உண்மையைச் சொன்னதற்காக என்மீது நடவடிக்கையா? அஞ்சி ஓடமாட்டேன்

பெர்சத்து கட்சியில் வியூகப் பிரிவின் தலைவர் என்ற அந்தஸ்து தமக்கு வழங்கப்படவில்லை என்று பிரதமர் துன் மகாதீர் கூறியிருப்பதை அதன் உச்ச மன்ற உறுப்பினர் ராய்ஸ் ஹுசேன் நிராகரித்தார்.
கட்சியின் கொள்கை மற்றும் வியூகப் பிரிவின் தலைவராகத் தம்மை நியமிக்கும் போது அக்கூட்டத்தில் மகாதீரும் இருந்தார் என்றார் அவர்.
தங்கள் கட்சியில் யாரையும் தலைமை வியூகத் தலைவராக நியமிக்கவில்லை என்று துன் மகாதீர் கூறியிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார். இக்கட்சி தொடங்கும் போதே என்னை நியமித்தார்கள். அப்போது கட்சியின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட அனைத்துத் தலைவர்களும் இருந்தார்கள்.
ஆனால் எந்த இடத்திலும், நான் ஒரு வியூகத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளவில்லை.கொள்கை வியூகப் பிரிவின் தலைவர் என்றுதான் சொல்லியிருக்கிறேன் என்றார் அவர்.
அண்மையில் பேசியிருந்த ராய்ஸ் மக்களின் குறைகளை நாம் காதுகொடுத்துக் கேட்பதை நிறுத்திவிட்டோம். இன்று தேர்தல் நடந்தால் பக்காத்தான் கூட்டணி தோல்வியடையும் என்று கூறியிருந்தார்.
இதுபற்றி நேற்று முன்தினம் பெர்சத்து உச்சமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட மகாதீர் பேசும்போது, கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் தோற்றத்தை மாசுபடுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கு பதிலளித்த ராய்ஸ், எனக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள பலர் உண்மையைச் சொல்ல அஞ்சாதீர்கள் என்று கூறிவருகிறார்கள். நான் 4 முறை இருதய ரத்த நாள அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறேன். எனினும் மக்களுக்காகக் குரல் கொடுப்பேன். யாருக்கும் பயந்து பின்வாங்க மாட்டேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 18 =