உலக இறுதிச் சுற்று பேட்மிண்டன் போட்டி தொடங்கியது

ஆண்டு இறுதியில் அரங்கேறும் கவுரவமிக்க உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நேற்று (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.11ஙு கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் உலக தரவவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவு போல் இரட்டையர் பிரிவிலும் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள ஜோடிகள் கலந்து கொள்கிறது. இந்த போட்டியில் கலப்பு இரட்டையர் தவிர மற்ற எல்லா பிரிவுகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் களம் காணுகிறார்கள். ஒற்றையர், இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ளவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோதுவார்கள். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள். பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களம் இறங்குகிறார். 2018-ம் ஆண்டில் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்து இந்த முறையும் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டு இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான சிந்து ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அந்த பிரிவில் போர்ன்பவீ சோச்சுவாங் (தாய்லாந்து), லின் கிறிஸ்டோபர்சென் (டென்மார்க்), யோனி லி (ஜெர்மனி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் போர்ன்பவீயுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கிறார். அந்த பிரிவில் லீ ஜீ ஜியா (மலேசியா), தோமா ஜூனியர் போபோவ் (பிரான்ஸ்), குன்லாவுத் விதித்சரன் (தாய்லாந்து) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தனது முதல் ஆட்டத்தில் லீ ஜீ ஜியாவை சந்திக்கிறார். இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் கடினமான ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். அந்த பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 2 முறை உலக சாம்பியனான கென்டோ மோமோட்டா (ஜப்பான்), ராஸ்முஸ் ஜெம்கி (டென்மார்க்) ஆகியோர் உள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சவாலான ‘ஏ’ பிரிவிலும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி-சிக்கி ரெட்டி இணை ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + four =