இலிங்க வடிவ தத்துவமும் அதன் வழிபாட்டு மகத்துவமும்

கேள்வி: இறைவனை வழிபட பல வடிவங்கள் இருக்கும்போது இலிங்க வடிவத்தில் வழிபாடு செய்வதில் ஏதும் சிறந்த காரணம் உண்டா?
பதில்: ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருவொளியாக விளங்குபவன் இறைவன். அவனின் உண்மை நிலை அல்லது சொரூப நிலை என்பது மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டதாகும். நமது கற்பனையையும் கடந்து பெருவெளியாகவும் பெருவொளியாகவும் விளங்கும் இறைவனின் தன்மையை யார் அறிவார், எங்கள் அண்ணல் பெருமையை, யார் அறிவார். இந்த அகலமும் நீளமும், பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று, அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே என்று மலைக்கிறார் திருமூலர். ஆயினும், “கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலம் நீடி” என்று சேக்கிழார் குறிப்பிடுவது போல கற்பனைக்கும் அப்பாற்பட்ட இறைவன் உயிர்கள் (ஆன்மாக்கள்) ஆகிய நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நமக்காக இறங்கி வரும் கருணை நிலையை தடத்த நிலை என்று கூறுவர்.
அத்தகைய தடத்த நிலையில்; அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று விதமான வடிவங்களை கொண்டு நமக்கு அருள்செய்கின்றார். இவ்வடிவங்களில் சிவபெருமான் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு அருளுகின்றார். சைவ சமயத்தின் நம்பிக்கைப்படி சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை. பக்தர்களுக்கு அருளும் பொருட்டு அவர் வடிவம் மட்டுமே எடுக்கிறார். இதனை; “திருவழி ஆவது சிற்றம்பலத்தே; குருவடிவு உள்ளாக் குனிக்கும் உருவே; உருஅரு ஆவதும் உற்றுஉணர்ந்தோர்க்கு; அருள்வழி ஆவதும் அவ்வழி தானே என்று திருமந்திரம் 2763அ என்ற பாடல் விளக்குகிறது. இதில்; அருவம் – சிவம் – அதி சூட்சுமம் – கண்ணுக்கு புலனாகாது. இது நிட்களத்திருமேனி எனவும் சொல்லப்படும். உருவம் – மகேஸ்வரன் – ஸ்தூலம் – கண்ணுக்குப் புலப்படும். இது சகளத்திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் – சதாசிவன் – சூட்சுமம் – வடிவம் இல்லை. இது சகலநிட்களத்திருமேனி எனவும் சொல்லப்படும். இவ்வாறு; உருவ நிலையில் நான்கு, அருவ நிலையில் நான்கு மற்றும் அருவுருவ நிலையில் ஒன்று என ஒன்பதும் நவந்தரும் பேதமாகும். இதனை நவந்தருபேதம் ஏக நாதனே நடிப்பன் எங்கிறது சிவஞான சித்தி.

உருவ நிலை
உருவம் என்பது கண்ணுக்குப் புலப்படும் வடிவமாகும். தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த இறை வடிவங்கள் இவ்வகையில் அடங்கும். சகலத் திருமேனி, சகலம் என பலவாறு அறியப்படும் இறைவனின் உருவ நிலையானது நவந்தருபேதத்தில் பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன் என நான்கென குறிப்பிடப் பட்டாலும், ஆகம நூல்கள் இறைவனுக்கு பல்வேறு உருவ நிலைகளைக் குறிப்படுகின்றன. குறிப்பாக, பஞ்சகுண மூர்த்திகள், பதினாறு வடிவங்கள், பதினெட்டு வடிவங்கள், மகேசுவர வடிவங்கள், அஷ்டாஷ்ட மூர்த்திகள் என பல்வேறு வகைப்பாடுகளும், எண்ணற்ற சிவவடிவங்களும் உள்ளன. இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு (64) வகையாக உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதிலும் சிறப்பாக இருபத்தைந்து (25) வடிவங்கள் ;மகேஸ்வர மூர்த்தங்கள் என்று சொல்லப்படுகின்றன.

அருவ நிலை
அருவம் என்றால் உருவம் இல்லாத என்று பொருள். அருவம் என்பது காட்சியளவையால் அறியப்பெறாது கருதலளவையால் அறியப்பெறுவது. (எ-டு) ஆகாயம் முதலியவை. ஆகவே, அருவம் என்பது கண்ணுக்கு புலனாகாது. மனதில் உணர மட்டுமே முடியும். நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படும் அருவ நிலையானது விந்து, நாதம், சக்தி, சிவம் எனும் நான்கினைக் குறிக்கும்.


அருவுருவ நிலை
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவ நிலையில் இறைவனுக்கு உருவமுமில்லாத அதேவேளையில் அருவமுமில்லாத நிலை ஆகும். இந்நிலை சகளம், சகளத் திருமேனி என்றும் அறியப்படும். இதற்கு உதாரணமாக; தீ, விளக்கின் சுடர், யாகத்தில் தோன்றும் சோதி போன்றவைகளுக்குக் கண்ணுக்குப் புலப்படும் உருவம் இருப்பது போல் தோன்றினாலும் அவ்வடிவங்கள் நிரந்தமானவை அல்ல. சற்று நேரம் தோன்றி மறையும் அவ்வடிங்களை நிரந்தமாக்கவும் முடியாது. ஆயினும், உருவமுல்லாத அருவமுமில்லாத சோதி வடிவினனாக விளங்கும் இறைவனை நாம் என்றும் மனதில் நிலை நிறுத்தும் வண்ணம் இறைவன் அருளிய திருவடிவமே சிவலிங்கம் எனப்படும். சிவலிங்கம் என்றால் சிவனின் அருவுருவ திருமேனி. இதனையே “காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” என்கிறார் சேக்கிழார்.


இலிங்கம் என்பதன் பொருள்

“இலிங்கம்” என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் எனப் பொருள். “குறி” என்றால் காண முடியாத இறைவனை குறிப்பிடுவதற்கான ஓர் அடையாளமே சிவலிங்கம்.
லிங்கம். லிங்- லயம்; கம்- தோற்றம். அதாவது; இந்தப் பிரபஞ்சம் தோன்றி ஒடுங்கும் இடம் என்பர். லிம் – உலக முடிவில் அண்ட சராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் என்றும், கம்- அவ்வாறு லயித்த பொருட்கள், அதிலிருந்து வெளிப்படுவது என்றும் கூறலாம். லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன.
சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. இலிங்க வழிபாடு காலம் கடந்த வழிபாட்டு முறையாகும் சிவவழிபாட்டில் லிங்க வழிபாடு தான் முக்கியத்துவமானது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. ஏன் உலக நாடு முழுவதுமே லிங்கவழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. லிங்கம் இல்லாமல் மூர்த்தி பேதம் உள்ள சிவன் கோவில்கள் கிடையாது. இலிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு பல சான்றுகள் உள்ளன. அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த இறைவனின் பரத்துவ நிலையை உணர்த்துவதுதான் சிவலிங்க வடிவின் அடிப்படையாகும்.
உண்மையான தியானத்தில் மனதில் எழும் வடிவத்திற்கு லிங்கம் என்று பெயர் என உபநிஷதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. நம் நாட்டில் சநாதன தர்மத்தோடு அடையாளப் படுத்தப்பட்ட இந்த இலிங்க வடிவானது அனைத்துச் சமயங்களையும் கடந்த ஓர் அற்புத தத்துவமாகும்.
தவஞானிகளின் ஆற்றல்களாலும், கோயில்களில் சொல்லப் படுகின்ற மந்திர உச்சாடனங்களின் வழியாகவும் ஏற்படும் அதிர்வலைகளைத் தன்னுள்ளே ஈர்த்து வைத்துக்கொள்ளக் கூடிய பிரம்மாண்டமான பேராற்றல் இயற்கையிலேயே லிங்க வடிவத்திற்கு உள்ளது என அறிவியல் வல்லுநர்களும் கூறுகின்றனர். அமெரிக்கக் கண்டத்தின் பெரு என்னும் நாட்டின் தத்துவத் துறை திறனாய்வாளர் துடிhn ளுவநயீhநn என்பவர் இந்தக் கருத்தை வலியுறுத்தி சிவலிங்கம் என்றதொரு ஆய்வு நூலை எழுதி இருக்கிறார். அண்டம் அளப்பரிய ஆற்றல்களை சக்தியை தன்னகத்தே கொண்டது என்பதை தற்கால விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.
இதனை தன்னகத்தே ஈர்க்கும் ஆற்றல் கொண்ட அமைப்பே லிங்க வடிவமாகும். சிவம் என்றால் மங்களம் சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்களத்தின் அதாவது சுபத்தின் அடையாள வடிவமே சிவலிங்கமாகும். பளிங்கினால் செய்யப்பட்ட ஸ்படிக லிங்க வழிபாடு தான் சிறந்த வழிபாட்டு வகையாக கருதப்படுகிறது. காரணம் அந்த பொருளுக்கு அதற்கென சொந்தமாக நிறம் கிடையாது.
அது எதனோடு தொடர்பில் ஈடுபடுகிறதோ அதன் நிறத்தையே பெறுகிறது. அதனால் அது ‘நிர்குண பிரம்மன்’ அல்லது இயல் பண்புகள் முற்றிலும் ஒழிந்த முதன்மை சக்தி அல்லது உருவமற்ற சிவனை குறிக்கும். அணுமின் நிலையங்களின் கொதிகலன்கள் 90 விழுக்காடு லிங்க வடிவிலேயே அமைந்துள்ளன. இதனையும் கருத்திற் கொண்டு ஆய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகும். எல்லையற்று விரிந்து பரந்து இருக்கும் ஓர் அளப்பரிய சக்தியின் ஆதிவடிவமே இலிங்க வடிவமாகும்.
சிவதியானத்தில் முதல்படி சாதாரணமாக நாம் வீடுகளில் வைத்திருக்கும் படங்களில் வைத்திருக்கும் சிவனின் உருவம். இரண்டாவது படி சிவசக்தியான அருவுருவத் திருமேனியான லிங்கத் திருவுருவம். மூன்றாவது படி அருவத் தியானம். இது ஒரு குருவின் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது. அருணகிரிநாதர் இதனை ஒட்டியே “அருவாய் உருவாய் குருவாய்” என அருளியுள்ளார்.
உருவமாய், அருவுருவமாய், அருவமாய் படிப்படியாக தியானம் செய்த ஒருவர் சிவோகம் என்ற நிலையை அடைகிறார். அதாவது நானே சிவம் என்ற நிலையை அடைகிறார். இதனையே சான்றோர்கள் “தெள்ளத் தெளிந்தாரிற்கு சீவன் சிவலிங்கமாமே” என்று கூறியுள்ளனர். தெள்ள தெளிந்து முழுமையாக உணரந்தவற்கே சீவன் சிவலிங்கமாகும்.
இதுவே இறுதி நிலையாகும். இதனையே “தத்துவ மசி” பொருள்: நான் அது ஆதல். “அஹம்பிரமாஸ்மி” பொருள்: நானே இறைத்தன்மையை அடைகிறன் என வேதங்கள் சொல்கின்றன.

இலிங்க வடிவத்தின் பாகங்கள்

இலிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக் கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இவ்வாறாக இறைவனின் அனைத்து ஆற்றலையும் உள்ளடக்கிய பிரமாண்டமே இலிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் வெளிப்படுகின்றன.

நமசிவாய மந்திரமும் சிவலிங்கமும்

நமசிவாய எனப்படும் பஞ்சாட்சர தத்துவத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளும் சிவலிங்கத்தின் வெவ்வேறு பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. அவை முறையே: கீழ்ப்பாகம் ந என்ற எழுத்தையும், நடுப்பாகம் ம என்ற எழுத்தையும், மேல்பாகம் சி என்ற எழுத்தையும், நாதக்குழி வ என்ற எழுத்தையும், இலிங்கம் — என்ற எழுத்தையும் குறிக்கிறது. இவை நிவர்த்தி கலை, பிரதிஸ்டைக் கலை, வித்தியாக் கலை, சாந்திக் கலை, சாந்தியாதீதக் கலை என்று பஞ்சகலா சக்தி ரூபமாகிறது. சிவலிங்க வடிவம் சுயம்புவாக தோன்றியது.
இது உலகம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒன்றாகும். இயற்கையோடு இசைந்த தத்துவம். நாதமும், விந்துவும் அதாவது ஒலியும், ஒளியும் இணைந்த சிவசக்தித் தத்துவமாகும். இலிங்கம் என்பது புலன்களிற்கு எட்டாத பரம் பொருளிற்கு சின்னமாகும்.
சிவலிங்கம் குறித்து சிலரது சர்ச்சைக்குரிய விளக்கம் இலிங்கம் என்பதற்கு வடமொழியில் குறி என்பதுதான் உண்மைப் பொருள். வடவேதங்களில் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்) இலிங்கம் என்பது இழிவாக ஆண்குறி என்ற பொருளில்தான் குறிப்பிடப்படுகிறது என்று சில விதண்டவாதிகள் கூறுவர். மேலை நாட்டு ஆராச்சியாளர்கள் சிலர் சிவலிங்க வழிபாட்டை ஆண், பெண் பிறப்புறுப்புகளின் சேர்க்கை என கொச்சைப்படுத்தி உள்ளதை நாம் உற்று நோக்க வேண்டும். இங்கு இருக்கும் தங்களை புதுமை வாதிகள் எனக் கூறிக் கொள்ளும் அல்லது காட்டிக் கொள்ள விரும்பும் சிலர் உண்மை தத்துவத்தினை புரிந்து கொள்ளாமல் இதனை தூக்கிப் பிடித்து பேசுவதை நாம் காணலாம். இவர்களைப் பொறுத்த வரையில் இங்கு இருக்கும் தத்துவங்களின் உண்மை என்ன என்பதை பகுத்து ஆராயமல் கண் மூடித்தனமாக மேலை நாட்டவர் சொல்லும் கருத்திற்கு மதிப்பளித்து அதனை கூறுவதன் மூலம் தங்களை புதுமைவாதிகளாக காட்டிக் கொள்வதேயாகும்.
உண்மையில் சிவலிங்க வணக்கம் தமிழர்களுடையது. தமிழர்களால் ஏற்படுத்தப்பட்டது. “காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்” என்பது பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவலிங்கத்திற்கு கொடுக்கும் விளக்கம். இவ்வாறு குறி என்ற சொல்லைக் கொண்டு சிவலிங்கத்திற்கு இழிவுப்பொருளில் சிலர் கூறுவதை. “குறிகளும் அடையாளமும் கோயிலும்; நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்; அறிய ஆயிரம் ஆரணம் ஓதினும்; பொறியிலீர் மனம் எங்கொல் புகாததே” என்று அப்பர் கண்டிக்கிறார்.
சிவ புராணத்தில் சிவலிங்கத்தின் மேற்பகுதி சிறிதிற்கும் சிறிதான மற்றும் பெரிதிற்கும் பெரிதான சகலத்தையும் உள்ளடக்கிய ஒரு ஸ்தம்பம் எனக் குறிப்பிடுகிறது. சுவாமி விவேகானந்தர் பிரான்சு நாட்டில் 1900 தில் நடந்த சமயங்களின் சரித்திரங்கள் என்ற மகா நாட்டில் ஜெர்மனிய நாட்டவரான குஸ்டவ் ஒப்பேர்ட் எனபவரின் கட்டுரைக்கு பதிலளிக்கும் போது சிவலிங்கம் என்பது யுப ஸ்தம்பம் அல்லது யுப கம்பம் அதாவது வேதங்களின் சாரங்களை அடிப்படையாகக் கொண்ட மகா பிரம்மத்தின் அடையாளச் சின்னமே எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலிங்க அடையாளத்தில் இறைவன் இலங்கி இருப்பதால் அது இலிங்கம் எனப்பட்டது என்பது தமிழர் தரும் விளக்கம். தெய்வப் படிமத்தை பதிட்டை செய்யும்போது மந்திரத்தால் இறைவனது விளக்கத்தை ஏற்படுத்தி அதில் இலங்கச் செய்வதால் அதற்கு இலிங்கம் எனப்பெயர் வந்தது என்பர். சிவஞானசித்தியாரில் “மந்திரத்தால் உருக்கோலி” என்று வருவது இதற்குத் துணை நிற்கிறது. இதனையே மாணிக்கவாசகர் “அணுவிற்குள் அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்” எனக் கூறுகிறார்.

சிவலிங்க வழிபாட்டில் அணு அறிவியல்
சிவலிங்க வழிபாட்டில் அணு அறிவியலே மறைந்துள்ளது. அணுவின் வடிவமே இலிங்கம்: அ(சி)வன், அணுவின்றி எதுவும் இயங்காது என்று முன்னோர்கள் கூறுவார்கள். இலிங்கத்தில் புரோட்டான் என்ற அணுவின் மையக்கருவை (நேர்மின்அணுத்துகள்) எலக்ட்ரான் என்ற மின் அணுத்துகள் வலமாக நீள் வட்டப்பாதையிலும், நியூட்ரான் என்ற மின்அற்ற சிற்றணுத்துகள் இடமாக எலக்டரான் எதிர்பாதையிலும், புரோட்டானைச் சுற்றிவந்த வண்ணமாகவே இருக்கின்றன.
அணுவின் தொகுப்பு: ஒவ்வோர் அணுவும் பிரணவடிவமாக (ஓம்) உள்ளதென்பர். புரோட்டான்ஸ்ரீ அகாரமாகவும், எலக்ட்ரான் ஸ்ரீ உகாரமாகவும், நியூட்ரான் ஸ்ரீமகாரமாகவும் இருக்கின்றன. அகரமே இறைவன், உகரம் உயிர் சக்தி, மகரம் இருசக்திகள் இணையும் மாயா சக்தியாகவும், இருக்கின்றன. இதை நம் தமிழர்கள் முன்பு கண்டுபிடித்து வழிபாடு நடத்தியுள்ளனர். பிரம்மா, விஷ்ணு, சிவன்: மேலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், மூன்றின் பாங்காய் சிவலிங்கம் சேர்ந்திருப்பதால் ஆணவம், கன்மம், மாயை முறையே தொம்பதம், தற்பதம், அசிபதம் எனவாகிறது. தற்பதம் ஜீவனுக்குள் பரந்து நிற்கின்ற அருட்சக்தி, அசிபதம், மூம்மலம் நீங்கிய சுத்த ஆன்மாவாகவும், ஜீவனுக்குள் தங்கியுள்ளது. பரவி வியாபித்துள்ள அருட்சக்தி கலக்குமிடமாகிறது.
அணுக் கூட்டங்களின் மாறுப்பட்ட குணம்: இம்மூன்று வேத வாக்கியப்பதங்கள் பிரவணத்தின் அணுபதமாகும். பிரபஞ்ச தோற்றமாய் விளங்கும் அனைத்துப் பொருட்களும் இவ்வித அணுக்கூட்டங்களின்மாறுபட்ட குணங்களுக்குத் தக்கவாறே பொருட்களும் தன்மையும் மாறுகிறது. அணுக் கூட்டங்கள்: எந்த ஒரு தனிமங்களும், அதன் தோற்றப் பரிமாணம்,அடர்த்தி,மற்றும் எடை வித்தியாசம், ரசாயன குணத் தன்மைகள், இவைகள் யாவும் அணுக்கூட்டங்களின் வேறுபாடுகளுக்கு ஏற்ப அமைகின்றன. உதாரணமாக, நியூட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து எடை கூடுதல் குறைவு ஆகும். அணுகளின் எடைகள்: புரோட்டான்களின் எண்ணிக்கையை மாறுபடும் போது தனிமங்களின் இராசயன குணங்கள் மாறுபடும்.
இம்மாற்றத்தத்துவத்தின் மையப்படுத்தப்பட்ட அலகே, அணு எண்ணும் எடையும், என விஞ்ஞானம் கூறுகிறது.

சிவலிங்க வழிபாட்டின் மகத்துவம்

முழுநம்பிக்கையுடன் ஆகம முறைப்படி பூசை செய்து மார்க்கண்டேயருக்கு இறவா நிலையை தந்தது சிவலிங்க வழிபாடேயாகும். தனக்கு தெரிந்த பொருட்களிலேயே உயர்ந்த அதாவது ஒரு வேடனைப் பொருத்த வரையில் முக்கியமானது உணவு அதுவும் மாமிசமும், தேனும் ஆகும். அதிலும் அதனை சுவைத்து பார்த்து சுவைமிகுந்த பகுதியையே தேனில் தேய்த்து இறைவனிற்கு அர்பணிக்க வேண்டும் என்ற அந்த உயர்ந்த நோக்கம் இவையே கண்ணப்ப நாயனாராக்கியது.
தமது அறிவிற்கு எட்டிய வழியில் அதாவது ஆறாவது அறிவு இல்லாத யானையும, சிலந்தியும் தமது அறிவிற்கு எட்டிய வழியில் பரிபூரண பக்தியுடன் இறைத்தொண்டு அதாவது சிவலிங்கத் தொண்டு செய்து மோட்சமடைந்ததையும் நாம் உற்று நோக்க வேண்டும். இதன் மூலம் பரிபூரண நம்பிக்கையுடனான சிவலிங்க வழிபாடு நமக்கு உண்ணத பெருவாழ்வினைத் தரவல்லது என்பது தெளிவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =