
ஜொகூர் மாநிலச் சட்டமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் எனும் ஊகங்களின் நடுவே அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட் இன்று சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துகிறார். சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பாகத்தான் அச்செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது எனும் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநிலத் தேர்தல் குறித்து குறிப்பாக வேட்பாளர்களின் நியமனம் குறித்து ஜொகூர் அம்னோ இன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் அம்மாநிலத்தின் 26 டிவிஷன்களின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்படும் என்று அம்னோ வட்டாரங்கள் குறிப்பிட்டன.
சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால், அது விரைவில் நடைபெறும் என்று அம்னோ தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அம்னோ மாநிலத் தொடர்புக் குழுவின் தலைவருமான மந்திரி பெசாருக்கு மட்டுமே எப்போது சட்டமன்றம் கலைக்கப்படும் என்பது தெரியும். அது குறித்து சனிக்கிழமை ( இன்று) அறிவிக்கப்படலாம் என்று அத்தலைவர் கூறினார்.
கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் கடந்த மாதம் மரணமடைந்ததைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் அம்னோ தலைமையிலான மாநில அரசுக்கு ஓர் இடம் மட்டுமே பெரும்பான்மையாக உள்ளது. எனவே, அம்மாநிலத்தில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறலாம் என ஊகங்கள் கூறப்படுகின்றன.
தற்போது ஜொகூர் சட்டமன்றத்தில் தேசிய முன்னணிக்கு மொத்தம் 28 இடங்களும் பக்காத்தான் ஹராப்பானுக்கு 27இடங்களும் உள்ளன.
தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக வரும் செவ்வாய்க்கிழமையன்று மாநில அம்னோ பொறுப்பாளர்களை அம்னோ தலைவர் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.
மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பது குறித்த கடிதமொன்றை மாநிலச் சட்டமன்றச் சபாநாயகர் சுஹைஸான் கயாட்டுக்கு மந்திரி பெசார் ஹஸ்னி அனுப்பி வைத்துள்ளது என்று இணையதளப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இஸ்தானா ஜொகூர் அரண்மனையின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஞாயிற்றுக்கிழமையன்று சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்றும் அம்னோ வட்டாரங்களை மேற்கோள்காட்டி அப்பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
ஆனால், சட்டமன்றக் கலைப்பு தொடர்பான கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுவதை சட்டமன்றச் சபாநாயகர் சுஹைஸான் மறுத்துள்ளார் என்று தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.