இந்தியர்களின் பிரதிநிதி மஇகா இல்லை!

0

பாரிசான் தோழமைக் கட்சியாக விளங்கிய மஇகாவுக்கு பெரிக்காத்தான் நேஷனல் நடப்பு பேரா அரசாங்கத்தில் நியமனப் பதவிகள் வழங்கப்
படவில்லை. இந்திய சமூகத்தின் தேவைகளுக் கும், இஸ்லாம் அல்லாதவர்களின் சமயம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால் அசுமு தாமே பிரதிநிதியாக இருக்கப் போகின்றார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி தருவதாக சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் அ.சிவ நேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பேரா மந்திரி பெசார் ஒரு மாநிலத்தை நடத்துகிறார். பாதுகாப்புக்கு பொறுப்பாளர். மாநில அரசாங்க இலாகாக்களுக்கு தலைமை ஏற்றுள்ள நிதித்துறை ஆட்சிக்குழுவுக்கு தலைவராக இருக்கிறார். செண்டிரியாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். 52 விழுக்காடு மலாய்க்காரர்களின் பிரச்சினைகளை முன்னெடுக்கும் மந்திரி பெசார் ஒருவரே பேராவில் உள்ள 48 சதவீதம் இஸ்லாம் அல்லாதவர்களின் சமய விவகாரத்திற்கு முறையாக சேவையாற்ற முடியுமா?.
இந்நிலையில், இந்திய சமூகத்தைச் சார்ந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மஇகா எதிர்பார்த்து காத்திருந்த இந்தியப் பிரதிநிதி மற்றும் மந்திரி பெசாரின் ஆலோசகர் பதவியை வழங்காமல் மஇகாவை கைவிட்டுள்ள அவர் அப்பொறுப்பை தானே வைத்துக் கொண்டுள்ளார் என்று சிவநேசன் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடந்த பாரிசான் ஆட்சியில் இஸ்லாம் அல்லாத சமய வளர்ச்சிக்கு வெ.40 லட்சம் ஒதுக்கப்பட்டன. ஆனால், பக்காத்தான் ஆட்சியில், அந்த தொகை வெ.100 லட்சமாக அதிகரிக்கப்பட்ட நிலையில், இஸ்லாம் அல்லாதவர்களின் மானியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதற்காக ஆட்சிக்குழுவில் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டார். அவருக்கு துணையாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினரான சிவசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார் என்றும் சிவநேசன் கூறினார்.
கடந்த 10.3.2020 இல் பக்காத்தான் ஹராப்பான் தனது 22 மாத ஆட்சியை இழந்த நிலையில், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சிக்கு மாமன்னர் வழிவிட்டார். அன்றைய நாள் முதல் இந்தியர்களுக்கான பிரதிநிதி வேண்டும் என பேரா மஇகா வலியுறுத்தி வந்துள்ளது. மேலும் இது குறித்து பல அறிக்கைகள் விடப்பட்டன. அத்தனையும் மந்திரி பெசாரின் காதுகளுக்கு எட்டாமல் போய்விட்டன என்றார் அவர்.
ஊத்தான் மெலிந்தாங், பாசீர் பாஞ்சாங் மற்றும் பேராங் சட்டமன்றங்களை அம்னோவுக்கு விட்டுக்கொடுத்துள்ள பேரா மஇகாவின் நியமனப் பதவிகள் என்பதும் கானல்நீர் என்றாகிவிட்டது. கடந்த காலங்களில், பேரா சட்டமன்ற சபா நாயகர்களாக, ஆர்.கணேசன், எஸ்.கே.தேவமணி மற்றும் எஸ்.தங்கேஸ்வரி இருந்துள்ள நிலையில் மந்திரி பெசாரின் ஆலோசகராக டத்தோ எஸ்.வீரசிங்கமும் மற்றும் டத்தோ வ.இளங்கோவும் நியமனம் பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜிஎல்சி எனப்படும் அரசுசாரா பதவியில்கூட மஇகா பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 2 =