உலக குத்துச்சண்டை தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார், இந்திய வீரர் அமித் பன்ஹால்

0

ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மானில் அடுத்த மாதம் (மார்ச்) நடக்கிறது. இந்த நிலையில் நிதி நிர்வாக பிரச்சினை காரணமாக ஏற்கனவே உலக குத்துச்சண்டை சங்கம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் தற்போது அதனை நிர்வகித்து வரும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் குத்துச்சண்டை பணிக்குழு உலக குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 420 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். விஜேந்தர் சிங்குக்கு பிறகு (2009-ம் ஆண்டு) நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய வீரர் அமித் பன்ஹால் ஆவார். அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான அமித் பன்ஹால் கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்‌ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஆசிய சாம்பியன்‌ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருப்பது குறித்து அமித் பன்ஹால் கருத்து தெரிவிக்கையில், ‘முதலிடத்தை பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் தர நிலையில் முன்னிலை கிடைக்கும். அத்துடன் நம்பிக்கையிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். முதல் தகுதி சுற்று போட்டியிலேயே ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை எட்ட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

உலக தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம் 51 கிலோ எடைப்பிரிவில் 5-வது இடத்தையும், லவ்லினா போர்கோஹைன் 69 கிலோ எடைப்பிரிவில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 4 =