இளம் விமானிகளுக்கு வேலையில்லை; கனவுகள் கேள்விக்குறி

வேலையில் இருந்த விமானிகளுக்கே இப்போது வேலை இல்லை. இந்நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் விமானிப் பயிற்சி எடுப்பவர்களின் கனவுக்கு இப்போதைக்கு விடை இல்லை. கிட்டத்தட்ட ஈராண்டு காலம் அந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வருபவர்கள் பயிற்சிக்குப் பின்னர் காத்திருக்குமாறு கூறப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரான 30களைக் கடந்த வயதுடைய பயிற்சி விமானி சண்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார். ‘ வானில் பறக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் பயிற்சி முடிந்ததும் தற்காலிகமாக விடைபெற இருக்கிறோம். பயணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் எங்களை அழைத்துக்கொள்வதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உறுதி அளித்திருக்கிறது,” என்றார். ஆயினும் எப்போது அந்த விமான நிறுவனம் அழைக்கும் என்பதில் எவ்வித உறுதியும் இல்லாததால் வேறு வேலைக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதாக அவர் கூறுகிறார். பயிற்சியில் இருக்கும்போதே வேலை தேடி வரும் தமக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்றும் எந்தவொரு நல்ல வேலை கிடைத்தாலும் போதும் என்றும் ஜான் என்னும் புனைப்பெயரில் அழைக்கப்படும் அவர் தெரிவித்தார்.
கொரோனோ கிருமிப் பரவல் காரணமாக விமானப் பயணங்கள் அடியோடு சீர்குலைந்து விட்டது. அதன் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தமது ஊழியரணியில் சுமார் 20 விழுக்காட்டைக் குறைக்கும் நோக்கில் கடந்த மாதம் ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
உடனடியாக கிட்டத்தட்ட 2,400 ஊழியர்கள் வேலை இழந்தனர். அடுத்து வரும் மாதங்களில் கட்டாய ஓய்வு, விருப்ப ஓய்வு போன்ற வழக்கமான பணியாளர் குறைப்புகள் மூலம் மேலும் 1,900 பேர் விடைபெற இருக்கிறார்கள். மேலும், 6,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பளமில்லா விடுப்பில் இருக்கிறார்கள். இந்நிலையில், தன்னிடம் பயிற்சி பெற்று வரும் விமானிகளுக்கு வேலைதர இயலாத நிலையில் அந்நிறுவனம் உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் வரை நிலைமை மிக நன்றாகத்தான் இருந்தது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தில் உள்ளடங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சில்க்ஏர் மற்றும் ஸ்கூட் ஆகிய விமான நிறுவனங்களில் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 3,200 விமானிகளும் ஏறத்தாழ 11,000 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
கொரோனா கிருமியின் விஸ்வரூபத்தால் அவர்கள் அத்தனை பேருக்கும் சோதனை ஆரம்பித்தது.
அதேபோல சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கும் ஊழியர் இழப்போடு பொருளியல் இழப்பும் ஏற்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் விமானிப் பயிற்சி அளிக்க அந்நிறுவனம் ஸ்ரீ250,000 வரை செலவிட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − seven =