.
தங்களுக்கான சம்பளம், செலுத்தப்படாத சேமநிதி, காப்புறுதி, சேவைக்கால ஊதியம், இழப்பீடு உட்பட சுமார் 14 லட்சம் வெள்ளியை நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முதலில் வேள்பாரி தொழிலாளர்களைச் சந்திக்க வேண்டும். அவருக்கு 1 வாரகால அவகாசம் தருகிறோம். மறுத்தால் வரும் வெள்ளிக்கிழமையும் இப்போராட்டம் தொடரும்.
ஆசியாவின் மூத்த தமிழ் நாளேடான தமிழ் நேசன் கடந்த 1924ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 94 ஆண்டுகாலம் செயல்பட்டு கடந்த பிப்ரவரி முதல் தேதியோடு மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − one =