உடுமலை அருகே 1,000 ஆண்டு பழமையான கல்திட்டை

0

காடுகளில் வாழ்ந்த மனிதர்கள் கொடிய விலங்குகளிடமிருந்து தப்பிக்க ஆயுதங்களாக கற்களைப் பயன்படுத்தினான். அதன் பிறகு படிப்படியாக வீரத்தை, தியாகத்தை அடையாளப்படுத்தவும், தகவல்களை பதிவு செய்யவும், கலை நயத்தை வெளிப்படுத்தவும் என பல வகைகளில் கற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் தான் வரலாற்று ஆய்வாளர்கள் பெருங்கற்காலம், கற்காலம் என காலத்தை கற்களால் வகைப்படுத்தியிருக்கக் கூடும்.


நவீன எந்திரங்கள் எதுவும் இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இயற்கையிலேயே கிடைக் கக்கூடிய கற்களை தேவைக்கேற்ப பயன்படுத்தவும், பெரிய கற்களைக் கையாளவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும் கூடிய நுட்பங்களை அறிந்திருந்தார்கள். இதை பறைசாற்றும் விதமாக கல் திட்டைகள், கல் பதுக்கைகள், நெடுங்கற்கள் போன்றவை உள்ளன. பிற்கால கட்டிடக்கலைக்கு இவையே அடித்தளமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் இத்தகைய பழமையான தமிழர் நாகரீகத்தின் அடையாளங்கள் போதிய பாதுகாப்பின்றி அழிந்து வருகிறது.

எனவே இவற்றை அடையாளப்படுத்தவும், பாதுகாக்கவும் வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் உடுமலையை அடுத்த நீலம்பூர் பகுதியிலுள்ள மேய்ச்சல் நிலத்தில் காணப்படும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படும் கல்திட்டையில் உடுமலை ஜி.வி.ஜி.விசாலாட்சி கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் கற்பகவல்லி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அத்துடன் அந்த பகுதியில் வயல் வெளிகளில் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இருந்த பொதுமக்களிடம் கல்திட்டை குறித்து கேட்டறிந்தனர்.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:-

சங்க இலக்கிய காலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்திலேயே கொங்கு நாட்டில் மக்கள் வசித்ததற்கான சுவடுகள் சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய பாலக்காட்டுக் கணவாய் வழியாக கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் கொங்குப் பெருவழிகள் மூலமாக பயணம் செய்தும், நீர்வழிப்பாதைகளில் வணிகங்கள் மேற்கொண்டதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. அவ்வாறு பாலக்காட்டுக் கணவாயிலிருந்து வடபூதிநத்தம், கண்ணாடிப்புத்தூர், ஐவர் மலை, சின்னக்கலையம்புத்தூர் வழியாக வணிகக்குழுவினர் பயணம் செய்திருக்கக்கூடும். அப்படி பயணம் செய்தபோது இந்த நீலம்பூர் பகுதியில் இனக்குழுக்களின் சிலர் இறந்திருக்கக்கூடும்.

இறந்தவர்களை அடையாளப்படுத்தும் விதமாக இந்த கல்திட்டை உள்ளது. மேலும் நமது முன்னோர்களின் நடுகல் வழிபாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கல்திட்டைக்குள் 3 சிறிய அளவிலான நடுகற்கள் உள்ளது. அதன்படி இந்த பகுதியில் இனக்குழுக்களின் பெரு வீரனாகவும், படைகளை வழிநடத்திச்செல்லும் போர் வீரர்களில் சிலரும் என ஒன்றுக்கும் மேற்பட்டோர் இந்த இடத்தில இறந்து இங்கே புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி இறந்தவர்கள் குறைந்தது 3 பேர் அல்லது 30 பேராகவும் இருக்கலாம்.

இந்த கல்திட்டைக்கு கிழக்குப்பகுதியிலுள்ள கண்ணாடிப்புதூரில் பழமையான கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அவை அரசின் ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பழமையான பல வரலாற்று சான்றுகளை கொண்டுள்ள கண்ணாடிப்புத்தூர், வடபூதிநத்தம், கொழுமம், கல்லாபுரம் போன்ற ஊர்கள் இந்த நீலம்பூர் கல் திட்டையின் வழித்தடத்தில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. இந்த கல்திட்டையானது 2½ அடி உயரத்தில் முதல் நடுகல் கல் திட்டை வடிவில் காணப்படுகிறது. அதாவது 3 பக்கங்களிலும் பலகைக்கல்லை வைத்து மேலே ஒரு பெரிய பலகைக் கல்லை போர்த்திய நிலையில் காணப்படுகிறது. இந்த நடுகல் சிதைந்த நிலையில் காணப்படுகிறது‘.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆய்வின் போது வட்டார வள மைய கல்வி மேற்பார்வையாளர் ராபின், வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவர் செல்வராஜ், பொறுப்பாளர் வளவன், அருள் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 6 =