இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அக்கினிப் பரீட்சையில் டான்ஸ்ரீ முஹிடின் அரசு

இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் வேளையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் உருவான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு சோதனைக் களமாக அமைந்துள்ளது.
2018இல் நடந்த நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைத்தது.
ஆனால், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்துக் கட்சி வெளியேறுவதாக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து துன் மகாதீர் தலைமையிலான அரசாங்கம் 22 மாதங்களில் ஆட்சிப் பறிகொடுத்தது.
கெஅடிலான் கட்சியில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறிய டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, அம்னோ, பாஸ், மசீச, மஇகா, சராவாக் ஜிபிஎஸ் கட்சிகளின் ஆதரவோடு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை அமைத்து டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மார்ச் 1ஆம்தேதி நாட்டின் 8ஆவது பிரதமராக பதவியேற்றார்.
இவர் பதவியேற்ற சிறிது காலத்திற்குள் நாட்டில் கோவிட் -19 தாக்கம் ஏற்பட்டது. இதனால் மே 18ஆம் தேதி மாமன்னர் உரையோடு நாடாளுமன்றக் கூட்டம் முடி வடைந்தது.
அன்றையக் கூட்டத் தொடரில் டான்ஸ்ரீ முஹிடின் அரசாங்கத்திற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே இருந்தது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 109 உறுப்பினர்கள் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தொடங் கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது நாடாளுமன்ற சபாநாயகராக டான்ஸ்ரீ முகமட் அரிப், துணை சபாநாயகர்களாக தெலுக் இந்தான் ஜசெக ஙா கோர் மிங், பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரஸிட் ஒஸ்மான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கெஅடிலான் கட்சியில் இருந்து விலகிய டத்தோஸ்ரீ ரஸிட் பெர்சத்துவில் இணைந்துள்ளார்.
சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப், துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கை அகற்றுவதற்கு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் பிரதமர் தனது ஆதரவை இழக்க நேரிடும்.
இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மாமன்னர் நாடாளு மன்றத்தைக் கலைக்கலாம். அல்லது அதிக ஆதரவு உள்ளவரை புதிய பிரதமராக நியமிக்கலாம்.
பிரதமருக்கு ஆதரவாக ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம், சபா பெர்ணாம் உறுப்பினர் முகமட் பாசியா, பாசிர் பூத்தே உறுப்பினர் நிக் முகமட் ஸாவாவி ஆகியோர் ஆதரவு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
லங்காவி நாடாளுமன்ற உறுப்பினரான துன் டாக்டர் மகாதீர் முகமட், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.
சபாநாயகரை நீக்கும் தீர்மானத் தில் வெற்றிபெற்றால் டான்ஸ்ரீ முஹிடின் சோதனையில் இருந்து மீண்டுவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.
முதல் கட்ட சோதனையில் வெற்றிபெற்றால் இந்த நாடாளு மன்றத் தேர்வுக் குழுவையும் டான்ஸ்ரீ முஹிடின் அமைப்பார்.
இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங், புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பட்சிலா யூசோப், லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்ஸா ஸைனுடின், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி ஆகியோரும் இடம்பெறுவார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர்த்து இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மேலும் இரு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
கூட்டரசு சட்டத்தில் திருத்தம் செய்து ஒரு பிரதமர் இரு தவணைகள் மட்டுமே பிரதமராக இருக்க வகை செய்வது மற்றும் போலீஸ் துறையில் நடக்கும் முறையீடு தொடர்பில் சுயேச்சை விசாரணைக் குழு அமைப்பது தொடர்பிலும் முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது.
இந்த மசோதாவுக்கு பக்காத்தான் ஹராப்பான் உட்பட வாரிசான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர்த்து கோவிட் -19 தாக்கம் தொடர்பிலும் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 16 =