உட்கட்சிப் பிரச்சினையினால் பிரதமராகும் அன்வாரின் வாய்ப்பில் தடை ஏற்படும்

0

பிகே ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் அவரின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கும் இடையிலான மோதல், அன்வாரின் பிரதமராகும் வாய்ப்புக்குத் தடங்கலை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தாஸ்மேனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் சின் மற்றும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் அஸ்மி ஹசான் ஆகியோர், உட்கட்சி மோதல்கள் மாநிலம் மற்றும் தொகுதி மற்றும் இளைஞர் பிரிவிலும் ஊடுருவி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அன்வார் இப்பிரச்சினையை விரைவாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், அவர் பிரதமர் பொறுப்பை ஏற்க கட்சியில் சில தரப்பாரின் கடுமையான எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலை கவலையளிக்கும் வகையில் வியாபித்து வருவதாகவும், அது பிரதமர் பதவியை மாற்றிக் கொடுப்பதில் சிக்கலை உருவாக்கும் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகேஆரின் இளைஞர் பிரிவில் இருவேறு பிரிவுகள் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், அது கட்சியின் மகளிர் பிரிவிலும் ஊடுருவி வருகின்றது. தேசிய அளவில் இளைஞர் பிரிவின் மாநாட்டை யார் திறந்து வைப்பது எனும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கும் வேளையில், சரவாக் மாநில இளைஞர் பிரிவின் மாநாட்டை மாநிலத் தலைவர் பாரு பியான் நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டபோதும், அது நடத்தப்பட்டுள்ளது கட்சியின் கட்டுப்பாடு கேள்விக்குரியதாக மாறி வருகிறது என்பதை உணர்த்துகிறது.
அண்மையில் இளைஞர் பிரிவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கியதை ஆதரித்தும் எதிர்த்தும் குரல் கொடுக்கப்பட்டிருப்பது கவனத்துக்குரியது என ஆய்வாய் வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அவர்களிருவருக்கும் 35 வயதாகி இருப்பதால், இளைஞர் பிரிவில் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இளைஞர் பிரிவின் தலைமைத்துவம் கூறுகிறது.
அதற்கு அவர்களிருவரும் அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள் என்றும், வெளிப்படையாக தங்களது ஆதரவை அவருக்குக் காட்டியதால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கட்சியின் தேசிய மாநாட்டில் அன்வார் தமது வலுவை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார் என எதிர்பார்க்கும் வேளையில், அவருக்குத் தடங்கலை ஏற்படுத்த அஸ்மின் அலியின் அணியினர் அம்மாநாட்டைப் புறக்கணித்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பர் என்றும் சொல்லப்படுகிறது. அம்மாதிரியான புறக்கணிப்பு நடந்தால், அது கட்சியின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதே உண்மையாகும். இந்த உட்கட்சிப் பிரச்சினையானது, அது இணைந்திருக்கும் பக்காத்தான் ஹராப்பானையும் பாதிக்கும். கூட்டணியை வலுவாக இயங்கவைக்க பிகேஆர் அரண் போல இருப்பதுவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதை விட அன்வாரும் அஸ்மினும் தங்களது ஈகோவை பெரிதாக்கி, மார் தட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தனிப்பட்டோரின் கருத்தாக எடுத்துக் கொள்ளாமல், கட்சியின் நலன்விரும்பிகளின் ஒட்டுமொத்த கருத்தாகவும் எடுத்துக்கொள்ள வேண்டுமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − 1 =