இலங்கையில் தலைவிரித்தாடும் பஞ்சம்; தமிழகத்திற்கு வந்த அகதிகள்

இலங்கையில் உணவு பொருள்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதுடன், பஞ்சம் தலை விரித்தாடுவதால், ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள் கண்ணீர் வடித்தனர்.
கடும் பொருளாதார வீழ்ச்சியால், இலங்கையில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்தது. மக்கள் வருவாய் இன்றி உணவுக்காக பரிதவிக்கின்றனர். இலங்கை யாழ்ப்பாணம், மன்னாரைச் சேர்ந்த கஜேந்திரன், 24, மனைவி மரியகிலாரி, 20, நான்கு மாத குழந்தை நிசாஜ் மற்றும் தியுரி, 28, எஸ்தர், 11, மோசஸ், 5 ஆகிய ஆறு பேரும், இலங்கை பேச்சாளையில் இருந்து கள்ளத்தனமாகப் படகில் புறப்பட்டனர்.
அவர்கள் தனுஷ்கோடியில் இருந்து 7 கி.மீ., தூரம் உள்ள 6ம் மணல் திட்டையில், படகோட்டிகள் இறக்கி விட்டுச் சென்றனர். மண்டபம் இந்திய கடலோரக் காவல் படையின், ‘ஹோவர்கிராப்ட்’ கப்பலில் வீரர்கள் அவர்களை மீட்டு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
கஜேந்திரன் கூறுகையில், ‘’இலங்கையில் ஒரு நாள் கூலியாக 500 முதல் 800 ரூபாய் வரை கிடைக்கும். அரை கிலோ பால் பவுடர் 900 ரூபாய், 1 கிலோ அரிசி 230 ரூபாய், சமையல் காஸ் சிலிண்டர் 4,200 ரூபாய் விற்கிறது. ‘’உணவுப்பொருட்களை வாங்க முடியாமல் பசியில் வாடினோம். வேறுவழியின்றி அகதியாக வந்தோம். இன்னும் பலர் அகதியாக இந்தியா வரவுள்ளனர்,’’ என்றார்.
கஜேந்திரன் 2011 முதல் ஈரோடு, அரசலூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த நிலையில், 2020ல் தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தனமாக படகில் இலங்கை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =