இன்ஃபுளூவென்ஸா வேகமாகப் பரவும்; மரணத்தையும் ஏற்படுத்தும்!

0

இன்ஃபுளூவென்ஸா கிருமி மிகவும் ஆபத்தானது. அது வேகமாகப் பரவக்கூடிய தன்மையுடையது. அந்த நோய்த் தாக்கத்தால் ஏற்படும் விடாத இருமல் நுரையீரலுக்கு பெரும் ஆபத்தை விளைவித்து சுவாசிப்பதற்குச் சிரமத்தை ஏற்படுத்தி முடிவில் மரணத்திற்கும் வழி வகுக்கலாம் என்று மருத்துவ நிபுணர் டாக்டர் ஸுபைடி அமாட் தெரிவித்தார்.
காற்றின் மூலமாக இந்த நோய்க் கிருமி விரைவாக மற்றவரைத் தாக்குகிறது. குறிப்பாக தும்மலின்போது வெளிப் படும் உமிழ் நீர் மற்றவர்கள் மீது பட்டால் உடனே அவர்களுக்கும் இந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நிச்சயம் வைட்டமின் மருந்துகளை உட் கொள்ள வேண்டும். அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் மிகவும் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும்.
ஒருவருக்கு இன்ஃபுளூவென்ஸா நோய்த்தாக்கம் கண்டிருந்தால் கூடுமானவரை அவர் மற்றவர்களுடன் நெருங்கிப் பழகக்கூடாது. ஏனெனில் பேசும்போது வெளிப்படும் உமிழ்நீர் கூட அந்நோய்ப் பரவலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றார் அவர்.
எனவே சளி, காய்ச்சல், தும்மல் ஆகிய உடல் உபாதைகள் மட்டுமின்றி வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருப்பவர்கள் கூட அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று இந்நோய்த்தாக்கம் குறித்து பரிசோதித்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு நாளும் நமது பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக தொடுதல் நடவடிக்கையும் உள்ளது. நாள்தோறும் பல பொருட்களை நாம் தொடுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அது போன்ற சமயங்களில் கைகளை ஒரு முறைக்குக் இரு முறை சுத்தமாகக் கழுவுவது மிகவும் சிறந்தது.
அதே சமயத்தில் அதிகமாக நீர் அருந்த வேண்டும். ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். அதோடு போதுமான உறக்கமும் அவசியம் தேவை என அவர் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 11 =