இந்தியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு ‘SORRY’ என்றால் எல்லாம் முடிந்துவிடுமா?

இந்த நாட்டில் இருக்கின்ற இந்தியர்களை கிள்ளுக்கீரையாக கருதி ஜாதி அடிப்படையிலான மோசமான வார்த்தையைப் பேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு தாம் கண்டனம் தெரிவிப்பதாக செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த நாட்டின் வளப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பு என்ன என்பதை மற்ற தலைவர்களைக் காட்டிலும் இரண்டாவது முறையாக பிரதமராக வீற்றிருக்கும் துன் மகாதீருக்கு தெரிந்திருக்கும். இருந்தபோதிலும் எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் சகட்டு மேனிக்கு ’கெலிங், பறையா போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது இந்திய சமூகத்தின் உணர்வுகளை அவர் இழிவுபடுத்துவதற்கு சமமாகும்.
இந்த விவகாரம் இப்போது பூதாகரமாகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவர் ’சோரி (SORRY) என்று அறிக்கைவிடுவார். இந்தியர்களை எப்படி வேண்டுமானாலும் வெளுத்து வாங்கலாம், அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆனால் முடிவில் மன்னிப்பு என்ற ஒருவார்த்தையை மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். எல்லாம் மறக்கப்பட்டு விடும் என்று மகாதீர் போன்றவர்கள் நினைத்து வருகின்றனர். இங்குள்ள தலைவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து சத்தமில்லாமல் நம் நாட்டுக்குள் புகுந்து இங்குள்ளவர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டி குழப்பத்தை உண்டாக்கி முடிவில் ’மன்னிப்பு என்ற ஒருவார்த்தையில் தப்பித்துக் கொள்கின்றனர்.
இப்படி இன்னும் எத்தனை ’சோரிகளை நம் இந்திய சமுதாயம் ஏற்கும்.? எல்லாவற்றையும் மன்னிப்போம் மறப்போம் என்பது நாம் வாங்கி வந்த வரமா? இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். எது அவர்களைக் காயப்படுத்துமோ அதை முற்றாக ஒடுக்க என்பதை பிரதமர் முதலில் உணர வேண்டும். எதைப் பேசினாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துப் பேச வேண்டும். அதைவிடுத்து பேசி விட்டு ஒப்புக்காக ’சோரி என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டால் இனியும் இந்திய சமூகம் பொறுத்துக் கொண்டிருக்காது என்று ஓம்ஸ் தியாகராஜன் நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 19 =