இன்று 15ஆம் ஆண்டு நினைவு நாள்!

0

மலேசிய தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவான் என்று போற்றப்பட்ட இளைய தமிழவேள் ஆதி குமணன் கடந்த 28.3.2005 நாள் காலமானார். அன்றைய தினம் தமிழ்ப்பத்திரிகை உலகின் இருண்ட தினமாகும்.
பினாங்கு மாநிலத்தில் 9.2.1950 பிறந்த ஆதி குமணன் தனது பள்ளிப் படிப்பை தமிழகத்தில் மேற்கொண்டார். பிறகு தமிழகத்தின் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்து மலேசியா திரும்பினார். படிப்பு முடிந்து நாடு திரும்பி ஆதி குமணனை இதயம் இதழின் ஆசிரியர் அப்போது உதயம் பத்திரிகை ஆசிரியராக இருந்த அமரர் எம். துரைராஜ், தமிழ்மலர் பத்திரிகையின் நிறுவனர் அருள்மணி என்.டி.எஸ். ஆறுமுகத்திடம் அறிமுகப்படுத்தினார். உடனே அவர் தமிழ் மலரில் துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்படித்தான் ஆதி குமணனின் பத்திரிகை வாழ்க்கை தமிழ் மலரிலே தொடங்கியது.
தினசரிப் பத்திரிகை உலகில் கால்பதித்த ஆதி குமணன் தமிழ் மலரிலிருந்து வெளியேறிய பிறகு வானம்பாடி வார இதழை நடத்தினர். வானம்பாடி வார இதழ் மலேசியா தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தது.
ஒவ்வொரு வாரமும் வானம்பாடி வாரப் பத்திரிகைக்காக காத்திருக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தையும் தாண்டியது. புதிய எழுத்தாளர்கள் உருவெடுத்தார்கள். புதிய வாசகர்கள் தோன்றினார்கள். தமிழ் வளர்ந்தது. தமிழ்ப்பற்றும் வளர்ந்தது.


வானம்பாடியை அவர் கையில் ஏந்திக் கொண்டு உணவகங்கள், தெருவோர கடை வீதிகளுக்குச் சென்று ஒவ்வொரு வாசகராகரை அணுகி பத்திரிகை விற்பனை முகவராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


பின்னர் அன்றைய மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ டத்தோ சி. சுப்ரமணியம் துணையுடன் தமிழ் ஓசை தினசரியைத் தொடங்கினார். தமிழ் ஓசைக்காக அவர் தன் தோல் மீது சுமந்து வளர்த்த வானம்பாடியை விட்டுக் கொடுத்தார்.
தமிழ் ஓசை தமிழ்ப்பத்திரிகை உலகில் ஒரு இந்தியர்களின் உரிமைப்போராட்டத்தின் முன்னோடியாக இருந்தது. அப்பத்திரிகை நீதிமன்ற வழக்கில் முடப்பட்ட பொழுது வீழ்ந்தான் அபிமன்யு என்று அதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் ஆதி குமணன். பின்னர் சிக்கந்தர் பாட்ஷாவின் மலேசிய நண்பனை குத்தகை அடிப்படையில் 1990இல் ஆரம்பித்து 2005ஆம் ஆண்டு தனது இறு நாள் வரை நடத்தி வந்தார். மலேசிய நண்பனை முதல்நிலை பத்திரிகையாக உருவாகுவதற்கு ஆதி குமணன் என்ற ஒற்றை தாராக மந்திரமே முழுக் காரணம் என்பதை தமிழ் வாசகர்கள் அறிவர்.


ஆதி குமணனின் அரசியல் கட்டுரைகள் ‘பார்வை’ எனும் தலைப்பில் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனை போலவே தனது ஞாயிறு கேள்வி பதில் பகுதியை ‘ஞானபீடம்’ என்ற தலைப்பில் எழுதி வந்தார். ஞாயிற்றுக்கிழமை வந்தால் ஞானபீடமே தமிழ் வாசகர்கள் எண்ணத்தில் தோன்றும் அளவிற்கு அவரது பதில்கள் காரசாரமாக இருக்கும். மக்களை அதிகமாகவே படிக்கத் தூண்டியது ஆதி குமணனின் எழுத்து என்றால் அது மிகையல்ல.
அவருக்கு அரசியல் ஈடுபாடு அவ்வளவாக இல்லாத போதிலும் டான்ஸ்ரீ டத்தோ எம்.ஜி பண்டிதனுக்கு ஆதரவு கரம் வழங்க வேண்டும் என்பதற்காக ஐபிஎப் கட்சியின் துணைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.


அன்னாரின் மறைவு தமிழ் பத்திரிகையில் மட்டுமல்ல இந்நாட்டு இந்தியர்களுக்கு ஓர் இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் எழுத்துலகில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்காமல் அவர் இறுதி நாள் வரை கொள்கையோடு வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவோடு செயல்படும் தமிழ் மலர் பத்திரிகை அவருடைய கொள்கையை தீப்பந்தமாக ஏந்தி தொடர்ந்து இந்தியர்களின் குரலாக இருக்கும் என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.
-டத்தோ எஸ்.எம். பெரியசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 1 =