இயற்கையையும் சுற்றுச்சூழலையும்
பாதுகாக்கத் தவறினால் மலேசியா
உயிர்கள் வாழ தகுதியற்றுப் போகும்!!

மனிதன் வாழ்வதற்குரிய சகல நிலைகளும் முழுமையாகவும் நிறைவாகவும் இருந்த இந்த அழகான உலகம் மனிதர்களின் அலட்சியத்தாலும் அக்கறையின்மையாலும் தொடர்ந்து பெரும் அழிவை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டது.இந்நிலை தொடருமானால் அடுத்த தலைமுறைக்கு இந்த உலகம் அந்நியமாகி போகும்.உயிர் வாழ்வதற்கான தகுதியற்ற இடமாய் இந்த பூமி மாறிவிடும்.
இந்த உலகின் இயற்கை அமைப்பில் அனைத்து உயிரினங்களும் தங்களது பங்களிப்பினை சிறப்பாகவே மேற்கொள்கின்றன.ஆனால்,நாகரீகம் பெற்று,ஆறாம் அறிவோடு சிந்திக்கும் மனிதன் மட்டும் தனது சுய லாபத்திற்கு இயற்கையை அழிப்பதோடு மட்டுமின்றி தனது சுற்றுச்சூழலை பாதுகாப்பதி துளியும் அக்கறை செலுத்துவது இல்லை.
பாதுகாக்க வேண்டிய இயற்கையை வரையறையின்றி அழிக்கிறான்.எதைப்பற்றியும் அக்கறையில்லாமல்.வாழும் காலத்தில் மனிதன் வாழ்வதற்கான அனைத்தையும் அழித்து விட்டு உலகை சுடுகாடாய் ஆக்கிவிட்டு அடுத்த தலைமுறையை இங்கு நடைபிணங்களாய் உருவாக்க இன்றைய நவநாகரீக மனிதன் முனைந்து விட்டான் என்றால் அஃது பொய்யல்ல.
இயற்கையோடும் உயிரினங்களோடும் வாழ வேண்டிய மனிதன் தொடர்ந்து தனது பேராசையாலும் அலட்சியத்தாலும் எல்லாவற்றையும் இழந்து உலகத்தை சுடுகாடாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.இன்று உலகின் பல்வேறு அழிவுக்கு மனித நடவடிக்கைகள் தான் பெரும் காரணியம்.சுற்றுச்சூழலை பாதுகாக்க மனிதன் தவறிய காரணியத்தால்தான் பூமியின் வெப்பம் நம்மை வாட்டி வதைக்கிறது. மேலும்,சுனாமியின் சீற்றத்திற்கும் ஓசோன் படலத்தின் ஓட்டைக்கும் மனித சமூகமே பொறுப்பேற்க வேண்டும்.தொழிற்சாலைகளின் கழிவு,காடுகள் அழிப்பு,வாகனங்களின் புகை,அலட்சியமாய் வீசியெறியப்படும் குப்பைகள்,சிகரெட் புகை,நெகிழி பயன்பாடு என பல்வேறு நிலைகளிலும் சுற்றுச்சூழலுக்கும் இயற்கைக்கும் பெரும் பாதிப்பை மனித இனம் உருவாக்கி வருகிறது. அதுமற்றுமின்றி,மனித இனத்தின் பொறுப்பற்ற போக்கினால் கடல்வாழ் உயிரினங்களும் மிருங்கங்களும் பிராணிகளும் கூட இவ்வுலகிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது.உலக உயிரினங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டதுமதனை உணவு சங்கி என்போம்.இந்த உணவு சங்கிலியில் எதாவது ஒன்று முற்றாக தொலைந்து போகும் நிலையில் பெரும் பாதிப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்திடக்கூடாது.
காடுகளையும் இயற்கை வளங்களான மரங்களையும் வெட்டி சாய்த்து விட்டு மழைக்காக மரங்களை நட முனைவது மல்லாக்க படுத்து எச்சில் உமிழ்வதற்கு ஈடானது.காடுகளும் மரங்களும் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும்.மரங்களும் காடுகளும் அழிந்து விட்ட நிலையில்தான் உலகம் தற்போது அதன் பருவநிலை மாற்றத்தில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.இன்று மலேசியாவில் நாம் எதிர்நோக்கும் வெப்பான சூழலுக்கு நாட்டிலிருந்து காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டது தான் என்றால் அஃது மறுப்பதற்கில்லை.
தெளிந்த நீரும் பரந்த நிலமும் உயர்ந்த மலையும் அடர்ந்த காடும் இருந்தால் மட்டுமே அஃது இயற்கையின் அரண் அல்லது பலம் என சுமார் 2000ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை,
“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்”

எனும் குரலின் மூலம் இயற்கையின் பெருமையையும் சுற்றுச்சூழலின் அவசியத்தையும் நினைவுறுத்தியுள்ளார்.பண்டையக்காலத்தில் சுற்றுச்சூழலையும் இயற்கையையும் நம் முன்னோர்கள் பாதுகாத்து வாழ்ந்தனர் என்பதைவிட அதனோடு ஒன்றியே இருந்தனர் என்பதுதான் நிஜம். சுற்றுச்சூழல் குறித்த பார்வையில் நம் முன்னோர்கள் தனித்துவ கவனம் செலுத்தி வந்தனர்.இயற்கைதான் இந்த உலகின் மிகப் பெரிய பள்ளிக்கூடம் எனவும் அவர்கள் நம்பினார்கள்.மலைகளும் மரங்களும் ஆறுகளும் கடல்களும் பறவைகளும் விலங்குகளும் நமக்கான வாழ்க்கையினை தினம் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன.நமக்கான வாழ்வியலை கற்றுக் கொடுக்கும் இயற்கை ஆசானை பாதுகாக்க வேண்டியது நம் கடமைதானே.இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டியதும் அதன் இயல்பு தொலையாமல் காக்க வேண்டியதும் மனித இனத்தின் கடமை. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு மீதிலான அக்கறையும் விழிப்புணர்வும் உலக மக்களிடையே 70களின் தொடக்கத்திலேயே பற்றிக் கொண்டது என்றுதான் கூற வேண்டும்.இருந்த போதிலும் அக்காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான செயல்பாடும் பங்களிப்பும் விவேகமாய் கையாள தவறியதன் விளைவினால் இந்த 2019ஆம் ஆண்டில் உலகின் பெரும் பகுதியில் இயற்கையும் சுற்றுச்சூழலும் அழிந்த அதன் அடையாளத்தை தொலைத்து நிற்கிறது. 70களில் உலகின் சுற்றுச்சூழலும் இயற்கையும் வருங்காலத்தில் பெரும் அழிவிற்கு வித்திடும் என தூரநோக்குடன் சிந்தித்த ஐக்கிய நாடுகள் அவை அந்த அழிவிலிருந்து இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டி ஒவ்வோர் ஆண்டின் ஜூன் 5ஆம் நாளை உலக சுற்றுச்சூழல் நாளாக அறிவித்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஐக்கிய நாடுகள் அவை 70களில் தொடங்கியிருந்தாலும் இந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத்தான் உலக மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வும் அதன் அவசியமும் சற்று கூடுதலாக மேலோங்க தொடங்கியுள்ளது என கூறலாம்.இயற்கையின் அழிவு மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் போதுதான் இயற்கையை பாதுகாக்கும் அவசியம் மனிதனால் உணரப்படுகிறது.இருந்த போதிலும் அஃது இன்னமும் காலத்திற்கு உகந்த விழிப்புணர்வை கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் தொடங்கப்பட வேண்டும்.அதன் அவசியம் ஒவ்வொருவருக்கும் உணர்த்தப்பட வேண்டும்.ஒவ்வொருவரிடமும் சுற்றுச்சூழல் புரட்சி உயிர்ப்பிக்க வேண்டும்.தொடரும் அலட்சியங்களும் பொறுப்பற்ற செயல்களும் அழகான இந்த உலகத்தை அதன் இயல்பிலிருந்து அழிப்பதோடு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் பயனற்ற நிலையில் உருவாக்கி விடுகிறார்கள்.
இன்று உலகில் செழிப்பாக இருந்த பகுதிகளில் வறண்ட பூமியாக மாறி வருவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதும் கூட இயற்கை அன்னை நமக்கு அளித்த மண்ணை முறையாக பாதுகாக்க தவறியதுதான்.காட்டை அழிப்பதும் மண்ணுக்கு நஞ்சை உரமாய் இட்டு அதனை மலட்டுத் தன்மையாக்குவதும் இயற்கை பாதுகாப்பிற்கு செய்யும் உச்சநிலை கொடுமை அது.மண்ணை மலடாய் ஆக்குவது தாயின் கருவறையை அழிப்பதற்கு நிகரானது.மலேசியாவில் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அலட்சியமும் இயற்கை வளமும் எழிலும் மிகுந்த மலேசியாவில் கடந்தக்காலங்களோடு நடப்பியல் சுற்றுச்சூழலில் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருப்பதை நாம் அறிந்து கொண்டுதான் இருக்கிறோம்.மலேசியாவை பொறுத்தமட்டில் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதும் அது குறித்த அக்கறை என்பதும் அலட்சியத்தின் வெளிப்பாடாகவே உள்ளது எனலாம்.
மலேசியாவில் இதற்கு முன்னர் இல்லாத நிலையில் பினாங்கிலும் கிளந்தானிலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தை குறிப்பிடலாம்.அவ்விரு மாநிலங்கள் தவிர்த்து பேராக்,சிலாங்கூர் ஆகிய மாநிலங்களும் அடிக்கடி வெள்ளத்தால் பெரும் அழிவையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதித்துக் கொண்டிருக்கிறது.மேம்பாட்டுத் திட்டங்கள் எனும் மனித செயல்களால் அழிக்கப்படும் மரங்களும் காடுகளும் மலைகளும் விடும் சாபம் தான் இந்த வெள்ள பேரழிவுக்கு காரணியம் என்பதை மறுக்க முடியுமா? நம் நாட்டில் இருக்கும் ஆறுகளில் 50 விழுக்காடு ஆறுகள் மாசுபடுத்தப்பட்டுக் கிடக்கிறது.இதில் 5 விழுக்காடு ஆறுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனவும் கடந்த 2017இன் விபரங்கள் காட்டுகின்றன.அந்த எண்ணிக்கை நடப்பியல் சூழலில் பன்படங்கு அதிகரித்திருக்கும் என்பதில் துளியும் ஐயம் கொள்ளத் தேவையில்லை.அதற்கு சான்றுதான் அண்மையில் ஜொகூரில் கிம் கிம் ஆற்றில் நிகழ்ந்த சம்பவம்.அதனால்,பள்ளி மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டதையும் நாம் மறந்திட இயலாது.
மேலும்,அண்மையக் காலமாய் நம் நாட்டில் காடுகள் அழிப்பு என்பது சரவசாதாரணமான ஒன்றாக விளங்குகிறது.காடுகளை தொடர்ந்து அழித்து வருவதால் நாட்டின் வெப்பத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு பருவநிலை மாற்றத்தாலும் மக்கள் பெரும் பாதிப்படைகிறார்கள்.அதுமட்டுமின்றி,நாட்டில் காடுகளை அழிப்பதால் இந்நாட்டின் பூர்வகுடிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமின்றி வாழ்வியல் பண்பாட்டையே தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். காடுகள் அழிப்பு மற்றும் ஆறுகள் மாசுபடுத்தப்படுவதால் இந்நாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது பூர்வகுடிகள் தான்.அவர்களை இந்நாட்டில் சக மனிதர்களாய் கருதுவதும் எண்ணிப்பார்ப்பதும் அந்நியமாகி இருப்பதால் இது குறித்து பெரும் அளவில் யாரும் அக்கறை கொள்வதில்லை என்பதுதான் உண்மை.மக்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கம் கூட சில வேளைகளில் அந்த மக்களுக்கு எதிராகவே உள்ளது.அதிகார வர்க்கம் போலீஸ் மற்றும் வன இலாகாவின் துணையோடும் பூர்வகுடி மக்களுக்கு எதிராக இயங்குவதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். மேலும்,நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது நாட்டின் எழில் மிகுந்த மலைகள் காணாமல் போன சுவடுகளை பார்க்கவே முடிகிறது.வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளில் தொடக்கத்தில் பச்சை பசுமையாக மலைகள் காட்சி அளித்து வந்த நிலையில் தற்போது பச்சை கம்பளம் திருடப்பட்டு வெறிச்சோடி கிடக்கிறது.எல்லாம் காசுக்காக மனிதன் செய்யும் அட்டூழியங்கள்.
மலேசியாவைப் பொறுத்தமட்டில் காற்று தூய்மைக்கேடு, ஆறு,நீர் தூய்மைக்கேடு, குப்பைகள், காடுகள் அழிப்பு,மலைகள் அழிப்பு என பெரும் பட்டியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அண்மையில்,வெளிநாடுகளின் கழிவுகள் மலேசியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதெல்லாம் நாட்டின் சுற்றுச்சூழல் மீது துளியும் அக்கறையில்லா போக்கு.அதற்கு அனுமதி கொடுத்தது யார்?மலேசியா உயிர்கள் வாழும் நாடா அல்லது உலக குப்பைத் தொட்டியா என கோபம் அனலாய் பீறிட்டு வருகிறது. நாட்டிலிருக்கும் பெரும்பான்மையான விவசாய நிலங்கள் மலட்டுத் தன்மையை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டது.அதிக லாபம்,அதிக உற்பத்தியை குறுகிய காலத்தில் பெறுவதற்காக நிலங்களில் பாய்ச்சப்படும் உரங்களும் மருந்துகளும் மண்ணில் நஞ்சாய் கலந்து மண்ணின் இயல்பு தன்மையை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது.அடுத்த தலைமுறைக்கு இம்மண் விவசாயம் செய்ய சாத்தியமற்றதாய் விளங்கும் என்பது மறுத்திட முடியாத உண்மை.
அதுபோலவே ஆற்றுமணல் எடுத்தலும் நாட்டின் இயற்கைக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை இன்னமும் மலேசியர்கள் அறிந்திருக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.ஆற்று மணலை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும்.இது நாட்டில் நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கிடும் சூழலை உருவாக்கும்.இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் வற்றிப் போனதற்கு அங்கு நிகழ்ந்து வந்த மோசமான மணல் கொள்ளைகள் தான் காரணம் என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.
இந்நிலை மலேசியாவிலும் உருவாக சாத்தியமுள்ளது.முன்பு உள்நாட்டின் தேவைக்கு பயன்படுத்தப்பட்ட மணல் தற்போது வெளிநாட்டின் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.2018இல் மலேசியாவிலிருந்து 50 டன் மணல் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தியாவை காட்டிலும் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மணலின் விலை குறைவாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. நாட்டில் அவ்வப்போது சில இடங்களிலும் மாநிலங்களிலும் கார்கள் இல்லாத அல்லது பயன்படுத்தாத நேரமாக சில மணிநேரங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தியும் வருகிறார்கள்.இதன் மூலம் கார்ஃபன் பிரச்னையை குறைக்க முடியும் என நம்புகிறார்கள்.ஆனால்,அந்த சில மணி நேரங்கள் அதுவும் வாரத்தில் ஒருமுறை மாதத்தில் ஒரு முறை என இருப்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.
மாறாய்,நாட்டில் காஃபன் பிரச்னைக்கு தீர்வு காணவும் காற்றில் அது அதிக அளவில் கலக்காமல் இருக்கவும் ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் செயல்பாடுகளையும் அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.எஃகோ (நுஊடீ) வாகன பயன்பாட்டிற்கு நாட்டை முழுமையாக தயார்ப்படுத்த அரசாங்கம் முன் வரவேண்டும்.பொது போக்குவரத்து மற்றும் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதோடு விரிவுபடுத்தவும் வேண்டும்.மேலும்,எவையெல்லாம் இயற்கை சுற்றுச்சூழலுக்கு ஆபத்தோ அவற்றை செய்வதில் மலேசியர்கள் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள். நெகிழிக்கு தடை விதிக்கப்பட்ட போதும் அதனை பயன்படுத்துவது குறைந்தபாடில்லை.நாட்டில் அமல்படுத்தப்பட்டும் திட்டங்கள் வெறும் திட்டங்களாய் இருக்கும் வரை நன்மையை கொடுக்கப்போவதில்லை.ஆக்கப்பூர்வ செயல்பாடும் கண்காணிப்பும் இங்கு அலட்சியமாய் கடந்து சென்றுவிடுகிறது என்பதுதான் இயல்பு. மலேசியர்களிடையே இயற்கை சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையினை பெரும் அளவில் மேற்கொள்ள வேண்டியுள்ளது.மனிதர்கள் செய்யும் இயற்கை சுற்றுச்சூழல் அழிப்புகளால் நம் நாடு வருங்காலத்தில் மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களும் பிராணிகளும் கூட வாழத் தகுதியற்ற நாடாய் உருமாறிவிடும் என்பது வெறும் வார்த்தையாக யாரும் எண்ணிட வேண்டாம் அது பெரும் எச்சரிக்கை என்பதை நினைவுறுத்த வேண்டியுள்ளது.
நாம் அனைவரும் நம் நாட்டின் இயற்கை சுற்றுச்சூழல் மீது தனி கவனம் செலுத்தினால் மலேசியாவை அடுத்த தலைமுறைக்கு பொக்கிசமாக வழங்கிட முடியும் .இல்லையேல்,இந்நாடு சுடுகாடாய் தான் காட்சியளிக்கும்.எந்த உயிரினமும் வாழ தகுதியற்ற நிலை உருவாகும் போது இந்நாட்டின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். அரசாங்கம் மட்டும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தால் போதாது.திட்டங்கள் ஆக்கப்பூர்வமாய் அமல்படுத்தப்பட வேண்டும்.இயற்கை சுற்றுச்சூழல் தன்னார்வலர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிட வேண்டும்.இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த அறிவும் அதுசார்ந்த கல்வியும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.ஒவ்வொரு மலேசியரும் நாட்டை தன் உடலாகவும் உயிராகவும் நேசித்தால் மட்டுமே மலேசியாவின் இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான நிலையில் விட்டுச் செல்ல முடியும் என்பது மறுத்திட இயலாத உண்மை.
ஒவ்வொரு மலேசியரும் நம் நாட்டின் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் நேசிக்க வேண்டும்.மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்.எவையெல்லாம் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கு பாதகமானது என கருதுகிறோமோ அதனை நாம் முதலில் செய்யாமல் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனிடமும் மெய்பிக் கும் தனிமனித ஒழுக்கம் தான் மாபெரும் மாற்றத்திற்கான ஆணிவேர்.மாறுவோம் மாற்றுவோம்.நாட்டின் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + seventeen =