இழந்த தொகுதியை மீண்டும் பெறுமா மஇகா?

மு. எசோதா பொன். பத்துமலை,
பத்தாங் பெர்சுந்தை
கே: தற்சமயம் நம் நாட்டை தாக்கியுள்ள கொரோனா மூன்றாவது அலை, யானை தன் தலையில் தானே மண்ணைவாரி போட்ட கதையாக இருக்கிறதே. இது யாருடைய தவறு?

ப: பலரது தியாக சேவைகளை முறியடித்துவிட்ட அரசியல்வாதிகளின் மன்னிக்க முடியாத தவறு இது. தனது சுய லாபத்திற்காக ஓர் அரசியல் வியூகத்தை அஸ்மின் அலி வகுத்தது தவறு. அதை உள்வாங்கிக் கொண்டு பெர்சத்து கட்சி பக்காத்தானில் இருந்து விலகியது தவறு. கட்சி விலகியதைக் காரணம் காட்டி மகாதீர் பதவி விலகி அரசியல் நாடகம் ஆடியது தவறு. அதை சாதகமாக்கிக் கொண்டு மக்கள் நிராகரித்த பாரிசானுடன் முஹிடின் இணைந்து பிரதமர் பதவியை கைப்பற்றியது தவறு. அதனால், மாநில ஆட்சிகளிலும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியில் அம்னோ அரசியல்வாதிகள் இறங்கியது தவறு. அவர்களின் ஆசை வார்த்தைக்கு இசைந்து சிலர் கட்சி தாவல் செய்தது தவறு. இந்த சூழ்நிலையில், சபா மாநில அரசை கவிழ்த்து விட்டு மறு தேர்தல் நடத்த வாரிசான் தலைவர் மாநில ஆளுநருக்கு பரிந்துரை வழங்கியது தவறு. மறு தேர்தல் நடந்தது தவறு. அதையெல்லாம் இப்பொழுது அலசி என்ன பயன். தவறுகளுக்கு இடையே புகுந்து தனது வேகத்தை காட்ட மீண்டும் புறப்பட்டு விட்டான் கொரோனா.
கே: ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிளும் இரவு 10.14 மணி அளவில் தேடலும், தெளிவும், நிகழ்ச்சியில் பாண்டிதுரை சமுதாயத்திற்கு தேவையான அறிய, பெரிய கருத்துக்களை அற்புதமாக அள்ளி தெளித்து கொண்டிருக்கிறார். இந்து சமயம் சார்ந்தவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய நிகழ்ச்சி. உங்கள் கருத்து?
ப: வழக்கறிஞர் பாண்டிதுரை எனது நல்ல நண்பர். அவர் தொகுத்து வழங்கும் வசந்தம் நிகழ்ச்சியிலும் 2முறை பங்கேற்றுள்ளேன். அவரிடம் தமிழ் ஆற்றலோடு அறிவாற்றலும் இணைந்துள்ளது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. முக்கியமாக மொழி, சமயம் சார்ந்த அவரது அறிவாற்றல் ஈடு இணையற்றதாக இருக்கிறது. அவரது இந்த புதிய நிகழ்ச்சி நீண்ட நாள் நமது தேடலுக்கு ஒரு தெளிவாக அமைந்துள்ளது. அவரது பணி மேலும் சிறக்க வேண்டும்.


ஸ்ரீவாணன், கோலாலம்பூர்
கே: மகாதீர் 24 ஆண்டுகள் ஆண்டு விட்டார்! தமது குடும்பத்தில் பலரை மலேசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைத்தும் விட்டார்! 95 வயதில் இன்னமும் ஏன் பதவி ஆசை? குடும்பமே செல்வ சீமான் சீமாட்டிகளாகி வாழ்கின்றது. இந்த வயதில் பேரன்கள், பேரன்களின் பிள்ளைகளுடன் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே? இந்த வயதிலும் மற்றவர்களுக்கு ‘டென்ஷன்’ கொடுத்து முதுகில் குத்தும் பழக்கம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்!

ப: நீங்கள் கேட்ட கேள்வி, அதற்கு உங்கள் கேள்விக்குள்ளேயே இருக்கும் பதில், இரண்டும் வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் ஆதங்கம் புரிகிறது. இது அடங்காத தாத்தா.
கே: அந்நிய தொழிலாளர்கள் இல்லாது நாம் நமது நாட்டை வழி நடத்த முடியாதா? அந்நிய தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைப்போம் என்று அரசாங்கம் சொல்லிக் கொண்டே இருக்கிறது- ஆனால் எல்லாம் ஏட்டுச்சுரைக் காய்போல் உள்ளது. கோடி கணக்கில் பணம் மலேசியாவிலிருந்து வெளியாகிக் கொண்டே இருப்பது வேதனையாக உள்ளது.

ஒட்டு மொத்த அந்நிய தொழிலாளர்களை நிறுத்தினால் ஆயிரம் ஆண்டுகள் மறுசீரமைப்பு தேவையில்லாத புத்ராஜெயா போல் பல நகரங்களை உருவாக்கலாமே?
ப: முடியாது. பண்டை காலம் தொட்டு வர்த்தகத்திற்காகவும் வேலை வாய்ப்பிற்காகவும் மக்களின் இடப் பெயர்ப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இது மலேசியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் எதிர் நோக்கும் ஒரு யதார்த்தம். ஒரு நாட்டின் வளர்ச்சியும் மேம்பாடும் மனித உழைப்பை நம்பியே இருக்கிறது. உள்நாட்டு மனித வளம் போதாத அல்லது நிறைவு செய்ய முடியாத சூழ்நிலையில் அந்நிய நாட்டு தொழிலாளர்களின் சேவை தேவைப்படுகிறது. ஒட்டு மொத்த அந்நிய தொழிலாளர்களையும் நிறுத்தி விட்டால், நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையாக குறையும். ஆகவே, அதிகபட்சமாக அந்நிய தொழிலாளர்களையே நம்பியிருக்கும் நிலையை மட்டும்தான் குறைத்துக் கொள்ள இயலுமே தவிர அவர்களை முழுமையாக தவிர்க்க முடியாது.


கே: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறந்த, துணிவுமிக்க, மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர். இந்நாட்டின் பிரதமருக்கான தகுதி டத்தோஸ்ரீ அன்வாருக்குத்தான் உண்டு? உங்கள் கருத்து?
ப: பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் சிறந்த பிரதமராக இருப்பாரா என்பது வாய்ப்பு வழங்கினால்தான் தெரிய வரும். ஆனால், அந்த வாய்ப்பை பெறுவதற்கு அவர் தகுதியானவரா என்றால், நிச்சயமாக இப்பொழுது இருக்கும் தலைவர்களில் அவரே சிறந்தவர். தகுதியானவர்.


கே: நான்கு இலக்க எண், சூதாட்டம், மது விற்பனை, சிகரெட் விற்பனை தேவையா? அவற்றினால் மக்களின் பணம் பைத்தியக்காரத்தனமாக வீணாகிறது. ஆகியவற்றால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். பல குடும்பங்கள் நாசமாகின்றன. இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வு காண முடியாதா?
ப: இந்த தகாத பழக்கங்களினால் வாழ்வை இழந்த பலரையும் பாழாய்ப்போன பல குடும்பங்களையும் நான் சந்தித்துள்ளேன். மக்களிடம் ஆசை- பேராசை இருக்கும் வரை சட்டம் போட்டு எதற்கும் தீர்வு காண முடியாது. உரிமம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் நான்கு நம்பர் எடுப்பதில் தொகை குறைவாக கிடைப்பதனால் சட்டத்திற்குப் புறம்பாக பலர் நம்பர் எடுக்கும் நிலை இருந்து வருகிறதுதானே. நமது தவறான பழக்க வழக்கங்களுக்கெல்லாம் அரசாங்கமே தீர்வு காண வேண்டும் என்று நினைப்பதும் சரியல்ல. சிறு வயது முதல் இந்த பழக்கங்கள் தவறு என்ற சிந்தனையை குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தால் ஒருவேளை இந்தப் பழக்கங்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கலாம். மகாபாரதத்தின் பெரும்பகுதி கதை சூதாட்டத்தின் பின்விளைவு தானே.


எஸ்.மனோகரன். போர்ட்டிக்சன்
கே: நமது நாட்டில் தற்சமயம் புதிய புதிய அரசியல் கட்சிகள் உதயமாகி வருகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட ஓர் இனத்திற்காகவே தோற்றுவிக்கப்படுகின்றன. இந்தியர்களை அரவணைக்க புதிய கட்சிகள் உதயமாகுமா?

ப: தற்சமயம் இந்தியர்களின் நலனுக்காக என்று கூறிக்கொண்டு எனக்குத் தெரிய மூன்று கட்சிகள் உள்ளன. மஇகா, மக்கள் சக்தி கட்சியோடு சேர்த்து வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி ஆகியவை அந்த மூன்று கட்சிகள். மேலும் ஓரிரண்டு கட்சிகள் பதிவு பெற்று அதிகம் செயல்படாமல் இருக்கின்றன. அதைத் தவிர இந்தியர்களின் நலன்களுக்கும் பாதுகாவலர்கள் என்று கூறும் ஜசெக, பிகேஆர், கெராக்கான் ஆகிய பல இனக் கட்சிகள் உள்ளன. அந்த வரிசையில் தற்சமயம் பெர்சத்துவும் இணைந்துள்ளது. முஸ்லிம் அல்லாதவர்கள் உயர்பதவியில் இருக்கக் கூடாது என்ற சித்ததந்தைக் கொண்டுள்ள பாஸ் கட்சி பாஸ் ஆதரவாளர் இயக்கத்தை தனியாக வைத்துள்ளது. இதையெல்லாம் கடந்து புதிதாக ஒரு கட்சி தோன்றி இந்திய சமுதாயத்தை கரை சேர்க்கப்போகிறதா? கட்சி முக்கியமல்ல. நல்ல தலைவர்கள் தேவை. அவர்களைத் தேடுவோம். தேர்ந்தெடுத்து ஆதரவு கொடுப்போம். சமுதாய உணர்வுள்ள இளைஞர்களை தலைவர்களாக உருவாக்குவோம்.

கேள்வி. பதினைந்தாவது தேசிய பொதுத் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடக்கும் என பேசப்படுவது உண்மைதானா?
ப: ஒரு முக்கியமான நிகழ்வை மறந்துவிட்டு இந்த விவாதங்கள் நடைபெறுகின்றன. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் துன் மகாதீர் பிரதமர் பதவியில் இருந்து திடீரென விலகிய பிறகு, நாட்டில் மிகப்பெரிய அரசியல் நிலையற்ற தன்மை உருவானது. யாருக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை இல்லாத நிலையில் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் ஒரே அதிகாரம் கொண்டவர் பேரரசர். நமது பேரரசர் இந்த அரசியல் நெருக்கடியை விவாதிக்க ஆட்சியாளர்கள் மாநாட்டைக் கூட்டினார். பிப்ரவரி 28 ஆம் தேதி நடந்த அந்த சிறப்புக் கூட்டத்தில் நாட்டில் மறுதேர்தல் நடத்துவது முற்றாக நிராகரிக் கப்பட்டது. அதன் பின்னரே பேரரசர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக அறிவித்து அவருக்கு பிரதமர் பதவியை ஏற்கும் வாய்ப்பினை வழங்கினார். அப்பொழுது கோவிட்-19 தாக்கம் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் இருந்த காலம். இப்பொழுது கோவிட் -19 தலைவிரித்தாடுகிறது. இதற்கு முக்கிய காரணம் சபாவில் நடந்த மறுதேர்தல் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தெளிவாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் பேரரசர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு ஒப்புதல் வழங்குவாரா? நீங்களே சிந்துத்து சொல்லுங்கள்.

கே. பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மஇகா களம் இறங்குமா?
ப: களம் இறங்கும். கொடுக்கப்படும் இடத்தை தவிர வேறு எதையும் கேட்டுப் பெற முடியாத நொண்டிக் குதிரையாக களம் இறங்கும். மக்கள் வாக்களிப்பார்களா என்பதுதான் கேள்வி.


கே. செலாயாங் பசார் போரோங்கில் அதிகமான மியன்மார் தொழிலாளர்கள் பணியாற்றினார்கள். ஆனால் அவர்களுக்குப் பிறகு ஏன் நமது நாட்டினர் வேலை செய்ய ஆர்வம் காட்டவில்லை?
ப: சில தொழில், பணிகள் அந்நியத் தொழிலாளர்களின் வேலை என்று ஒரு சிந்தனை கடந்த பல ஆண்டுகளாக மக்கள் மனதில் பதிந்து விட்டது. முக்கியமாக கடுமையான உடல் உழைப்பு சார்ந்த துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை உள்நாட்டினர் நிராகரித்து வந்துள்ளனர். அதனால் அது போன்ற தொழில் அல்லது வேலையில் சேர்ந்து பணியாற்ற நம்மவர்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. முதலாளிகளும் அந்நியத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில்தான் அதிக நாட்டம் கொண்டிருந்தனர். கோவிட் -19 தாக்கத் தினால் ஏற்பட்ட வேலை இழப்புகளைத் தொடர்ந்து அந்த மனநிலை படிப்படியாக மாற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கே. மக்கள் கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு நமது நாட்டில் இந்தியர்களின் உண்மையான மக்கள் தொகை எவ்வளவு என்பதை வெளியிடுவார்களா?
ப: மலேசிய பிரஜைகள் அனைவருக்கு மான பிறப்பு – இறப்பு பதிவேடு உள்ளது. கணினி மயமாக்கப்பட்டுள்ள அந்தப் பதிவில் இந்திய வம்சாவளியினரின் மொத்த மக்கள் தொகை உட்பட அனைத்து தகவல்களையும் ஒருவிசையை அழுத்தினால் பெற்று விடலாம். ஆகவே மக்கள் கணக்கெடுப்பின் வழிதான் நாட்டின் மக்கள் தொகையை நிர்ணயிக்க முடியும் என்பது தவறான கூற்று. ‘பஞ்ச்சி’ எனப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஒரு வட்டாரத்தில் எவ்வளவு மக்கள் தொகை உள்ளது போன்ற விபரங்களை பதிவு செய்வதாகும்.

கே. கடந்த தேர்தல் களில் இழந்த நாடாளுமன்றம், சட்ட மன்றம் தொகுதிகளை இன்றைய நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலமைத்துவம் வெற்றி கொள்ள முடியுமா?
ப: முதலில் தோல்வியுற்ற இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை மஇகா பெறட்டும். வென்ற கேமரன் மலை தொகுதியைக் கூட இடைத்தேர்தலின் போது அவர் அம்னோவிற்கு விட்டுக் கொடுத்துவிட்டார் என்பது நினைவிருக்கிறதா? கடந்த 14ஆவது பொதுத்தேர்தலின் போது மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவராக இருந்த கேவியஸ்க்கு அத்தொகுதியை விட்டுத் தர முடியாது என்று மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் பிடிவாதமாக இருந்தார். அதனால் கேவியஸ் பாரிசானி லிருந்து விலகுவதாகக் கூட அறிக்கை வெளியிட்டார். ஆனால், இடைத்தேர்தலில் அந்தப் பிடிவாதம் மலையேறியதோடு கேமரன் மலைத் தொகுதி அம்னோவிற்கு கைமாறிவிட்டது. மீண்டும் அதை மஇகா பெறுவது சாத்தியமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =