இந்தியப் பெண்களைக் கேவலப்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

என்னையும் பல இந்தியப் பெண்களையும் மிக மோசமாகக் கேவலப்படுத்தி புலனத்தில் பேசிய தாய்க் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு நேற்று எச்சரித்தார்.
சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு யாரை வைத்திருக்கிறார் என்று உதயசூரியன் புலனத்தில் பழனி என்பவர் மிகக் கேவலமாகப் பேசியிருக்கிறார்.
ஈப்போ நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரனுடன் என்னைத் தொடர்புபடுத்தி இவர் மிகக் கேவலமாகப் பேசியிருப்பது புலனத்தில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது.
என்னை மட்டுமின்றி பல இந்தியப் பெண்களையும் இவர்கள் காலங்காலமாக வாய் கூசாமல் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்.
மஇகா எனும் தாய்க் கட்சியைச் சேர்ந்த இவர்கள், இப்படிப் பேசிக் கொண்டிருப்பது ஒரு கலாசாரமாகி விட்டது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமைத்துவத்திடம் முறையிட்டுள்ளேன்.
பழனி என்ற நபருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறேன். விரைவில் இவருக்கு எதிராக மானநஷ்ட ஈடு கோரி சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காமாட்சி தெரிவித்தார்.
யார், யாரை வைத்திருக்கிறார் கள் என்பதுதான் இவர்களின் ஆராய்ச்சியா? இவர்களது குடும்பத்திலும் அக்கா, தங்கை இல்லையா? இந்திய சமுதாயத்தை பிரதிநிதிக்கிறோம் என்று கூறிக் கொள்ளும் தாய்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் பெண்களைக் கேவலப்படுத்துவார்களா என்றார் அவர்.
செந்தூலில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய காமாட்சி, மஇகாவைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் எங்களை இப்படித்தான் பல காலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இவர்களின் ஆணவத்திற்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. பெண் குலத்தை அவமானப் படுத்திக் கொண்டிருக்கும் இவர்களை சட்டரீதியில் சந்திக்கத் தயாராகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜென், கலா ஆகியோர் கூறுகையில், நாங்கள் பக்காத்தான் ஆதரவாளர்கள் என்பதால், மஇகாவைச் சேர்ந்த இவர்கள் எங்களை மிகக் கேவலமாக புலனத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினரான காமாட்சியை கேவலமாகப் பேசும் இவர்கள், எங்களை எப்படிப் பேசியிருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் என இருவரும் பெரும் வேதனையுடன் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட காமாட்சி உட்பட இதர இந்தியப் பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் உட்பட பலரும் முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 6 =