உடைந்த வீட்டில் நீர், மின்சார வசதி இல்லாமல் தவிக்கும் இராமாயிக்கு தீர்வு பிறக்குமா??

இங்குள்ள ஜாலான் கோல கங்சாரில் அமைந்திருக் கும் ஹாக் ஹாவுன் கம்பத்தில் கடந்த 20 வருடங்களாக வசிக்கும் இராமாயி முத்தையா (வயது 60) மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார். ஆங்காங்கே உடைந்து கிடக்கும் வீட்டில் வாழும் இராமாயி திருமணம் ஆகாத பட்சத்தில் தனியாகவே அங்கு வசிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் வசிக்கும் வீட்டில் நீர், மின்சார வசதிகள் இல்லை. இருப்பினும், மெழுகுவர்த்தி, அகல் விளக்கு என்று இரவை கழிக்கிறார். அங்குள்ள கிணற்றில் நீரை எடுத்துக் கொள்கிறார். மழைக்காலங்களில் மழை நீரை சேகரித்து குடிப்பார். 2021ஆம் ஆண்டு உணவுக்குக் கூட தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த இந்திய மாதிற்கு அரசாங்கத்தின் சமூகநல உதவி கிடைக்கவில்லை. முன்பு அந்த உதவி கிடைக்கப் பெற்று, இப்பொழுது கிடைக்காமல் போய் விட்டதாக இராமாயி தமிழ் மலர் நாளிதழுக்கு வேதனையுடன் பேட்டியளித்தார்.

சராசரி மனிதருக்கு கிடைக்கும் வசதிகள் கூட எனக்கு இல்லை என்றாலும் ஏதோ இந்த உடைந்த வீட்டில் வாழ்கிறேன். என் காலில் புண்கள் வந்துள்ளன. அதனையும் குணப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு அரசாங்கம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இந்த வீட்டை கொஞ்சம் பழுதுபார்த்து கொடுக்க வேண்டும். இங்கு எனக்கு ஒரு கிணறு வேண்டும். தற்பொழுது இருக்கும் கிணறு கொஞ்சம் தூரம்; அதனால் கால் வலிக்க நீரை அங்கிருந்து கொண்டு வர முடியவில்லை. நேற்று முன்தினம் பிரிம் பணத்தைப் பெற்றேன். அதை வைத்து உணவுகளை வாங்கிக் கொள்வேன். இங்கே சமைக்கவும் செய்கிறேன். இங்கு பூனைகளை வளர்த்து வருகிறேன். அவைகள் என்னுடைய தோழர்கள். எனக்கு மின்சாரம், நீர் வசதி கிடைத்தாலும் கொஞ்சம் நிம்மதியே. ஆனால், என்னை இங்கிருந்து மட்டும் விரட்டி விடாதீர்கள். அதை என்னால் தாங்கவே முடியாது. என்னுடைய வீட்டை பழுதுபார்ப்பதற்கு யாரை அழைத்தாலும் வரச் மாட்டார்கள். அதனாலே மோசமான உடைந்த வீட்டில் தங்குகிறேன். எனக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − five =