ஈப்போ லிட்டல் இந்தியாவில் திருவள்ளுவர் சிலை

0

ஈப்போ லிட்டல் இந்தியா வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை எழுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பேராக் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டான்ஸ்ரீ ராஜு கூறினார்.
ஈப்போவைப் பொறுத்த வரையில் அதிகமான தமிழர்கள் லிட்டல் இந்தியாவிற்கு வருகிறார்கள். ஆகவே தமிழர்கள் அதிக நடமாட்டம் உள்ள அந்தப் பகுதியில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதுதான் சிறப்பாக அமையும் என்றார்.
வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் ஒரு தமிழ்ப்பற்றாளர். உலகளாவிய நிலையில் பல நாடுகளில் திருவள்ளுவர் சிலைகளை அமைத்து வருகிறார். மலேசியாவின் இரண்டாவது திருவள்ளுவர் சிலையை ஈப்போவில் அமைக்க விருப்பம் கொண்டு உள்ளார். அந்த வகையில் ஈப்போ லிட்டல் இந்தியா தேர்வு செய்யப்பட்டது.பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில், 2016ஆம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்த போது முதலாவது திருவள்ளுவர் சிலை அமைக்கப் பட்டது.ஈப்போ லிட்டல் இந்தியாவில் சிலை அமைப்பது குறித்து ஈப்போ நகராண்மைக் கழகத்திற்கு அனுமதி கோரும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பதில் கிடைக்கும் என்றும் டான்ஸ்ரீ ராஜு கூறினார்.ஞாயிற்றுக்கிழமை மாலை, ஈப்போ லகாட் சாலை, அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற வி.ஜி.சந்தோஷம் விருது விழா நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ ராஜு அவ்வாறு கூறினார்.
ஈப்போ அருணகிரிநாதர் மன்றம்; பேரா மாநில தமிழ் இலக்கிய மேம்பாட்டுக் கழகம்; ஈப்போ வட்டாரப் பொது இயக்கங்கள் இணைந்து அந்தப் பாராட்டு விருது விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.
அந்த நிகழ்ச்சியில் “வள்ளுவம் போற்றும் வள்ளல்” எனும் விருது டாக்டர் வி.ஜி.சந்தோஷத்திற்கு வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது. இவர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் ஆவார்.
டாக்டர் வி.ஜி.சந்தோஷம் தன் உரையின் போது உலகத் தமிழர்கள் தங்களின் தொழிலில் கவனம் செலுத்தினாலும் தாய் மொழித் தமிழிலும் ஒரு பார்வையை கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அதனால் மொழியின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டியது அவர்களின் கடமையாகும் என அவர் வலியுறுத்தினார்.
வணிகத்தில் மட்டும் அக்கறை கொள்ளாமல் கடந்த 50 ஆண்டு காலமாகத் தமிழ் மொழி வளர்ச்சியிலும் தங்கள் நிறுவனம் அக்கறை காட்டி வருவதாகவும் கூறினார். உலகளாவிய நிலையில் 50க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளைப் பல நாடுகளில் நிறுவி இருக்கிறோம். அமெரிக்கா சிக்காகோ 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 50 ஆவது திருவள்ளுவர் சிலையை நிறுவினோம். அண்மையில் தைவான் நாட்டில் இரு சிலைகளை நிறுவி உள்ளோம் என்று கூறினார்.
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் திருவள்ளுவருக்குச் சிலைகள் வைக்க வேண்டும். அந்த நாடுகளில் எல்லாம் தமிழ் மொழி கற்றுத் தரப்பட வேண்டும். அந்த இலக்கை நோக்கித் தான் நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் கூறினார்.
டான்ஸ்ரீ ராஜு அவர்களுடன் சிறப்பு வருகையாளர்களாக தொண்டர்மணி மாணிக்கம்; பாவலர் ஆ.கி.டேவிட்; சொஸ்கோ தலைமை அதிகாரி வாசு; ஆகியோர் வருகை புரிந்தனர்.
இசைச் சகோதரிகள் பண்பரசி; கனிமொழி கோவிந்தசாமி ஆகியோரின் இனிமையான தமிழிசைக் கச்சேரி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
மூத்த எழுத்தாளர்கள் திருமதி கமலாட்சி ஆறுமுகம்; அன்னக்கிளி ராசையா; சமூக சேவகி சரோஜினி; கவிஞர்கள் முத்துப் பாண்டியன்; முல்லைச் செல்வன்; கவிஞர் கோபால் மேலும் பலரும் கலந்து கொண்டனர்.
டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களுக்கு வணிக வள்ளல் பி.கே.குமார், பொன்னாடை போர்த்தி, தாம் எழுதிய ’வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம் எனும் நூலையும் அன்பளிப்பாக வழங்கினார்.
மகப்பேறு மருத்துவரும்; சமயப் பற்றாளருமான டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். எளிமைத் தமிழில் இனிமையாகப் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
மூத்த பத்திரிகையாளரும் தமிழார்வலருமான முகமட் அலி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மேடை அலங்காரச் சொற்களின் மூலமாக சிறந்த அறிவிப்பாளர்களில் ஒருவராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + fourteen =