இதற்காகவா ஆசைப்பட்டோம் பிரதமரே…?

ஒரு கணம் இந்தியர்கள் அதிர்ந்து குலுங்கினர் என்றே சொல்ல வேண்டும். எந்த வார்த்தையை கேட்கக் கூடாதோ… எந்த வார்த்தை காலங்காலமாக மலேசிய இந்தியர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைக்கிறதோ… அந்த வார்த்தையை ஒரு பிரதமரே பயன்படுத்துவார் என்று மலேசிய இந்தியர்கள் கொஞ்சம் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
இந்த நாட்டை முதல் தவணையாக 22 ஆண்டுகள் வழி நடத்திய ஒரு பெருந்தலைவர் அவர். 2ஆவது முறையாக 93 வயதில் ஆட்சி மாற்றத்திற்கும் அரசாங்க மாற்றத்திற்கும் தலைமை ஏற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்தவர் அவர்.

விசுவாசமற்றவர்கள் என்கிறார் எங்கிருந்தோ வந்தவர், முட்டாள்கள் என்கிறார் அமைச்சர்

இந்த ஆட்சி மாற்றத்திற்கும் அரசாங்க மாற்றத்திற்கும் இந்த நாட்டின் 3ஆவது பெரிய இனமாக இருக்கின்ற இந்தியர்களின் முக்கால்வாசி ஆதரவு கிடைத்தது என்று உறுதி செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறின.
எந்த வார்த்தை அந்த இந்திய சமூகத்தை காயப்படுத்துகிறதோ அதை மறந்தும் பயன்படுத்தக் கூடாது என்று மற்ற சமூகங்கள் இந்த நீண்ட நெடிய பயணத்தில் அறிந்துள்ளனர்.
அந்த வார்த்தை நிந்திக்கும் ஒரு ஜாதி நிந்தனைச் சொல். இத்தனைக்கும் அவர் சொன்ன அந்த வார்த்தைக்கும் அவர் குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள அரிய மண் தொழிற்சாலை மக்களுக்கு பெரும் சுகாதார கேட்டை விளைவிக்கிறது. அது அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள்.
இத்தனைக்கும் பக்காத்தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்த லைனாஸ் தொழிற்சாலைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வந்தது. இந்த ஆட்சியில் அதற்கு ஒரு முடிவு ஏற்படும் என்று மக்கள் நம்பினார்கள்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தத் தொழிற்சாலைக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. இது பற்றி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டபோது தான் பிரதமர் இந்த சொல்லை பயன்படுத்தினார்.
அதாவது, இந்தத் தொழிற்சாலையை குறிப்பாக முதலீட்டாளர்களை ஒரு பறையா போல் நடத்தினால், பிறகு இந்த நாட்டில் முதலீடு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள் என்று பிரதமர் சொன்ன அந்த வார்த்தை வலைத்தளங்களில் வலம் வந்தபோது மலேசிய இந்தியர்களே ஒரு கணம் அதிர்ந்து போயினர்.

ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படையாக இருந்த ஒரு சமூகத்திற்கு தரப்படுகின்ற பரிசா இது?

இந்த ஜாதி அவச்சொல் பிரதமர் வாயிலிருந்து வரலாமா? அவர் அப்படி சொல்லலாமா? இத்தனை அனுபவம் கொண்ட ஒரு பெருந்தலைவர் எந்தச் சொல் ஒரு சமூகத்தை ஊனப்படுத்தும்… காயப்படுத்தும் என்று தெரிந்தும் மிக சர்வசாதாரணமாக சொல்லிவிட்டாரே என்று இந்திய சமுதாயத்தின் எல்லா நிலைகளிலும் உள்ள மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். அதிருப்தி அடைகிறார்கள். பலர் கோபப்படுகிறார்கள். சிலரோ கொந்தளிக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு முறை இந்தியர்களை நிந்திக்கும் மற்றொரு சொல்லை சொல்லி அதற்காக மன்னிப்பு கேட்டவர் பிரதமர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர்கள் விசுவாசமற்றவர்கள் என்று எங்கிருந்தோ வந்த ஒரு மத போதகர் சொன்ன அந்த சுடு சொல்லிலிருந்து இந்திய சமுதாயம் இன்னும் விடுபடவில்லை. ஜாவியை தமிழ்ப்பள்ளியில் போதிப்பதை இப்போது ஒத்தி வையுங்கள். இது பற்றி விரிவாக பேசுவோம், விவாதிப்போம் என்று சொன்னதற்காக அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களை உள்ளடக்கிய செக்காட் என்ற அமைப்பினரை தற்பெருமை பிடித்த முட்டாள்கள் என்று நிந்திக்கிறார் இளைய அமைச்சர் சைட் சாடிக்.
அந்த அம்பு பாய்ந்த ரணத்திற்கு மேல் இன்னொரு அம்பாக பிரதமரே இந்த வார்த்தையை உதிர்த்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
இதற்காகவா ஆசைப்பட்டோம் பிரதமரே என்று சொல்லி மாளாமல் அழுகிறது இந்திய சமுதாயம். இந்த அழுகுரல் அரசின் காதில் விழுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 14 =