இளையோரின் ‘உண்டி 18’ வழக்கு மீட்பு

பதினெட்டு வயதினருக்கு வாக்குரிமை அளிப்பதற்கும் அனைத்து குடிமக்களையும் இயல்பான முறையில் வாக்காளராக ஆக்குவதற்கும் வழிகோலும் அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை அமல்படுத்த மறுத்துவரும் அரசாங்கத்திற்கு எதிராக பதினெட்டு இளைஞர்கள் வழக்குத் தொடுத்திருந்தனர். கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அவ்வழக்கை மீட்டுக் கொள்வதாக அவர்கள் நேற்று தெரிவித்தனர். அவ்வழக்கை தாங்கள் மீண்டும் தொடரலாம் எனும் நிபந்தனையுடன் தங்களின் வழக்கு மனுவை மீட்டுக் கொள்வதாக அந்த பதினெட்டு இளைஞர்களும் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் வாதப்பிரவாதங்களை உயர்நீதிமன்ற நீதிபதி அமாட் கமால் ஷாஹிட் நேற்று செவிமடுத்தார். அதன் மீதான தீர்ப்பை அவர் இன்று வெளியிடுவார். பதினெட்டு வயதினருக்கு வாக்களிக்க அனுமதியளிக்க வகை செய்யும் அச்சட்டத்திருத்தங்கள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும் என்று கூட்டரசு அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், அரசாங்கத்தின் அம்முடிவை ரத்து செய்யக்கோரி சரவாக்கைச் சேர்ந்த ஐந்து பேர் கூச்சிங் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைச் செவிமடுத்த நீதிவிசாரணை ஆணையர் அலெக்சாண்டர் சியூ, அச்சட்டத்திருத்தங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். கூச்சிங் உயர்நீதிமன்றம் அளித்த இந்த சாதகமான தீர்ப்பைத் தொடர்ந்து அந்த பதினெட்டு இளைஞர்களும் தாங்கள் தொடுத்திருந்த வழக்கை மீட்டுக் கொள்ளப் போவதாக அறிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 14 =