இலவச வேலை திட்டத்தை வழங்கும் மெக்டோனால்ட்

கோலாலம்பூர், ஜூன். 11-
கோவிட்-19 காலத்தில் வேலை வாய்ப்புகளை தேடும் இளைஞர்களுக்கும் வேலை இழந்த இளைஞர்களுக்கும் உதவும் வகையில் மெக்டோனால்ட் நிறுவனம் வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
எஸ்.எல்.டி.என் எனும் அழைக்கப்படும் இந்த வேலை வாய்ப்பு திட்டமானது மெக்டோனால்ட் அகாடமியின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும்.
இத்திட்டத்தில் பங்கேற்று முழுமையாக தங்கள் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு இறுதியில் எஸ்.கே.எம் (Sijil Kemahiran Malaysia ) நிலை 2 மற்றும் நிலை 3 ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என்று மெக்டோனால்ட் மலேசியா நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, மெக்டோனால்ட் மலேசியாவுடன் இணைந்து கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ரிம.1200 கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, வேலை உத்தரவாதம் வழங்கப்படுவதோடு எஸ்.கே.எம் சான்றிதழ்களையும் பெறுவார்கள்.
17 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்திற்காக பங்கேற்கலாம். எஸ்பிஎம் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பு 18 மாதங்கள் இலவசமாக மேற்கொள்ளப்படும். இந்த 18 மாத படிப்பு காலத்திலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரிம.1200 கொடுப்பனவு வழங்கப்படுவதோடு இலவச விடுதியும் வழங்கப்படும்.
மேலும், இலவச உணவும் காப்பீட்டுத் திட்டமும் மாணவர்களுக்காக வழங்கப்படும் என்று மெக்டோனால்ட் நிறுவனம் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 13 =