வரும் பதினைந்தாவது பொதுத்தேர்தலில் இளம் அரசியல் தலைவர்களின் வருகைக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் வழிவிட வேண்டியது அவசியமாகும் என்று பெஜூவாங் கட்சியின் இடைக்காலத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் வலியுறுத்தியுள்ளார். பதினைந்தாவது பொதுத்தேர்தல் புதிய தலைமுறையினர் பங்கேற்பதற்கு ஒரு சரியான தருணமாக இருக்கும் என்று அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முக்ரிஸ் குறிப்பிட்டார்.
பதினான்காவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியில் உள்ள ஒரு பெரிய கட்சியை நாங்கள் ( பக்காத்தான் ஹராப்பான்) எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் அவர் ( டாக்டர் மகாதீர்) அதில் பங்கேற்றது விவேகமான ஒரு நடவடிக்கையாகும். கள்வர்களின் கூடாரமாக விளங்கிய அக்கூட்டணி தலைமையிலான அரசாங்கம் ஏராளமான பணத்தை வைத்திருந்தது. அப்போதும்கூட நாங்கள் வெற்றிக்கனியைப் பறித்தோம். எங்களுக்கிடையிலான வேறுபாடுகளை புறமொதுக்கிவிட்டு இதர கட்சிகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டதே வெற்றிக்கான காரணமாகும் என்றார் முக்ரிஸ்.
அடுத்த பொதுத்தேர்தலில் தமது தந்தையார் டாக்டர் மகாதீர் போட்டியிடும் சாத்தியம் பற்றி கேட்கப்பட்டதற்கு கெடா மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாருமான முக்ரிஸ் குறிப்பிட்டார்.
வரும் பதினைந்தாவது பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த செப்டம்பரில் மகாதீர் அறிவித்திருந்தார். ஆயினும், அம்முடிவைத் தமது ஆதரவாளர்கள் ஏற்காததால் அத்தேர்தலில் போட்டியிடப் போவதாக இரண்டு வாரங்களுக்கு பின்னர் அவர் அறிவித்தார்.
இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் பிரதமர் பதவியில் இருந்தவரான டாக்டர் மகாதீர், பெஜூவாங் எனும் புதிய அரசியல் கட்சியை கடந்த ஆகஸ்டு மாதத்தில் தொடங்கினார். அக்கட்சி சங்கப் பதிவகத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமர் வேட்பாளராக இருப்பது பி.கே.ஆர். தலைமையிலான மெகா கூட்டணியில் பெஜூவாங் இணைவதற்கு தடையாக இருக்குமா என்று முக்ரிஸிடம் வினவப்பட்டதற்கு, புதுமுகங்கள் முன்னிலைக்கு வரவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்றார்.