இந்த முறை சுங்கை சிப்புட்டில் வெற்றி பெறாவிட்டால் அத்தொகுதியை மறந்திட வேண்டியது தான்

ம.இ.காவின் பாரம்பரிய தொகுதியாக இருக்கும் சுங்கை சிப்புட்டில் கடந்த காலங்களில் ம.இ.கா வேட்பாளர்கள் தோல்வி அடைந்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என இனியும் கிளைத் தலைவர்கள் சாக்குப் போக்கு சொல்லக் கூடாது. டத்தோஸ்ரீ எஸ். தேவமணி இந்த தொகுதிக்கு தாமதமாக வந்தார். லோக நாதன் என்ற தனிமனிதனின் வேலைப்பாடு என்றெல்லாம் இனியும் கதை சொல்ல வேண்டாம். வரும் பொதுத் தேர்தலில் ம.இ.கா வெற்றியை உறுதி செய்ய ம.இ.கா கிளைத் தலைவர்கள் கட்டாயம் பங்காற்ற வேண்டும் என்று சுங்கை சிப்புட் தொகுதி ம.இ.கா 27-ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் ம.இ.கா தேசியத் தலைவர், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த தொகுதியில் ம.இ.கா வெற்றி பெறாவிட்டால் வரும் காலங்களில் இந்த தொகுதியை நாம் மறந்திட வேண்டியது தான். இங்குள்ள இந்தியர்கள் நமக்கு வாக்களிக்க கிளைத் தலைவர்கள் ஆதரவினை திரட்ட வேண்டும். கிளைத் தலைவர்கள் வேலை செய்ய வேண்டிய காலக்கட்டம் இது.
மேலும், நாம் மக்களைத் தேடிச் செல்லும் நேரம் வந்து விட்டது. அலுவலகத்தில் மட்டுமே உட்கார்ந்து கொண்டு மற்றவர்களுக்கு உதவி கிடைப்பதைத் தடுக்கும் ம.இ.கா கிளைத் தலைவர்கள் இனியும் அவ்வாறு இருக்கக் கூடாது. மக்களுக்கு உதவி செய்வதில் கிளைத் தலைவர்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். அனைவரையும் அனுசரித்து, ம.இ.கா.விற்கு ஆதரவினை திரட்ட வேண்டுமே தவிர ம.இ.காவிற்கு கிடைக்கும் ஆதரவினை சில செயல்களினால் தடுக்க வேண்டாம்.
இது ஜாதி கட்சியல்ல. ஜாதி அடிப்படையில் யாரேனும் செயல்பட்டால் நான் நீக்கி விடுவேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்நிகழ்வில் சுங்கை சிப்புட் தேசிய முன்னணியின் நாடாளுமன்றத் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் ஸுல்கிப்ளி சுங்கை சிப்புட் பாஸ் தலைவர், இஸ்ரான் பாஹாபி இஸ்மாயில், பேராக் மாநில ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவர், டத்தோ வ.இளங்கோ, சுங்கை சிப்புட் ம.இ.கா தொகுதித் தலைவர் எஸ். இராம கவுண்டர் மற்றும் கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =