இந்திய இசைக்குயில் மௌனமானது

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, பாலிவுட்’ பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வென்டிலேட்டர்’ மூலம் சுவாசித்து வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நேற்று முன்தினம் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை உயிர் இழந்தார். லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1929ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி, மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் பண்டிட் தீனாநாத் மங்ஷே்கர் – ஷெவந்தி மங்கேஷ்கர் ஆகியோரின் மகளாக பிறந்தார் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா மங்கேஷ்கர். பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் தனது ஐந்தாவது வயதிலேயே இசையை தனது தந்தையிடமிருந்தே கற்க ஆரம்பித்தார். இவரது தந்தை தேர்ந்த பாடகராகவும், நாடக நடிகராகவும் இருந்ததால் அவரது இசை நாடகங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். அமாநத் கான், பண்டிட் துளசிதாஸ் ஷர்மா மற்றும் அமான் அலி கான் சாஹிப் ஆகியோரிடமும் பாரம்பரிய இசையை முறைப்படி கற்றார். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பெறாத லதா மங்கேஷ்கர், சிறு வயதிலேயே பிரபல பாடகர் கே.எல்.சைகலிடம் இசையால் ஈர்க்கப்பட்டார். 1942ல் இவரது தந்தை காலமான பிறகு, 13 வயதே நிரம்பிய இவருக்கு இவரது குடும்ப நண்பரான மாஸ்டர் வினாயக், தனது ‘நவ்யுக் சித்ரபட் மூவி கம்பெனி’ சார்பில் 1942ல் எடுக்கப்பட்ட “பஹிலி மங்கலா கர்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பளித்தார். இதன் பிறகு 1943ல் “கஜாபாவ்” என்ற மராத்தி மொழித் திரைப்படத்தில் மாதா ஏக் சபூத் கி துனியா பதல் தே து என்ற பாடல் தான் இவர் பாடிய முதல் ஹிந்தி பாடலாக அமைந்தது. 1948ல் குலாம் ஹைதர் இசையில் வெளிவந்த “மஜ்பூர்” திரைப்படமே அவரது திரையிசை வாழ்க்கையில் ஒரு திருப்புமனையை ஏற்படுத்தியது. பின்னர் 1949ல் அசோக் குமார், மதுபாலா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படமான “மஹல்” திரைப்படத்தில் இவர் பாடிய “ஆயேகா ஆயேகா” என்ற பாடல் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது. இதனைத் தொடர்ந்து “பர்ஸாத்”, “தீதார்”, “பைஜு பாவ்ரா”, “அமர்”, உரான் கத்தோலா, “ஸ்ரீ 420”, “தேவ்தாஸ்”, “சோரி சோரி”, “மதர் இந்தியா” என 50களிலும், “முகல் ஏ ஆஸம்“, தில் அப்னா அவுர் ப்ரீத் பராய், “பீஸ் ஸால் பாத்”, “கைடு”, “ஜுவல் தீப்”, “வோ கோன் தி?” “மேரா சாயா” என 60களிலும் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் 77 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் லதா மங்கேஷ்கர் என்றால் அது மிகையன்று. நவ்ஷத், ஷங்கர் ஜெய்கிஷன், சி.ராமச்சந்திரா, அனில் பிஸ்வாஸ், ஹேமந்த் குமார், ரவி, சலீல் சௌத்ரி, எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், மதன் மோகன், கல்யாணஜி ஆனந்த்ஜி, ராகேஷ் ரோஷன், ஆனந்த் மிலிந்த், அனுமாலிக், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் பணியாற்றிய பெருமை மிக்கவர். பின்னணி பாடுவதோடு ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும், இசையமைத்தும் இருக்கின்றார். ஏறக்குறைய 20 இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தனிப்பாடல்களாக 25000 பாடல்கள் வரை பாடியிருக்கின்றார். அதிகமான பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கின்றார். பின்னணி பாடகியாக மட்டுமல்லாது ராம் ராம் பாவ்னே, மராத்தா டிட்டுகா மெல்வாவா, மொஹித்யாஞ்சி மஞ்சுளா, ஸாதி மான்ஸா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகி, இசையமைப்பை தாண்டி வாடல், ஜாஞ்சார், காஞ்சன் கங்கா, லெகின் ஆகிய 4 படங்களை தயாரித்துள்ளார். லதா மங்கேஷ்கர் வகித்த பதவி, பெற்ற விருதுகள் உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு: லதா மங்கேஷ்கர், 1999 நவ.,22 முதல் 2005 நவ.,21 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார். *1969ல் “பத்ம பூஷன்“ விருது *1989ல் “தாதா சாஹேப் பால்கே விருது *1999ல் ஆண்டு “பத்ம விபூஷன்“ விருது *2001ல் இந்திய அரசின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். *2008ல் இந்தியாவின் 60ஆவது சுதந்திர தினத்தன்று “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். சினிமா துறையில் வழங்கப்படும் தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். * 1972ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “தேசிய விருது” “பரிச்சாய்” என்ற படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது. * 1974ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “தேசிய விருது” “கோரா காகஸ்” திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது. * 1990ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “தேசிய விருது” “லேகின்“ படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது. *1966ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “மஹாராஷ்டிர மாநில சினிமா விருது” “ஸாதி மான்ஸா” மராத்தி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. *1966ல் சிறந்த இசையமைப்பாளருக்கான “மஹாராஷ்டிர மாநில சினிமா விருது” “ஸாதி மான்ஸா” மராத்தி திரைப்படத்திற்காக கிடைக்கப் பெற்றார். *1977ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “மஹாராஷ்டிர மாநில சினிமா விருது” “ஜெய்த் ரே ஜெய்த்” மராத்தி திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. *1997ல் “மஹாராஷ்டிரா பூஷன் விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார். *2001ல் “மஹாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கி கவுரவிக்கப்பட்டார். *1959ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “மதுமதி” திரைப்படத்தில் “ஆஜா ரே பர்தேசி” என்ற பாடலுக்காக வழங்கப்பட்டது. *1963ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “பீஸ் ஸால் பாத்” படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” பாடலுக்காக. *1966ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “காந்தான்“ படத்தில் “துமே மேரி மந்திர் துமே மேரி பூஜா” பாடலுக்காக. *1970ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “பிலிம் பேர் விருது” “ஜீனே கி ராஹ்” படத்தில் “ஆப் முஜே அச்சே லக்னே லகே” பாடலுக்காக. *1993ல் “பிலிம் பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி வுரவிக்கப்பட்டார். *1994ல் “ஹம் ஆப்கே ஹைன் கோன்“ படத்தில் “தீதி தேரா தேவர் தீவானா” பாடலுக்காக “சிறப்பு பிலிம் பேர் விருது” வழங்கப்பட்டது. *2004ல் பிலிம் பேர் விருதின் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவில் “சிறப்பு விருதும், தங்கக் கோப்பையும்“ வழங்கி கவுரவிக்கப்பட்டார் *6 பல்கலைக் கழகங்களின் டாக்டர் பட்டங்கள், இது போல் இன்னும் ஏராளமான மாநில மற்றும் பிற விருதுகளுக்குச் சொந்தக்காரர் லதா மங்கேஷ்கர். 1942ம் ஆண்டு தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஆரம்பித்த லதா கடந்த 60 வருடங்களில் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பல கதாநாயகிகளுக்குப் பாடியள்ளார். தனித்துவமான அவரது குரல் சமீப கால கதாநாயகிகளுக்கும் கூட பொருத்தமாக இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது. தமிழில் இவரது குரலில் படங்களில் இடம்பெற்று, வெளியான பாடல்களில் மூன்றே மூன்று பாடல்களை மட்டுமே பாடியுள்ளார் லதா. அந்த மூன்று பாடல்களும் இளையராஜா இசையில் அமைந்தவை. பிரபு, ராதா மற்றும் பலர் நடித்து இளையராஜா இசையமைப்பில், சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து வெளிவந்த ‘ஆனந்த்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆராரோ… ஆராரோ..’ பாடல்தான் அவர் தமிழில் பாடிய முதல் பாடல். சிவாஜி குடும்பத்தினரும், லதா குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள் என்பதால் அவரை அழைத்து வந்து பாட வைத்தனர் சிவாஜி குடும்பத்தினர். அதற்கடுத்து 1988ல் கமல்ஹாசன், அமலா நடித்து இளையராஜா இசையில் வெளிவந்த ‘சத்யா’ படத்தில் ‘வளையோசைகலகலவென…’ பாடலை எஸ்பி பாலசுப்ரமணியத்துடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் மாபெரும் ஹிட்டடித்த பாடல். இன்றும் பல மேடைக் கச்சேரிகளில், டிவி நிகழ்ச்சிகளில் இப்பாடல் பாடப்பட்டு வருகிறது. லதா மங்கேஷ்கர் என்றாலே தமிழ் சினிமா இசை ரசிகர்களுக்கு இந்தப் பாடல்தான் ஞாபகம் வரும்.என் ஜீவன் பாடுது என்ற படத்தில் எங்கிருந்தோ அழைக்கும் பாடலை பாடகர் மனோவுடன் சேர்ந்து பாடியிருந்தார். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். லதா மங்கேஷ்கரின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனித்தார். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். அவர் எப்போதும் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பினார். அவரிடம் நான் அளவற்ற அன்பை பெற்றிருப்பதை பெருமையாக கருதுகிறேன். லதா மங்கேஷ்கரின் மறைவால், வாடும் ஒவ்வொரு இந்தியர்களுடன் சேர்ந்து நானும் துக்கப்படுகிறேன். அவரது குடும்பத்தினருடன் பேசி இரங்கலை தெரிவித்துள்ளேன். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவர் விட்டு சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும் குரல் நிலைத்து நிற்கும் என பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துகொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 1 =