இந்தியர்களை கேவலப்படுத்திய ஸக்கீரை வெளியேற்றுக!..

0

கோலாலம்பூர், ஆக. 15-
இந்தியர்களை விசுவாசமற்றவர்கள் என்று அவமதித்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸக்கீர் நாயக் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 3 இந்திய அமைச்சர்கள் நேற்று பிரதமர் துன் மகாதீரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தனர்.
ஸக்கீர் நாயக் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவர் தொடர்ந்து இந்நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கக்கூடாது என்ற எங்கள் நிலைப்பாட்டை பிரதமரிடம் தெரிவித்துவிட்டோம் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், தகவல் மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறினர். எங்களுடைய கருத்துகளை துன் மகாதீர் கேட்டுக்கொண்டார். இதுபற்றி முடிவெடுக்கும் பொறுப்பை அவரிடம் விட்டுவிட்டோம். விரைந்து முடிவெடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறினர். மேலும் ஸக்கீர் இந்நாட்டில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்த இடமளிக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டோம். அவரது உரைகளும் அறிக்கைகளும் மக்கள் மனதைப் புண்படுத்துகின்றன.

இனப் பகைமையைத் தூண்டுகின்றன. நாட்டின் இன நல்லிணக்கத்தையும் பொது ஒழுங்கையும் பாதிக்கக்கூடிய அளவில் அவர் அறிக்கை வெளியிடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
அண்மையில் கிளந்தான் கோத்தாபாருவில் பேசிய ஸக்கீர், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விட மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு 100 மடங்கு வசதிகளும் சலுகைகளும் செய்து தரப்பட்டும், அவர்கள் மலேசியப் பிரதமர் மகாதீரை விட இந்தியப் பிரதமர் மோடியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்று மிக சர்ச்சைக்கிடமான வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சு இந்திய சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது பற்றி தொடர்ந்து பேசிய அமைச்சர்களில் ஒருவரான டாக்டர் சேவியர், இது போன்ற நிந்தனைக்குரிய கருத்துகளை பேச ஸக்கீருக்கு அனுமதி தரக்கூடாது. இந்நாடு, பல இன சமயங்களைக் கொண்ட நாடாக இருந்தாலும் நாம் தொன்றுதொட்டு சமய நல்லிணக்கத்தால் உருவாகியிருக்கிறோம்.
ஸக்கீரின் கருத்துகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால், அது தவறான முன்னுதாரணமாகிவிடும். இன சமய பிளவுகளை ஏற்படுத்திவிடும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here