இலங்கைத் தமிழர்களுக்காக அனுதாபம் தெரிவித்தது குற்றமல்ல

0

கைது செய்யப்பட்ட 2 ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யுமாறு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதிநிதிகளும் தலைவர்களும் நேற்று தங்கள் கூட்டறிக்கையில் கேட்டுக்கொண்டனர்.
பினாங்கு முதல்வர் பேராசிரியர் பி.ராமசாமி, கிராம மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் ஆர்.சிவராசா ஆகியோர் உட்பட 16 பேர் இணைந்து இக்கூட்டறிக்கையை விடுத்தனர்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு தங்கள் துயரத்தையும் அனுதாபத்தையும் மலேசியத் தமிழர்கள் வெளிப்படுத்துவது இயற்கையான ஒன்று என்று அவர்கள் கூறினர்.
விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தாக்குதல்கள் கடந்த 2009ஆம் ஆண்டு கடைசிப் போரோடு முடிவடைந்து, விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாமல் போனது. இந்தப் போரில் பாதிக்கப்பட்ட அங்குள்ள தமிழர்களுக்காக மலேசியத் தமிழர்கள் தங்கள் அனுதாபத்தைத் தெரிவிப்பதும் அவர்களுக்காகத் துயரப்படுவதும் இயற்கையான, இயல்பான ஒன்று.
விடுதலைப் புலிகள் நடத்திய ஆயுதமேந்திய போராட்டத்தை விட தமிழ் மக்களின் துயரம் முக்கியமானது.
மலேசிய முஸ்லிம்கள் பாலஸ்தீன, ரோஹிங்யா முஸ்லிம்களுக்குக் காட்டும் அந்த ஆதரவைப் போல்தான் இலங்கைத் தமிழர்களுக்கு மலேசியத் தமிழர்கள் காட்டும் அனுதாபமாகும்.
இந்தப் போரில் மாண்டவர்களுக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சியை மலேசிய அரசு சார்பற்ற இயக்கங்கள் நடத்துவது ஒன்றும் புதுமையல்ல.
ஆனால் 7 பேரைக் கைது செய்ய சொஸ்மா சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது மிக கண்டிக்கத்தக்கதாகும் என்று இந்தியத் தலைவர்கள் கூறினர். பக்காத்தான் அரசாங்கத்தால் இந்த சட்டம் அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் என்று கூறி இக்கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என்.ராயர், பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு, புக்கிட் குளுகோர் எம்பி ராம் கர்ப்பால் சிங், கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ, பத்து காஜா எம்பி வி.சிவகுமார், பத்து எம்பி பி.பிரபாகரன், செனட்டர் ஆர்.சுரேஷ் சிங், சிலாங்கூர் சட்டமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ராமகிருஷ்ணன், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு, பாகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஷ் முனியாண்டி, புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.குமரேசன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் இக்கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =