இன உணர்வுகள் தூண்டப்படுவதால் கவனம் தேவை; வேற்றுமைகளை மறந்து ஒன்று சேருங்கள்


மலாய்க்கார வாக்காளர்களைக் கவர்வதற்காக தனது சீனர் ஆதரவு தோற்றத்தைக் கைவிட ஜசெக முயன்று வருவதாக குறிப்பிட்ட சில தரப்பினர் குறைகூறி வருகின்றனர். இதனால் அக்கட்சி ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது.
மலாய்க்காரர்களின் வாக்கு களைக் கவரும் நோக்கத்திற்காக ஜசெக தன்னைத்தானே சிறுமைப்படுத்திக் கொள்ளக்கூடாது அல்லது தரம் தாழ்ந்து போகக்கூடாது என்று அக்கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் ரோனி லியூ அண்மையில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மலேசியாகினி இணையப் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஜசெகவின் அரசியல் கல்வி இயக்குநர் லியூ சின் தோங், சம்பந்தப்பட்ட நபர்கள் இதுபோன்ற இன உணர்வுப் பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கண்டித்ததோடு ஜசெகவின் தலைவர்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்படும்படி கேட்டுக் கொண்டார்.
எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசிய அவர், குறிப்பிட்ட சில நபர்கள் இனவாத மோதலைத் தூண்டி விடுவதாகக் குற்றஞ்சாட்டினார். இந்த காரணத்தினால்தான், கட்சியின் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி காண்பதற்கும் தாம் தயாராக இருப்பதாக ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அண்மையில் அறிவித்திருந்தார் என்றும் லியூ சொன்னார்.
மத்திய நிர்வாகக் குழு தேர்தல் ஜூன் 20ஆம் தேதி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் மிக அதிகமான வாக்குகள் பெற்று கிட் சியாங் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுபோன்ற இனஉணர்வு பேச்சுகளினால்தான் வெறும் 22 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ நேர்ந்ததாகவும் ஜொகூர் ஜசெக தலைவருமான லியூ சுட்டிக் காட்டினார்.
அடுத்த பொதுத்தேர்தல் வரை அல்லது அடுத்த பத்தாண்டுகள் வரை நமது பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நமது உறுப்பினர்கள் விவாதிக்கலாம். இதன் மூலம் ஒரு தெளிவான முடிவுக்கு நம்மால் வர முடியும். இனஉணர்வை பலர் தூண்டி விடுகின்றனர் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆனாலும், அவர்கள் அனைவரையும் கட்சித் தேர்தலின்போது நம்மால் ஒருங்கே கொண்டு வர முடியும் எனும் நம்பிக்கை உள்ளது.
கட்சியில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், நம்மால் மேலும் முன்னேறிச் செல்ல முடியும். இதனால், அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள இந்நேரத்தில் நிலைத்தன்மை மிக்க கட்சி எனும் பெருமையை ஜசெகவினால் பெற முடியும் என்றார் லியூ.
பல ஆண்டுகளாக கிட் சியாங் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டிய லியூ, எண்பது வயதான அந்த மூத்த தலைவர் அடுத்த பொதுத்தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இப்போது பொதுத்தேர்தல் நடைபெறுமானால், கிட் சியாங்கை போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும். நாட்டின் தற்போதைய நிச்சயமற்றத்தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அடுத்த பொதுத்தேர்தல் முக்கியமான ஒன்றாகும். எனவே, அவர் தேர்தலில் போட்டியிட வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பற்றி கருத்துரைத்த லியூ, அடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக அக்கூட்டணி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ள வேண்டும். இதர எதிர்க்கட்சிகளுடன் கனிவாக நடந்து கொள்ளவும் வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + fifteen =