உண்மையைப் பேச தயங்க மாட்டேன் சார்ல்ஸ் திட்டவட்டம்

மலேசியாகினி இணையதள ஊடகத்திற்கு எதிராக கூட்டரசு நீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ அண்மையில் கருத்துரைத்திருந்தார். இதற்காக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டின் குடிமக்கள் சுதந்திரமாகப் பேசுவதற்கும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 10ஆவது விதி அவர்களுக்கு உரிமை அளித்துள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். எனவே, அடிப்படை உரிமைகளைத்தான் நான் பயன்படுத்தியிருக்கிறேன் என்று எஃப்.எம்.டி. இணையதள பத்திரிகையிடம் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாகினி வெளியிட்ட வாசகர்களின் கருத்துக்காக அந்த ஊடகத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை கூட்டரசு நீதிமன்றம் ஐந்து லட்சம் வெள்ளி அபராதம் விதித்தது. அத்தீர்ப்பு குறித்து கருத்துகளை வெளியிட்ட அந்த ஊடகத்தின் தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் சந்தியாகோ மீது தேசநிந்தனை மற்றும் பல்லூடகச் சட்டங்கள் மீது புலன்விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கெடா மாநிலத்தின் குருணைத் தளமாகக் கொண்டு செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பொன்றைச் சேர்ந்த ஒரு நபர் தனித்தனியாக இரண்டு போலீஸ் புகார்களைச் செய்துள்ளார் என்பதை கோல மூடா ஓ.சி.பி.டி. அட்ஸ்லி அபு ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்துச் சொல்வதால் அவமதிப்பு வழக்குத் தொடரப்படலாம் அல்லது போலீசில் புகார் செய்யப்படலாம் என அஞ்சாமல் எனது கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவேன் என்றும் சந்தியாகோ நேற்று தெரிவித்தார். மலேசியாகினி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏகமனதான ஒன்றல்ல. அத்தீர்ப்பை அளித்த ஏழு நீதிபதிகளுள் ஒருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். கூட்டரசு நீதிமன்றத்தின் முடிவுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் அது குறித்து பேசும் உரிமை எனக்கு உள்ளது என்றார் அவர். நமது நாட்டில் போலீசில் புகார் செய்வது என்பது ஒரு வாடிக்கையாகி விட்டது என்றும் சந்தியாகோ குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 12 =