
இஸ்லாம் அல்லாத சமயங்களை அவமதித்ததாகக் கூறப்படும் இரண்டு மதபோதகர்கள் மீது குற்றம் சுமத்துவதற்குத் தாங்கள் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்று சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் நேற்று அறிவித்தது.
பெர்லிஸைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஸம்ரி வினோத் காளிமுத்து மற்றும் மல்டிரேஷல் ரிவேர்ட்டட் முஸ்லிம்கள் அமைப்பின் தலைவர் ஃபிர்டாவுஸ் வோங் வை ஹூங் ஆகியோர் மீது குற்றச்சாட்டைக் கொண்டுவர சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் விரும்பவில்லை. அவர்களுக்கு எதிரான வழக்குகள் மேல்விசாரணைக்கு உரியவை அல்ல என்று போலீசார் வகைப்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் என்று சட்டத்துறைத் தலைவரின் சார்பில் பேசிய துணை அரசு வழக்குரைஞர் (டி.பி.பி.) அய்னுல் அமிரா தெரிவித்தார்.
அவ்விருவரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஸக்கீர் நாய்க் என்பவருடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் எனக் கூறப்படுகிறது.
இஸ்லாம் அல்லாத சமயங்களையும் வழிபாட்டு முறைகளையும் அவமதித்தது தொடர்பில் ஸம்ரி மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவ்வழக்கின் வாதியான எஸ்.சசிகுமார் தெரிவித்தார்.
அது மேல் விசாரணைக் குரிய வழக்கு என்று போலீஸ் வகைப்படுத்தியிருப்பதால், அது குறித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்துறை அலுவலகம் விரும்பவில்லை என்று ஷாஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அய்னுல் குறிப்பிட்டார்.
அந்நபர்கள் மீது குற்றம் சுமத்துவதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று சசிகுமாரின் வழக்குரைஞர் டி.குணசீலன் தெரிவித்தார். குற்றவியல் விதிமுறைகள் சட்டத்தின் 133ஆவது பிரிவின்கீழ் அந்நபர்கள் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு கொண்டு வருவதற்கு சசிகுமார் ஏற்கெனவே விண்ணப்பம் செய்துள்ளார் என்றும் அவர் சொன்னார்.
நிந்தனைக்குரிய அறிக்கைகளை வெளியிட ஸம்ரிக்கும் ஃபிர்டாவுஸூக்கும் அரசாங்கம் அனுமதி அளித்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை டி.பி.பி.யின் நிலைப்பாடு காட்டுகிறது என்று சசிகுமார் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்வழக்கு விசாரணையின் முடிவை அறிந்து கொள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.