இனி இபிஎஃப் சந்தாத்தொகை முதல் கணக்கில்தான் சேர்க்கப்படும்

ஊழியர்கள் சேமநிதி வாரிய (இபிஎஃப்) உறுப்பினர்கள் அனைவரின் சந்தாத்தொகையும் இப்போது முதல் அவர்களின் முதல் கணக்கில் ( அக்கவுண்ட் 1) வரவு வைக்கப்படும். உறுப்பினர்களின் குறிப்பாக கோவிட்-19 தாக்கத்தினால் தங்களின் பணத்தை மீட்டுக் கொண்டவர்களின் சேமிப்பை மீண்டும் ஈடுசெய்வதற்கு அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று துணை நிதியமைச்சர் முகமட் ஷஹார் அப்துல்லா குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பொருளாதார ஊக்குவிப்புத் தொகுப்புகளின் ஒரு பகுதியாக ஐ-லெஸ்தாரி, ஐ-சினார் மற்றும் ஐ-சித்ரா போன்ற திட்டங்களின் மூலம் இபிஎஃப் உறுப்பினர்கள் 10,100 கோடி வெள்ளியை மீட்க் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். புதிய சந்தாத்தொகைள் அனைத்தும் முதல் கணக்கில் வரவு வைக்கப்படும். மீட்டுக் கொள்ளப்பட்ட பணத்தை மீண்டும் ஈடுசெய்யும் வரையில் அந்நடவடிக்கை தொடரும். அதன் பிறகு, முந்தைய நடைமுறைப்படி முதல் கணக்கில் 70 விழுக்காடு சந்தாத்தொகையும் இரண்டாவது கணக்கில் 30 விழுக்காடு சந்தாத்தொகையும் சேர்க்கப்படும் என்று மக்களவையில் முகமட் ஷஹார் குறிப்பிட்டார். இபிஎஃப் உறுப்பினர்கள் முதல் கணக்கில் உள்ள தங்கள் சேமிப்புத்தொகையைப் பணிஓய்வு பெற்ற பிறகுதான் மீட்டுக் கொள்ள முடியும். ஆனால், இரண்டாவது கணக்கில் உள்ள பணத்தை வீடு, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக மீட்டுக் கொள்ள முடியும். இபிஎஃப் நிதியிலிருந்து கோடிக்கணக்கான பணம் துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல் கணக்கில் சந்தாத்தாரர்களின் சேமிப்பை அதிகரிக்க அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் பாஸ் கட்சியின் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினர் சே அப்துல்லா மாட் நாவி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது முகமட் ஷஹார் அந்த விவரங்களை வழங்கினார். சேமிப்புத் தொகையை மீண்டும் அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். உறுப்பினர்கள் தங்களின் லாபஈவுத்தொகையை அனுபவிப்பதற்கு ஏதுவாக மாதாந்திர அடிப்படையில் பணத்தை மீட்க அனுமதிப்பதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்றார். இதனிடையே, இவ்வாண்டுக்கான லாபஈவுத்தொகை அடுத்தாண்டு அறிவிக்கப்படும் என்றும் முகமட் ஷஹார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 6 =