இந்தியர்களுக்கு ஏமாற்றம் அளித்த அமைச்சரவை!

0


கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மலேசிய இந்தியர்கள் எதிர்பார்க்காத வகையில் 4 அமைச்சர்கள் ஒரு துணையமைச்சர் பதவி வழங்கி இந்திய சமுதாயத்தை பெருமைப்படுத்தியது. இந்த நாட்டிற்கு தங்களது கடின உழைப்பின் வழி பொருளாதார ஏற்றத்தை ஏற்படுத்திய இந்திய சமுதாயத்திற்கு சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகாலத்திற்குப் பிறகு அரசியல் ரீதியில் கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரமாக அது அமைந்தது. அதே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இந்தியர்களுக்கு கடந்த காலத்தைப் போல் ஒரே ஓர் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்பு தேசிய முன்னணி காலத்தில் இருந்த 3 துணையமைச்சர்கள் பதவியும் குறைந்து ஒரே ஒரு துணையமைச்சர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பான் வழங்கிய அங்கீகாரத்திற்கு வெகு அப்பாற்பட்டு பாரிசான் நேசனல் அரசாங்கத்தை விட குறைந்த அங்கீகாரமே இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, இந்திய சமுதாயத்திற்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்கள் போராடி பெற்ற ஓர் உயரிய அரசியல் அங்கீகாரம் ஆட்சி கவிழ்ப்பு வழியாக அரியணைக்கு வந்துள்ள இந்த புதிய அரசாங்கத்தில் முற்றாக பறிபோய் உள்ளது. இன மத வாத கொள்கையை முன்நிறுத்தி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற இந்த அரசாங்கம் இந்தியர்களுக்கு பாரபட்சமாகவே நடந்து கொள்ளும் என்பதற்கு அதன் முதல் அறிவிப்பான அமைச்சரவைப் பட்டியல் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
முஹிடின் அறிவித்த புதிய அமைச்சரவையில் தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத 2 அமைச்சர்களும் 4 துணையமைச்சர்களும் புதிய மேலவை நியமனத்தின் வழி தங்கள் பதவியை பெறுகின்றனர். இவர்களில் ஒருவர் கூட இந்தியர் அல்ல. ஏன் இந்த பாரபட்சம்?
மஇகாவிற்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் இருக்கிறார் என்றாலும், தற்சமயம் மஇகாவின் உதவித் தலைவராக இருக்கின்ற செனட்டர் டத்தோ டி.மோகன், கெடா மாநில மஇகா தலைவர் செனட்டர் டத்தோ ஆனந்தன் ஆகிய 2 மேலவை உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் யாராவது ஒருவராவது இந்தப் பதவி நியமனத்திற்கு பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களுக்கு அமைச்சர் அல்லது துணையமைச்சர் பதவி பெறுவதற்குத் தகுதி இல்லை என்றால், மஇகா அம்னோவிற்கு விட்டுக் கொடுத்த கேமரன் மலை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மஇகாவின் தேசிய உதவித் தலைவர் டத்தோ சி. சிவராஜ் அல்லது மஇகாவின் மகளிர் பகுதி தலைவி உஷா நந்தினி, தேசிய பொதுச் செயலாளர் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எம்.அசோஜன் ஆகியோர் புதிய மேலவை நியமனத்தின் வழி அமைச்சரவையில் அமைச்சர் அல்லது துணையமைச்சராக நியமனம் பெற்றிருக்க வேண்டும். மஇகாவின் முன்னாள் தேசிய துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் 2 முறை மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு அதன்வழி துணையமைச்சராக பதவி ஏற்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பக்காத்தான் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குலசேகரன், சேவியர் ஜெயகுமார், கோவிந்த் சிங் ஆகியோர் அமைச்சர்களாகவும் சிவராசா துணையமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத வேதமூர்த்தி மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு அதன்வழி 4 ஆவது அமைச்சராக பதவி ஏற்கும் தகுதியை அவர் பெற்றார்.
ஆகவே, இந்தியர்களுக்கு இதைவிட சிறப்பாக அங்கீகாரம் வழங்குவதற்கு வாய்ப்புகள் இருந்தும் இந்த புதிய அரசாங்கம் இந்தியர்களை மீண்டும் எடுப்பார் கைப்பிள்ளை நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு முன்னோடியாக பக்காத்தான் ரக்யாட் கூட்டணி பினாங்கு மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வழங்குவதாக வாக்குறுதி வழங்கவில்லை. ஆனால், அப்படி ஆட்சி வாய்ப்பு கிடைத்தவுடன் பினாங்கு மாநிலத்தில் இந்தியர் ஒருவரை துணைமுதல்வராக நியமித்து அந்த மாநிலத்தில் இந்தியர்களுக்கு ஒரு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கியது.
அதேபோல், கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தில் எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற எந்த வாக்குறுதியையும் பக்காத்தான் அரசாங்கம் வழங்கவில்லை. ஆனால், பக்காத்தான் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது 4 அமைச்சர்கள் ஒரு துணையமைச்சர் நியமனங்களை செய்து இந்தியர்களுக்கு இம்மண்ணில் வரலாற்றில் இல்லாத புதிய அங்கீகாரத்தை வழங்கி இந்திய மக்களுக்கு பெருமை சேர்த்தது.
மேலும் சட்டத்துறைத் தலைவராக வழக்கறிஞர் துறையில் பெரிதும் மதிக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டான்ஸ்ரீ டோமி தோமஸ் நியமிக்கப்பட்டு இந்தியர்களுக்கு வரலாற்றில் மற்றோர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஆனால், இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்திற்கு எதிராக தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர் அம்னோ, பாஸ் கட்சி உறுப்பினர்கள் என்பது நாடறிந்த உண்மை. அவ்வகையில், இந்தப் புதிய அரசாங்கம் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு பாரபட்சமாகவே செயல்படும் என்ற கருத்தும் அச்சமும் நிலவி வந்தது என்பதும் உண்மை. வரலாற்றில் இல்லாத வகையில் 31 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரே ஓர் இந்திய அமைச்சர் ஒரு இந்திய துணையமைச்சர் என்ற நியமனத்தின் வழி அந்த அச்சத்திற்கான காரணத்தை வலுபெறச் செய்துள்ளது இந்த புதிய அரசாங்கம்.
இந்திய சமுதாயத்திற்கு நாடி வந்த-கிடைப்பதற்கரிய அங்கீகாரத்தை காரணமின்றி வலியச் சென்று தாரை வார்த்துள்ளது இந்தியர்களின் கட்சி என்று கூறிக்கொள்ளும் மஇகா. தங்களுக்கு ஓர் அமைச்சர் பதவி கிடைக்கின்றது என்பதற்காக ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்தை மத இனவாத கட்சிகளின் ஆதிக்கத்திற்கு அடமானம் வைத்து தாரைவார்த்துள்ளதா மஇகா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்துள்ளது. இந்த அரசியல் கபட நாடகத்தினால், இந்தியர்கள் இழந்தது இழந்ததுதான். இன்னும் ஒரு நூற்றாண்டுப் போராட்டத்திற்குப் பிறகும் அந்த அளப்பரிய அங்கீகாரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே!
மக்கள் குரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − three =