இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார்

தமிழ் இலக்கிய உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ தமிழ் அறிஞர்களையும் புலவர்களையும் எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.மற்ற மொழி இலக்கியங்களோடு ஒப்பிடுகையில் தமிழில் மட்டுமே ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் ஆளுமைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்று நெஞ்சுயர்த்தி சொல்லலாம்.
அப்படி தோன்றிய பெருமக்கள் தமிழன் வளர்ச்சிக்கும் தமிழரின் மறுமலர்ச்சிக்கும் பல்வேறு சான்றுகளையும் அழியாத எழுத்துகளையும் படைத்து தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இன்றைக்கும் தமிழர்களின் தலைசிறந்த அடையாளங்களாய் நனி சிறப்போடு தனித்து நிற்பது அத்தகைய தமிழறிஞர்கள் நமக்காக விட்டுச் சென்ற அவர்களின் சிந்தனை படைப்புகள் தான் என்றால் அஃது மிகையாகாது.
அத்தகைய பெருமைக்குரியவர்கள் வரிசையில் 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவராக இன்றைக்கும் தமிழர் நெஞ்சங்களில் மறைந்தும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் டாக்டர் மு.வரதராசனார் எனும் தமிழ்த் தொண்டராவார்.தமிழ் இலக்கிய வரலாற்றில் இவர் ஆற்றிய சீரிய தமிழ்த்தொண்டு காலத்தால் அழியாத பொக்கிசம் எனலாம்.தமிழ் இலக்கிய உலகில் ஈடு இணையற்ற பெரும் படைப்பாளியாக விளங்கிய அவரது பெயர் ஒலிக்காத தமிழ் இல்லங்களும் நல்லுள்ளங்களும் இல்லை எனலாம்.
தமிழ் இலக்கியம்,கல்வி மற்றும் மொழியியல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய மு.வரதராசன் எனும் “மு.வ” அவர்கள் முனுசாமி – அம்மாக்கண்ணு தம்பதிகளின் மகனாக வேலம் என்னும் சிற்றூரில் 1912இல் ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்தார்.திருவேங்கடம் எனும் இயற்கை பெயர் கொண்ட அவருக்கு அவரது தாத்தாவின் பெயரான வரதராசன் என்பதே நிலையான அடையாளமாகவும் தமிழ் உலகின் சொத்தாகவும் நிலைத்துப் போனது.
பன்முக ஆற்றல் வாய்க்கப் பெற்ற மனிதநேயரான மு.வ நவீனத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத முகவரியாக திகழ்கிறார்.தனது நாவல்களின் மூலமும் திருக்குறளுக்கு வழங்கிய பொருளுரையின் வாயிலாகவும் இன்னும் தமிழர் நெஞ்சங்களிலும் தமிழின் உயிர்ப்பிப்பிலும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.
துவக்கக் கல்வியை வேலத்தில் நிறைவு செய்த வரதராசன், உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் பயின்றார். படிப்பை முடித்தபின் சிலகாலம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். உடல்நலக் குறைவு ஏற்படவே அப்பணியிலிருந்து விலகினார். ஓய்வுக்காகத் தன் கிராமத்துக்குச் சென்றவர், கல்வி ஆர்வத்தால் முருகையா முதலியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். 1935ல் வித்வான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காகத் திருப்பனந்தாள் மடம் வழங்கிய பரிசுத்தொகை ரூபாய் ஆயிரத்தைப் பெற்றார். தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அந்தக் காலத்தில்தான் மாமன் மகள் ராதாவுடன் திருமணம் நடைபெற்றது. திருநாவுக்கரசு, நம்பி, பாரி என மூன்று மகவுகள் வாய்த்தன. 1939வரை திருப்பத்தூரில் ஆசிரியராகப் பணியாற்றினார். முனைந்து பயின்று பி.ஓ.எல். பட்டம் பெற்றார். ஓய்வு நேரத்தில் கதை, கவிதைகள் எழுதத் தொடங்கினார். குழந்தைகளுக்காக பாடல் மற்றும் கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவராகத் திகழ்ந்த இவரது முதல் நூல் ‘குழந்தைப் பாட்டுக்கள்’ 1939ல் வெளியானது.
இலக்கியக் கட்டுரைகள்,ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றி பல சிறுகதைகள் புதினங்களையும் அவர் படைத்துள்ளார்.மேலும்,மொழியியல் ஆய்வுகளிலும் இலக்கிய வரலாற்று ஆய்வுகளிலும் தீவிர முனைப்புக் காட்டிய மு.வ அதேகாலகட்டத்தில் தனது தீவிர கவனத்தை படைப்புலகிலும் செலுத்தினார்.சங்க இலக்கியத்தின் தாக்கத்தால் விளைந்த ‘பாவை’, இலக்கியம் கூறும் களவு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்டது. இதுதவிர அவர் எழுதிய குறிப்பிடத்தக்க புதினங்களாக ‘கயமை’, ‘அல்லி’, ‘அந்தநாள்’, ‘நெஞ்சில் ஒரு முள்’, ‘மண்குடிசை’, ‘வாடாமலர்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம். சமூக அவலங்களைச் சுட்டும் அவரது சிறுகதைகளான ‘எதையோ பேசினார்’, ‘தேங்காய்த் துண்டுகள்’, ‘விடுதலையா?’, ‘குறட்டை ஒலி’ போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
அதுமட்டுமின்றி,அவர் எழுதிய “அகல் விளக்கு” சாகித்ய அகாடமி விருது பெற்ற

Mu.Varatharasanar

தோடு ஓர் ஓவியனின் வாழ்க்கையைக் கூறும் “கரித்துண்டு” அக்காலகட்டத்தில் வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.இன்றைக்கும் மு.வ நாவல்கள் குறித்து பேசும் போது ‘கரித்துண்டு” குறித்து பேசாத வாசகர்கள் இல்லையெனலாம்.ஆய்வுகள், சிறுகதை,புதினங்கள்,கவிதைகள் என பல்வேறு கோணங்களில் படர்ந்து விரிந்த மு.வ.வின் தமிழ் சிந்தனை குறிப்பிடத்தக்க நாடகங்களையும் தமிழுலகிற்கு கொடுத்துள்ளது.
மேலும்,மு.வ எழுதிய, ‘பெண்மை வாழ்க’, ‘அறமும் அரசியலும்‘, ‘குருவிப் போர்’, ‘அரசியல் அலைகள்’ போன்ற கட்டுரைகள் சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அவரது ‘அரசியல் அலைகள்’, ‘மொழியியற் கட்டுரை’ நூல்களுக்குத் தமிழக அரசின் சிறப்புப் பரிசு கிடைத்தது. ‘திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்‘, ‘மொழிநூல்’, ‘விடுதலையா?’, ‘ஓவச் செய்தி’ போன்ற நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றதோடு இவரது ‘பெற்றமனம்‘ நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வ தமிழ் மொழியோடு ஆங்கியம், தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்த நிலையில் அவரது படைப்புகள் ஆங்கிலம்,இந்தி,மராத்தி,ரஷ்ய மொழி, சிங்களம், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன என்பது அவரது எழுத்துக்கும் சிந்தனைக்கும் கிடைத்த பெரும் அங்கிகாரமாகும்.எல்லாவற்றிற்கும் மேலாக இன்றும் மு.வ. அனைவராலும் நினைவுகூரப்படுவது அவருடைய எளிய திருக்குறள் தெளிவுரைக்காக என்பதில் மாற்றுகருத்து இருக்க முடியாது. அழகுத் தமிழில் அனைத்துத் தமிழரும் எளிதில் விளங்கிக்கொள்ளுகின்ற வகையில், அரசியல் சார்போ, அறிவுக்குப் பொருந்தாத புதிய விளக்கங்களோ இன்றி இத்தெளிவுரையைத் ’தெளிந்ததோர் நல்லுரை’யாய்ப் படைத்த தமிழ்ச் சான்றோர் மு.வ. அவர்கள் என்பது அனை வரும் ஒப்புக்கொள்ளும் விடயமாகும்.
தமிழ் இலக்கியத்துறைக்கு கடித இலக்கியம் என்ற புதியதொரு இலக்கியத்தை அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு. தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு, நண்பர்க்கு என்று அனைத்து உறவுகட்கும், நண்பர்கட்கும் ’நயத்தகு நாகரிக நடையில்’ மடல் வரையக் கற்றுத்தந்த பண்பாளர் மு.வ. அவர்கள். பின்பு இக்கடித இலக்கியத்தை அரசியல் துறையில் பயன்படுத்திப் பெரும் வெற்றி கண்டவர் அறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் எழுத்தாளர்களில் குறிப்பாக பேராசிரியர்களில் பெரும்பாலானோர் தமிழைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மு.வ.அவர்கள் மொழியோடு தமிழினத்தை பற்றியும் சிந்திக்க தொடங்கினார்.அவரது அந்த சிந்தனைதான் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக தனித்துக்காட்டியது.அவரது அத்தகைய உயரிய சிந்தனைக்கு சான்றாகத்தான் அவர் எழுதிய கடித இலக்கிய படைப்பில் தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது,வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என தமிழினத்தின் அடையாளத்தையும் அஃது பேசுகிறது.
சிறந்த தமிழறிஞரும், சிந்தனையாளருமான மு.வ. சமுதாய ஒழுக்கத்திலும், தனிமனித ஒழுக்கத்திலும் பெரிதும் அக்கறை கொண்டவர். தன் படைப்புக்கள் அனைத்திலும் இதனை அவர் வலியுறுத்தத் தவறவில்லை என்றே கூறலாம். நாவல், சிறுகதை, நாடகம், இலக்கியக் கட்டுரைகள், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று நூல்கள், மொழியியல் நூல்கள் என்று நம் தாய்த்தமிழில் அவர் தொடாத – அவர் கரம் படாத துறைகளே இல்லை எனும் அளவிற்குப் பல்வேறு களங்களிலும் தன் ஆக்கங்களைத் தந்து அன்னைத் தமிழுக்கு அணிசேர்த்துள்ளார் அத்தமிழ் பேரறிஞர்.
இலக்கியத் திறனாய்வும் மொழியியலும் அவர் காலத்தில்தான் தமிழில் புதிய துறைகளாகத் தோற்றம் கொண்டன. அவற்றின் வளர்ச்சிக்காக. இலக்கியத் திறன், இலக்கிய மரபு, இலக்கிய ஆராய்ச்சி, எழுத்தின் கதை, மொழியின் கதை, மொழி வரலாறு, மொழிநூல், மொழியியற் கட்டுரைகள் முதலியவற்றை எழுதினார். இவை புதிய துறைகளில் தமிழ் வளர்வதற்கு அவர் ஆற்றிய அரும்பணிகள் என்று சொன்னால் மிகையல்ல.
மு.வ.வின் எழுத்துக்கள் ஆர்ப்பாட்டமில்லாதவை. அமைதியான ஆற்றொழுக்கான நடையில் இருப்பவை.அன்பை அடிப்படையாகக் கொண்டவை. அதேசமயம் தாம் சொல்ல வந்த கருத்தை மனதிற் தைக்கும்படிச் சொல்லுபவை. அவருடைய கதைகூறும் பாணி தன்மை ஒருமையில், கதை நாயகனே கதை கூறும் பாணியில் அமைந்திருக்கும். கதைகளில் ஆங்காங்கே தனது கருத்துகளை – அறிவுரைகள் போல்; பொன்மொழிகள் போல் – வலியுறுத்திக் கூறியிருப்பார். வாழ்க்கையின் பிணக்குகளைத் தீர்க்கும் வல்லமை அறிவைவிட அன்பிற்கே உண்டு என்பதைத் தனது பல படைப்புகளில் மு.வ. வலியுறுத்தியுள்ளார். மு.வ.வின் எழுத்துகள், படிப்பவர்களை மேலும் சிந்திக்கத் தூண்டும் எழுத்துகள் என்பதைவிட படிப்போரின் உள்ளத்தை மேலும் மேலும் பண்படுத்தும் எழுத்துகள் என்று கூறினால் மிகையல்ல. அதேசமயம் மாணவர்களுக்குப் போதிக்கும் பேராசிரியர் பணியின் தாக்கம் அவரது எழுத்தில் தென்பட்டன என்றாலும் அக்காலத்துச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மு.வ. மதிக்கப்பட்டார்.
1961ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரான மு.வ., 1971 வரை அப்பணியில் தொடர்ந்தார். அதன்பின் மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப் பெற்றார். அப்பணியைச் செவ்வனே ஆற்றினார். சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், ரஷ்யா, மலேசியா, இலங்கை, பாரிஸ், எகிப்து என உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1972ல் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி இவரது தமிழ்ப் பணிக்காக டி.லிட். பட்டம் வழங்கிக் கௌரவித்தது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.தான். உலகம் சுற்றி வந்த முதல் தமிழ்ப் பேராசிரியரும் அவரே எனும் சிறப்பையும் அவர் மட்டுமே பெறுகிறார்.
தூய தமிழில் பிறமொழிக் கலப்பு இல்லாமல் எழுதியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்களில் ஒருவர்தான் டாக்டர் மு.வ.அவரது சிறுகதை தொடங்கி எந்தவொரு எழுத்திலும் பிற மொழி கலப்பை அவர் அனுமதித்ததில்லை எனலாம்.இது அவர் தனித்தமிழ் மீது கொண்டிருந்த தீராத பற்றும் காதலும் என்று கூட கூறலாம்.அவரது தமிழுக்காகவே அவருடைய புதினங்களை ஆசையோடு தமிழ் ஆர்வாலர்களும் மாணவர்களும் வாசித்த ஒரு காலம் இருந்தது.இன்றைக்கும் அவரது எழுத்தின் எளிமையும் தமிழின் இனிமையும் அவரது எழுத்தின் மீதான தீவிர காதலை ஒவ்வொரு வாசகனுக்கும் தரவல்லதாகவே உள்ளது.
எழுத்துக்களுக்கு தனி ஆளுமையும் ஆற்றலும் உண்டு என அறிஞர்கள் கூறியிருப்பது,மு.வ.வின் விடயத்தில் அஃது மெய்யாகிப் போகிறது.வருடங்கள் உருண்டோடியும் தலைமுறைகள் கடந்தும் மு.வ.வின் எழுத்துகள் இன்றைக்கும் பேசப்படுவதோடு எல்லா நிலை மாணவர்களுக்கான பாடநூலாகவும் அந்து இருப்பதை காணும் போது காலம் கடந்து வாழும் பண்பு எழுத்துகளுக்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு உணரவே முடிகிறது.
மு.வ. அன்றைக்கு சொன்ன சிந்தனைகளில் “எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமை ஒழிக்க முடியவில்லை,ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை”,”உலகத்துக்கே பொதுவான பெரிய குறைபாடுகள் இரண்டு உள்ளன.ஒன்று மூடநம்பிக்கை,மற்றொன்று ஆடம்பரம்” போன்றவைகள் காலம் கடந்தும் இன்றைக்கும் பொருந்துபவைகளாகவே உள்ளது.இவைகள் மட்டுமின்றி அவரது ஒவ்வொரு சிந்தனை துளிகளும் மனித வாழ்விற்கான தேவையாகவே எக்காலத்திற்கும் பொருந்தியிருப்பதே அவரது நனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் சிந்தித்த அந்த மகத்தான தமிழறிஞர் தனது 62வது அகவையில் 1974இல் அக்டோபர் 10ஆம் தேதி தன் மொழிக்காகவும் இனத்திற்காகவும் சிந்திப்பதை நிறுதிக்கொண்டார்.அவர் சிந்திப்பதை நிறுதிக் கொண்டாலும்,இதுவரை அவர் சிந்தித்த சிந்தனைகள் வாயிலாக தமிழ்நெஞ்சங்களில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.
டாக்டர் மு.வ. வள்ளுவத்தையும் காந்தியத்தையும் தனது வாழ்வியல் நெறியாக கொண்டவர். அவர் பகவத் கீதையை தூற்றாமலே திருக்குறளைப் போற்றியவர். அவர் திருக்குறளை நடத்தியவர் மட்டுமல்லர், அதன்வழி நடந்தவர். அவரைக் குறை சொன்னவர்கள் உண்டு. அவர் யாரைப் பற்றியும் குறை சொன்னதே இல்லை. மாணிக்கவாசகரிடத்தும் தாயுமானவரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய பாடல்களைப் பலகால் ஓதி ஓதி உள்ளத்தைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர். ஆனால், திருத்தலங்களுக்குச் செல்வதிலோ, சமயச் சின்னங்களை அணிந்துகொள்வதிலோ விருப்பம் இல்லாதவர். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் அவருடைய சிறப்பு இயல்புகள்.
தமிழ் இலக்கிய உலகமும் தமிழர் வரலாறும் இன்னும் எத்தனையோ எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் பேராசிரியர்களையும் இம்மண்ணில் பெறலாம்.இறுதிவரை கொள்கைப் பிடிப்போடும்,வள்ளுவ நெறியோடும் தமிழை சுவாசித்து தமிழர் நெறியோடு வாழ்ந்த பெருந்தகையாளரை இனி வருங்காலத்தில் காண்பது அரிதே.இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வளர்ச்சியிலும் வரலாற்றிலும் டாக்டர் மு.வரதராசனாருக்கு தனி இடம் உண்டு என்பதில் கிஞ்சீற்றும் ஐயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + 20 =