உலகை ஆட்டிப் படைக்க நினைக்கும் சீனா..!

உமாபுரி, ஷா ஆலம், சிலாங்கூர்
கே: அம்னோவை ஓரம்கட்டிவிட்டு பாஸ் கட்சி முஹிடின் யாசின், அஸ்மின் அலி ஆகியோருடன் புதிய கூட்டணி உருவாக்க வாய்ப்புள்ளதா?

ப: இப்பொழுது அஸ்மின் அலி முஹிடின் யாசினின் பெர்சத்து கட்சியில் இணைந்து விட்டார். பாஸ் கட்சி தனித்தோ அல்லது பெர்சத்துவுடனோ மட்டும் கூட்டணி வைத்து போட்டியிட்டால், சில இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியுமே தவிர ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் அம்னோவுடன் இணந்து பாரிசான் உறுப்பு கட்சிகளின் ஆதரவுடன் களம் இறங்கினால் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே, பாஸ் கட்சி அம்னோவுடன் உருவாக்கியுள்ள முவாஃபாக்காட் கூட்டணியுடன்தான் தேர்தலை சந்திக்குமே தவிர, முஹிடின் யாசின் – அஸ்மின் அலியுடனான பெர்சத்து கட்சியுடன் அல்ல.

கே: தேசிய நீரோட்டத்தில் மதரீதியில் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டிருக்கும் பாஸ் கட்சி, கோமாளித்தனமாக அரசியல் நடத்திகொண்டிருக்கின்ற மகாதீர், இன்னமும் தான் ஒரு புனிதமான அரசியல் கட்சி
என அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கும் அம்னோ …. இவர்களை நம்பி நாட்டு மக்கள் வாக்களித்தால் நாடு அதோகதிதான் என்கிறேன். நீங்கள்?

ப: இது அப்பட்டமான உண்மை. ஆனால், இன்னமும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் உள்ளனரே.

கே: 15ஆவது பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா?
ப: மும்முனைப் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. மூன்றாவது அணியாக மகாதீரின் அணி உருவாகலாம்.

கே:டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அஸ்மின் அலி போன்றவர்கள் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் வெற்றி அடைவார்களா?
ப: அவர்கள் அம்னோ-பாஸ் கட்சிகளுடன் இணைந்து களம் இறங்கி னாலும், வெற்றியை உறுதி செய்ய இந்தியர்கள் மற்றும் சீனர்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. அதன் முன்னேற்பாடாகத்தான் பெர்சத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அம்னோவும்-பாஸ் கட்சியும் தங்களது கூட்டணியில் பெர்சத்துவை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் இவர்களின் கதி ‘அதோகதிதான்‘.

எஸ் எஸ் மணியம்
கே: இன்று நம் தமிழ் மக்களின் உயர்வுக்கு முக்கிய தூண்டுகோலாக விளங்குவது எது?

ப: மன்னிக்க வேண்டும் அப்படி எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதாக எண்ணி மலாய் சமூகம் ஒன்றுபடவேண்டும் என்ற வேட்கை கொண்டுள்ளது. தங்களது மதத்திற்கு ஆபத்துள்ளதாக கருதி மத அடிப்படைகளில் அவர்கள் மேலும் காலூன்றி வருகின்றனர். தங்களை உருமாற்றிக் கொள்ள கல்வி, தொழில் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக கவனமும் ஆர்வமுன் செலுத்தி வருகின்றனர். திறமையுள்ள அடுத்தக் கட்ட தலைவர்கள் பலர் உருவாகி விட்டனர். அவர்கள் அனைவரையும் நாம் வாழ்த்துவோம்.
ஆனால், சிறுபான்மை இனமான நாம் எந்தவொரு வேட்கையும் இன்றி காற்றில் பறக்கும் சருகுகள் போல் காற்று போகும் திசையில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கே: இன்றைய உலகில், உண்மையான நடிகர் யார்?
ப: சினிமாவில் என்றால் எனக்கு தெரிந்தது தமிழ் சினிமாதான். அதில் ஒவ்வொருவரும் தங்களது பாணியின் சிறப்பாகவே நடிக்கின்றனர். அன்றாட வாழ்க்கையில் என்றால், மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறு விதமாக நாடகம் ஆடும் பலர் இருக்கின்றனர். அது மனித இயல்பு என்று ஏற்றுக் கொண்டு கடந்து செல்வதே நல்லது. ஆனால், இந்த அரசியல் நடிகர்களின் நடிப்புத் திறமைதான் உண்மையில் வியக்க வைக்கிறது.
பாரபட்சமற்ற நீதிமன்ற விசாரணையின் இறுதியில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்பும் அப்படி ஒரு தவறே நடைபெறாததுபோல் நடமாடும் நஜிப் துன் ரஸாக்…..
அரசு நிர்வாகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஊழல் சர்வ சாதாரணமாக உலா வர வழி வகுத்து விட்டு, இப்பொழுது ஊழலை ஒழிக்க பெர்ஜுவாங் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள மகாதீர்….
22 மாத காலம் பக்காத்தான் ஹராப்பானில் மிக முக்கிய அமைச்சராக இருந்து, மகாதீரின் ஆட்சி மிகவும் சிறப்பாக செயல் படுவதாக புகழ்பாடிவிட்டு, இப்பொழுது சிலிம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் அரசு தோல்வியடைந்த அரசாங்கம் என்று கூசாமல் குறை கூறும் அஸ்மின் அலி…
தான் சம்பந்தப்பட்டதாக கூறப் படும் ஒரினப்புணர்ச்சி வீடியோ உண்மையானது , ஆனால் அதில் உள்ள
ஆடவரின் முகம் சரியாக தெரிய வில்லை என்று போலீஸ் கூறியவுடன், தான் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப் பட்டுவிட்டது என்று வியாக்கியானம் செய்த அதே அஸ்மின் அலி,
இப்படி நீண்டு கொண்டே போகிறது அரசியல் நடிகர்களின் பட்டியல். இதில் யார் சிறந்த நடிகர் என்று கூறுவது மிகவும் சிரமமாக உள்ளது. காரணம் ஒவ்வொருவரும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.

ஜீவேந்திரன், புக்கிட் லெம்பு தோட்டம், கடாரம்
கே: வாழ்க்கையில் முன்னேற சில வழிகள் சொல்லுங்கள் பார்ப்போம்?

ப: முறையாக திட்டமிடல், திட்டமிட்டபடி நடத்தல், உண்மையான உழைப்பு, நாணயம், தொழில் பக்தி, செய்யும் காரியத்தில் நேர்த்தி ஒழுங்கு இவற்றை கடைப்பிடித்தால் பல வெற்றிகளை சாதிக்கலாம் என்பது எனது அனுபவத்தில் நான் அறிந்து கொண்டது.

கே: விரைவில் மறு தேர்தல் நடத்துவது உறுதி ஆகிவிட்டதா ?
ப: அதற்கான அறிகுறிகள் தெரிய வில்லை. பலர் பல வகையான அறிவிப்புகளைச் செய்தாலும், தேர்தலுக்கு இட்டுச் செல்லும் அதிகாரத்தை கொண்டுள்ள முஹிடின் யாசினும் அவரது கட்சியும் அதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

கே: ஒருவர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும்?
ப: தொடங்குவதற்கு முன் அக்காரியத்தின் நல்லது கெட்டது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். அக்காரியத்தில் மற்றவர்களுக்கு உள்ள அனுபவங்களை சற்று கூர்ந்து நோக்க வேண்டும். ஆனால் காரியம் ஆற்ற இறங்கிவிட்டால் அதன் வெற்றி இலக்கைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.

கே: ஆத்மா என்பது என்ன? அது மனிதனை தாக்குமா?
ப: ஆத்மா அல்லது ஆன்மா என்பது பேய், பிசாசு அல்ல. அது மனிதனை காக்கவும் செய்யாது, தாக்கவும் செய்யாது. அப்படியென்றால் ஆன்மா என்றால் என்ன? இது ஒரு ஆன்மிகத் தேடல். உயிருள்ள ‘நான்‘ என்பது இந்த உடல் அல்ல. உடல் என்பது ஒரு மாயை. ‘அறிவும் புத்தியும்‘ கூட நானில்லை என்று ஆரம்பிக்கும் இந்த ஆத்ம ஞான விளக்கத்தை இன்றளவு நானும் விளங்கிக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.

செல்வராஜ் குமரன், கிள்ளான்
கே: மஹிந்த ராஜபக்ஷே இலங்கையில் மீண்டும் பிரதமரானதைப்பற்றி…

ப: மஹிந்த ராஜபக்ஷே பிரதமராகியுள்ள வேளையில் அவரது முன்னாள் அதிபர் பதவியை அவரது இளைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷே வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 முதம் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷே, 2005ஆம் ஆண்டு இலங்கையின் அதிபராக தேர்வுபெற்றார். அவர் அதிபராக இருந்தகாலகட்டத்தில் பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு அவ்வியக்கம் முற்றாக செயல் இழக்க
செய்யப்பட்டது. அதனால் அவர் தனித் தமிழர் தேசம் விரும்பும் மக்களின் விரோதியாக பார்க்கப்படுகிறார். மேலும், 2005ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட அந்த உச்சக்கட்ட நடவடிக்கையின்போது இலங்கை தமிழர்கள் இனப் படுகொலைக்கு ஆளாகினர் என்பது ராஜபக்ஷேவிற்கு எதிராக இருக்கும் கடுமையான குற்றச்
சாட்டு. அவரை தமிழர்கள் மனித உரிமையை மீறிய போர்க் குற்றவாளி யாகவே கருதுகின்றனர். இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமராக தேர்வு பெற்றது, இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கும் ஒரு கசப்பான தகவல்தான்.


கே: நாட்டின் 63வது சுதந்திர தினத்தைப் பற்றி….
ப: 63ஆவது முறையாக இந்நாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்றதை நினைவு கூருகின்றோம்.

கே: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இனவெறி பற்றி பேசி வருவதன் காரணம் என்ன…..
ப: ஜாதி, மொழி, மதம் இனம் என்ற அடிப்படையில் ஆசிய கண்டத்தை ஆட்டிப் படைத்து வரும் அரசியல் கலாசாரம் அமெரிக்காவிலும் பரவிட்டது. அதன் மீது சவாரி செய்து பலன் பெற விரும்பும் அரசியல்வாதிகள் பட்டியலில் டொனால்ட் டிரம்பும் இணைந்து விட்டார்.


கே: இந்த அங்கம் அடிக்கடி சுருங்கி வருவதன் காரணம் என்ன? உங்களால் பதிலளிக்க முடியவில்லையா….
ப: இறுதி நேர தேவைக்காக பக்கம் சுருக்கப்பட்டு விடுகிறது. வரும் காலங்களில் அப்படி நிகழாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.


கே: வாராவாரம் வரும் கடிதங்கள் பிரிக்கப்படுவதில்லை எனக் கூறப்படும் குற்றச்சாட்டைப் பற்றி…
ப: எனக்குத் தெரியவில்லை. கிள்ளான் வரை சென்றுள்ள இந்த குற்றச்சாட்டை அலுவலக நிர்வாகம் கவனிக்க கேட்டுக் கொண்டுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =