“இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையைத் தீருங்கள்” இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடிக்கு கடிதம்


இலங்கையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினையை இலங்கை அரசு நிவர்த்தி செய்வதை உறுதிப்படுத்துங்கள் என்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த பிரபல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண இந்தியாவின் உதவியை கோரி உள்ளனர்.
இது தொடர்பாக மூத்த தமிழ் அரசியல்வாதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள இந்தியத்தூதரைச் செவ்வாய்க்கிழமை சந்தித்து மகஜர் ஒன்றை அளித்துள்ளனர்.
13வது சட்டத்திருத்தத்தை அமுல் படுத்துவதற்கும் அதற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிப் படுத்துவதற்கும் இலங்கையின் பல்வேறு அரசாங்கங்களால் வழங்கப்பட்ட பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை ஏழு பக்கம் கொண்ட அந்த மகஜரில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராஜா (ஐடிஏகே), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்), செல்வம் அடைக்கலநாதன் (டெலோ), வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டுள்ள அந்த மகஜர், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காலத்திலிருந்து பல்வேறு நிபுணர் குழுக்களால் உருவாக்கப்பட்ட முன் மொழிவுகளின் அடிப்படையில் அரசியலமைப்பு தீர்வைக் கொண்டு வருவதற்கான கடந்தகால முயற்சிகளைக் குறிப்பிடுகிறது.
பல்வேறு கட்டங்களில் இந்திய அரசியல் தலைமையின் தலையீடுகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ள அந்த மகஜரில், 2015 ஆம் ஆண்டு இலங்கை நாடாளு மன்றத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, “கூட்டுறவு கூட்டாட்சி”யில் தனது உறுதியான நம்பிக்கையைப் பற்றி பேசிய உரையையும் மேற்கோள் காட்டியுள்ளது.
கூட்டாட்சி அமைப்பு
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களிடம் இருந்து பலமுறை ஆணையைப் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரதேசங்களில் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பெரும்பான்மை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான எங்கள் முன்மொழிவாக இதை நாங்கள் தொடர்ந்து வைத்துள்ளோம்” என்று கையொப்பமிட்டவர்கள் கூறியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மலையகத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் உட்பட தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமைகள் போன்றவற்றின் மீதான தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் நிறுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் விதிகளை முழுமையாக அமுல் படுத்துவதற்கான வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட வேண்டும்.
1987 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவினரும் வழங்கிய தெளிவான உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தவும், தமிழ் பேசும் மக்கள் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்விடப் பகுதிகளில் கௌரவமாகவும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ இந்தியாவின் அழுத்தத்தையும் அவர்கள் கோரியுள்ளனர். ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டின் கட்டமைப்பிற்குள் அவர்களின் சுயநிர்ணய உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் விளைவே இந்த மகஜர்.
முன்னதாக இதில் அங்கம் வகித்த முக்கிய மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் கடிதத்தின் வலியுறுத்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து அதிலிருந்து வெளியேறினர்.
அவர்கள் 1987 உடன்படிக்கையைத் தொடர்ந்து வந்த 13வது திருத்தத்திற்கு கடிதத்தை இணைக்க விரும்பினர், மேலும் ஆளும் ராஜபக்சே நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினர்களால் அடிக்கடி நிராகரிக்கப்பட்டது.
2019 நவம்பரில் பதவிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டதில் இருந்து அதிபர் ராஜபக்சே இன்னும் தமிழ் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. ஜூன் 2021 இல், அதிபர்- நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதிகள் இடையே சந்திப்பு திட்டமிடப்பட்டது. இருப்பினும், ராஜபக்சேவின் அலுவலகம் சந்திப்பை ரத்து செய்து, புதிய தேதி அறிவிக்கப்படும் என்று கூறியது. இதுவரை அது நடபெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கை திவால் ஆகும் நிலையை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், இந்தியா அதற்கு கை கொடுக்க முன் வரலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இந்த சூழ்நிலையில்தான் நாடளுமன்றதில் உள்ள தமிழ் உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 4 =