இனவாத விவகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பிய சத்தியநாதனுக்கு மலேசிய கால்பந்து சங்கம் ஆதரவு

மலேசிய லீக் கால்பந்துப் போட்டியில் விளையாடி வரும் விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளரை இனத் துவேஷ பாணியில் சமூக வலைத்தளங்களில் சில தரப்பினர் குறைகூறி வருவதை சாடிய சிலாங்கூர் காற்பந்து குழுவின் பயிற்சியாளர் பி.சத்தியநாதனை மலேசிய கால்பந்து லீக் மற்றும் மலேசிய கால்பந்து சங்கம் தற்காத்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று பேரா குழுவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் சமநிலை கண்டது. இந்த ஆட்டத்தில் தாம் களம் இறங்கிய ஆட்டக்காரரான கே.பிரபாகரனை இனத் துவேஷ பாணியில் சில சமூக வலைத்தளவாசிகள் குறைகூறியதால் சத்தியநாதன் வேதனைக்கு உள்ளானார்.
தனது சொந்த இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக சில சமூக வலைத்தளவாசிகள் குறை கூறியிருந்தது குறித்தும் அவர் தமது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
கால்பந்து விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு எதிராக இனத்துவேஷ பாணியில் குறைகூறுவதும் விமர்சனம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டுமென மலேசிய கால்பந்து லீக் போட்டி அமைப்பின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ அப்துல் கனி ஹசான் கேட்டுக்கொண்டார். சமூக வலைத்தளத்தில் இனத்துவேஷ பாணியில் விளையாட்டாளர்களை விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்யும்படி சம்பந்தப்பட்ட தரப்பினரை அவர் கேட்டுக்கொண்டார்.
இன ரீதியில் சலுகை காட்டும் வகையில் தமது ஆட்டக்காரர்களை சத்தியநாதன் தேர்வு செய்வதாக கூறுவோரை மலேசிய கால்பந்து சங்கமும் சாடியது. விளையாட்டாளர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்களை பயிற்சியாளர்கள் ஒவ்வோர் ஆட்டத்திலும் களம் இறக்குகின்றனர். பல இன மக்களைக் கொண்ட நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம், தேசிய கால்பந்து குழுவில்கூட பல இனங்களையும் கொண்ட கால்பந்து விளையாட்டாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே இன ரீதியில் விளையாட்டாளர்களையும் பயிற்சியாளர்களையும் குறைகூறும் போக்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென மலேசிய கால்பந்து சங்கத்தின் துணைத்தலைவர் டத்தோ முகமட் யூசோப் மஹாடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 4 =