இசாவுக்காக பணம் சேகரிக்க எனக்கு ரிம.50,000 வரை கையூட்டு வழங்கப்பட்டது

முன்னாள் பெல்டா தலைவரின் சார்பாக பணத்தை சேகரித்த பின்னர் அவரது முதலாளி தனக்கு ரிம.10,000 முதல் ரிம.50,000 வரை வழங்கியதாக டான்ஸ்ரீ இசா சமாட்டின் முன்னாள் உதவியாளர் நேற்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2011 முதல் 2016 வரை இசாவின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய முஹம்மது ஸாஹிட் முகமட் அரிப், காகாசான் அபாடி புரோப்பர்ட்டிஸ் நிறுவனத்தில் இயக்குநராக இருந்த இக்வான் ஸைடாலிடமிருந்து ஒன்பது சந்தர்ப்பங்களில் பணத்தை ஜூலை 2014 முதல் டிசம்பர் 2015 வரை பல்வேறு இடங்களில் சேகரித்ததாகக் கூறினார்.
“டான்ஸ்ரீ இசா, இக்வானிடமிருந்து பணத்தை நான் அவருக்கு அனுப்பிய பின்னர் சில சந்தர்ப்பங்களில் அவரை அவரது அலுவலகத்தில் சந்திக்க என்னை அழைத்திருந்தார்.”
“அவர் என்னிடம் ‘இதோ! எடுத்துக் கொள்’ என்று சொல்லி எனக்கு ரிம.10,000 முதல் ரிம.20,000 வரை கொடுத்தார். சில நேரங்களில் அவர் என்னிடம் ரிம.50,000 வரை கொடுத்தார். ஆனால் நான் அதைக் கேட்கவில்லை,” என்று அவர் தனது சாட்சி அறிக்கையில் கூறினார்.
அஸிஸி அப்துல் வஹாப் என்ற நண்பர் மூலம் 2013 செப்டம்பரில் இக்வானுடன் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஸாஹிட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“கூச்சிங்கில் உள்ள மெர்டேக்கா அரண்மனை மற்றும் சூட்ஸ் ஹோட்டலை விற்க இக்வான் விரும்பியதால் அஸிஸி இக்வானை பெல்டாவில் உள்ள எனது அலுவலகத்தில் என்னைச் சந்திக்க அழைத்து வந்தார்.”
“நான் இசாவிடம் இந்த திட்டத்தைச் சமர்ப்பிப்பேன் என்று அவர்களிடம் சொன்னேன்,” என்று அவர் கூறினார்.
பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் சைட் அப்துல் ஜாலில் ஹோட்டல் வாங்குவதைத் தொடர முடிவு செய்துள்ளதாக 2014 மார்ச் மாதம் இக்வானால் அவருக்கு அறிவிக்கப்பட்டதாக ஸாஹிட் கூறினார். இருப்பினும், இக்வான் மற்றொரு வழி முறையில் ஹோட்டலை விற்க முயற்சிக்க விரும்புவதாக ஸாஹிட் கூறினார்.
அதே மாதத்தில் ஏதோ ஒரு கட்டத்தில், இசா ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்ற பின்னர், ஹோட்டலை வாங்குவதற்கான தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பெல்டாவிடம் அப்போதைய பிரதமர் கேட்டுக் கொண்டதாக ஸாஹிட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“அதைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இசா குறிப்பிடும் நபர் பிரதமர் நஜிப் ரசாக்” என்று ஸாஹிட் மேலும் கூறினார்.
ஹோட்டல் வாங்குவதை மறுபரிசீலனை செய்வது குறித்து சைட்டும் இதே விஷயத்தை அவரிடம் கூறியதாக ஸாஹிட் கூறினார்.
“என்ன செய்வது, இது பிரதமரின் உத்தரவு, நாம் அதைப் பின்பற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார். இக்வானை அழைத்து அவருக்குத் தம் வாழ்த்துதலைத் தெரிவிக்குமாறு இசா உத்தரவிட்டார் என்றும் ஸாஹிட் கூறினார். “இது ஒரு சாதாரண ‘வாழ்த்து’ அல்ல, அரசியல் நிதியுதவி பெற இக்வானை அழைக்க டான்ஸ்ரீ என்னிடம் கேட்டார்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக இக்வான் நீதிமன்றத்தில் இசாவுக்கு ரிம.3.09 மில்லியனை செலுத்தியதாக ஸாஹிட் மூலம் இசாவின் ‘வாழ்த்துகளை’ அவருக்கு அனுப்பிய பின்னர் கூறினார். உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன் விசாரணை தொடர்கிறது.
ஏப்ரல் 29, 2014 மற்றும் டிசம்பர் 11, 2015க்கு இடையில் மெனாரா பெல்டா, பிளாட்டினம் பார்க், பெர்சியாரான் கே.எல்.சி.சி, கோலாலம்பூரில் ஆர்எம்.3 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாக இசா குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், லஞ்சத் தொகையை விட ஐந்து மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − ten =