இன்னும் 6 நாட்களே உள்ளன ; சபா சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது

சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருக்கும் வேளையில், அங்கு தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. தேசிய முன்னணி பெரிக்காத்தான் நேஷனல், பி.பி.எஸ் ஆகிய உறுப்புக் கட்சிகளைக் கொண்ட சபா மக்கள் கூட்டணிக்கு பிரதமரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின், தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடி உட்பட தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் சபாவில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே வேளையில், முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால், கூட்டரசு அரசாங்கத்தின் பலம் பொருந்திய கூட்டணிக்கு எதிராக தாம் சளைத்தவர் அல்லர் என்பதை நிரூபிக்கும் வகையில் தமது வாரிசான் கூட்டணிக்காக பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருவதோடு வாக்காளர்களை நேரடியாக சந்திப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
வாரிசான் கட்சி கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை தற்காத்துக் கொள்ளும் ஷாபி அப்டால் முயற்சிக்கு உதவும் வகையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்களான ஜ.செ.க.வின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், லிம் கிட் சியாங், கோபிந்த் சிங் டியோ , பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு ஆகியோரும் பக்காத்தான் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாரிசான் கட்சி இம்முறை சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் திட்டமிட்ட முறையில் பிரசாரத்தை வலுப்படுத்தி வருகிறது.
5 கட்சிகளைச் சேர்ந்த 447 வேட்பாளர்கள் 73 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி வாரிசான் கூட்டணிக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும்தான்.
17 தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் உறுப்புக் கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் பிரசாரம் உச்சக் கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 13 =